படம்: வரிசி
நடிப்பு: கார்த்திக் தாஸ், சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, அவிஸ் மனோஜ், ஜெயஸ்ரீ, கணேஷ், பாலாஜி ராஜசேகர், மதுமிதா, அனுபமா குமார்
தயாரிப்பு: ரெட் ப்ளிக்ஸ் பிலிம் பேக்ட்ரி, முயற்சி படைப்பகம்
இசை: நந்தா
ஒளிப்பதிவு: மிதுன் மோகன்
இயக்கம்: கார்த்திக் தாஸ்
பி ஆர் ஓ : விஜயமுரளி, சத்யா
இளைஞர்கள் பெருமளவு திரையுலகுக்கு புதிய படைப்புகளை தந்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் வரிசி படம் ஒரு மாறுபட்ட படைப்பாக வந்திருக்கிறது. வரிசி என்றால் தூண்டில்.
அர்ஜூன், அக்ஷயா, இருவரும் சிறுவயது முதல் ஆதரவற்றோர் பள்ளியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர். அக்ஷ்யா ஐ டி கம்பெனியில் வேலை செய்கின்றார். அர்ஜீன் தாஸ் கம்ப்யூட்டரில் பல புதிய செயலிகளை கண்டுபிடிக்கிறான். இந்நிலையில் நகரில் ஐடி பெண்கள் காரில் கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்படுகின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. ஒரு கட்டத்தில் அக்ஷயா கடத்தப்படுகிறார். இந்த தகவல் காதலன் அர்ஜூனுக்கு தெரியவர அவரை உயிரோடு விடச் சொல்லி கடத்தல்காரனிடம் கதறுகிறான் அர்ஜூன். அக்ஷயாவை மானபங்கப்படுத்தும் அவன் கழுத்தையும் அறுக்கிறான். தான் கண்டுபிடித்த புதிய செல்போன் செயலி மூலம் அக்ஷயா இருக்கும் இடத்துக்கு அர்ஜூன் வருகிறான் அக்ஷயா கொலை பற்றி எந்த செய்தியும் டிவியில் வராததால் அந்த இடத்துக்கு கடத்தல்காரன் மீண்டும் வருகிறான். அவனை அர்ஜூன் சுற்றிவளைத்து பிடிப்பதுடன் அக்ஷயாவை மானபங்கப்படுத்திய தற்காக விஞ்ஞான முறையில் சித்ரவதை செய்து பழி வாங்கு கிறான். இந்த தகவல் சிபிஐ அதிகாரிக்கு தெரியவர அவர் அர்ஜூனை விசாரிக்கிறார். இதன் முடிவு என்ன? கடத்தல்காரன். அக்ஷயா என்ன ஆனார்கள் என்பதற்கு படம் ஆச்சர்யமான விடை அளிக்கிறது.
அர்ஜுன் பாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்திக் தாஸ் இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார். அவரது காதலி அக்ஷயாவாக சப்னா தாஸ் நடித்துள்ளார். தொடக்கம் முதலே இதுவொரு வித்தியாசமான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.
கைகளிலேயே சிப் பொருத்திக்கொண்டு கம்ப்யூட்டர் மாயா ஜாலங்கள் காட்டும் கார்த்திக் தாஸ் எதார்த்தமான நடிப்பின் மூலம் மெல்ல மெல்ல மனதில் இடம் பிடிக்கிறார். ஒரே அறையில் இருந்தாலும் சப்னா தாஸிடம் காதலி என்ற முறையில் முத்தம் தவிர வேறு அதிக பிரசங்கித் தனம் செய்யாமல் கண்ணியமான காதலாக காட்சிகள் சித்தரிக்கப்படடிருப்பது அருமை. சிறுவயது நட்பு என்றாலும் லிப் டு லிப் முத்தத்துக்குக்கூட இடம் தராமல் சப்னா தாஸ் நடித்திருப்பதும் அழகு.
உண்மையான காதல் உள்ளத்தில்தான் இருக்கிறது உடலில் இல்லை என்ற உண்ர்வுகளை இருவருமே மனதில் கொண்டிருப்பது சப்னா தாஸை கடத்தல்காரன் கடத்தி சென்று மிரட்டும்போது வெளிப்படுகிறது ”அவள் உடல்தானே வேண்டும் ஆனால் அவளை கொன்றுவிடாதே அவளுடன் நான் வாழ வேண்டும்” என்று கார்த்திக் தாஸ் அழுவதும் அதேபோல் சப்னா தாஸும் சொல்வது நெகிழ வைக்கிறது.
கடத்தல்காரன் யார் என்பதை யூகிக்க முடியாத நிலையில் அவரை காட்டும் காட்சியில் அதிர்ச்சி பரவுகிறது. கடத்தல்காரன் வேடத்தில் நடித்திருக்கும் பாலாஜி ராஜசேகர் அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு உலா வருவது கதாபாத்திரத்தின் சஸ்பென்சை காக்க உதவி இருக்கிறது.
சிபிஐ அதிகாரியாக வரும் கிருஷ்ணா இயல்பாக நடித்திருக்கிறார். 2வது ஹீரோ அவிஸ் மனோஜும் உணர்வு பூர்வமாக நடித்து கவர்கிறார். அனுபமாகுமார் அனாதை விடுதியின் காப்பாளராக உருக வைக்கிறார்.மதுமிதா அவ்வப்போது சிரிப்பு தூறல் தூவுகிறார்.
ஒளிப்பதிவாளர் மிதுன் மோகன் சிறப்பான கைவண்ணத்தை காட்டியிருக்கிறார். நந்தா இசையில்5 பாடல்கள் காற்றோடு இழையோடுகிறது. வரிசி வரிசி பாடல் படத்தின் கருவை மையமாக கொண்டு ஒலிக்கிறது.
ரெட் ப்ளிக்ஸ் பிலிம் பேக்ட்ரி சந்திரசேகர் எம்., முயற்சி படைப்பகம் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
ஆங்கில பட பாணியில் திரைக்கதை அமைத்து படத்தை ஆர்வம் குன்றாமல் கடைசிவரை இயக்கி இருக்கிறார் கார்த்திக் தாஸ்
வரிசி – இந்த தூண்டில் இளவட்டங்களை சுண்டி இழுக்கும்.