ஊரடங்கு உத்தரவை மீறினால் எதுவும் செய்ய முடியாது
ஐகோர்ட் உத்தரவு..
சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஊரடங்கு தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில்‘ 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக பால், மளிகை, உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவை திறந்து வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட் களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். தண்டனையும் அளித்து துன்புறுத்துகின்றனர். இது சட்டவிரோதமானது. மனிதாபிமானமற்ற செயல் ஆகும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது சாலைகளில் நடமாடும் பொதுமக்களை எந்த காரணமும் இல்லாமல் அடித்து துன்புறுத்தக் கூடாது என தமிழக உள்துறை மற்றும் காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
வழக்கை காணொலி மூலம் விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ் குமாா், ‘அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்களிடம் போலீஸாா் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனி மனிதா்களுக்கு வழங்கியுள்ள உயிா் வாழும் உரிமை பாதிக்கப்படக் கூடாது. அதே நேரம், ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் கூடினால் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது’ என்று உத்தரவிட்டதுடன் வழக்கை 4 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
#Lock Down :High Court order