படம்: பிழை
நடிப்பு: சின்ன காக்க முட்டை ரமேஷ், அப்பா நசாத், கோகுல், ராகவேந்திரா, மைம் கோபி, சார்லி, ஜார்ஜ், கல்லூரி வினோத், எலயா, மனிஷாஜித், பரோட்டா முருகேசன்
தயாரிப்பு:ஆர்.தாமேதரன்
இசை:எப்.எஸ்.பிசல்
ஒளிப்பதிவு:பால்கி
டைரக்ஷன்: ராஜவேல் கிரிஷ்ணா
கிராமத்தில் கல் உடைக்கும் தொழிலாளிகள் சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் ஆகியோரின் மகன்கள் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். வகுப்பில் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தாலும் படிப்பில் ஜீரோவாக இருக்கின்றனர். இதனால் தந்தையர் அவர்களை கண்டிக்கின்றனர். அடி தாங்க முடியாமல் நண்பர்கள் மூவரும் ஊரைவிட்டு ஓடுகின்றனர். கையில் காசில்லாமல் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு தப்பித்து ஓடி வரும் மூன்று பேரையும் மற்றொரு ஓட்டல் ஓனர் மீட்டு தன் ஓட்டலில் வேலை தருவதாக அழைத்துச் செல்கிறார். அங்கு சென்றபிறகுதான் சம்பளமில்லாமல் செய்யும் அடிமை வேலை என்பது அவர்களுக்கு தெரிகிறது. மூவரையும் கண்காணித்து வரும் ரவுடி அடித்து சித்ரவதை செய்கிறான். மூன்று நண்பர்களில் ஒருவன் காணாமல்போக மற்ற இருவர் தந்திரமாக தப்பித்து வருகின்றனர். வேறு ஊரில் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேைல செய்கின்றனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் ஊர் திரும்பினார்களா? காணாமல்போன சிறுவனின் நிலை என்ன என்பதற்கு உருக்கமாக பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
1980 மற்றும் 90களின் பின்னணியில் அமைந்திருப்பதுபோல் பள்ளிக்கூட காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது ரசிக்கத்தக்கது. நண்பர்கள் ரமேஷ், நஸாத், கோகுல் மூவரும் பள்ளி யூனிபார்ம்போட்டுக் கொண்டு அடிக்கும் லூட்டி சிரிக்க வைக்கிறது. வகுப்பாசிரியர்போல மிமிகிரி செய்தும், தன்னை கிண்டல் செய்பவரை அடித்து துவைப்பதுமாக ஜமாய்க்கிறார் குட்டிபையன் நஸாத். நல்லா படிக்கறவங்களுக்கு 100 மார்க், ரொம்ப நல்லா படிக்கறவங்களுக்கு 156 மார்க் என்று தந்தை ஜார்ஜிடம் மாற்றிக்கூறி மார்க் ஷீட்டில் கையெழுத்த வாங்கும் நஸாத் மீண்டும் ஒரு அரட்ைட கச்சேரி நடத்துகிறார். ரமேஷ், கோகுல் இருவரும் தந்தையிடம் அடிக்கு பயந்து நடுங்குவதும் பின்னர் அதை துடைத்துப்போட்டுவிட்டு மீண்டும் குறும்புத்தனங்களில் ஈடுபடுவதுமாக யதார்த்தமான அனுபவத்தை தருகின்றனர்.
மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் மூவரும் சராசரி தந்தைகளாக கண்முன் நிழலாடுகின் றனர். எம் புள்ள டாக்டராயிடுவான் என்று அப்பாவித்தமாக முணுமுணுக்கும் ஜார்ஜ், படிப்புதான் உங்களை காப்பாற்றும் என்று பிள்ளைகளுக்கு அட்வைஸ் செய்யும் சார்லி, மைம்கோபியும் படிக்காமல் தாங்கள் படும் அவஸ்தையை வசனங்களால் பதியம் போடுகின்றனர்.
கிராமம், பள்ளி என்று அட்வைஸ் மயமாக இல்லாமல் ஊரைவிட்டு ஓடும் மாணவர்கள் எப்படியெல்லாம் தெரியாதவர்களிடம் சிக்கி அவதிப்படுகிறார்கள் என்பதை காட்சிகளாக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா படமாக்கியிருப்பது நல்லதொரு பாடம். இப்படியொரு பாடத்தை படமாக தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஆர்.தாமேதரன் தரமான தயாரிப்பாளர் என்ற முத்திரையை பதித்துக்கொள்கிறார்.
பால்கியின் ஒளிப்பதிவு இயற்கை. எப்.எஸ்.பிசல் இசையில் 2 பாடல்கள் இதமாக தழுவுகிறது.
பிழை- பிள்ளைகள், தந்தையர் செய்யும் பிழையின் விளைவுகளை அலசியிருக்கிறது.