சாட்டை படத்தில் பள்ளிக்கல்வியின் சீர்திருத்தங்களை நோக்கி சாட்டையைச் சுழற்றிய சமுத்திரக்கனி, கல்லூரிக்குள் புகுந்திருக்கும் சாதிக்கு எதிராக அடுத்த சாட்டையை சுழற்றி இருக்கிறார். தனியார் கல்லூரிக்குள் இரு சாதி மாணவர்கள் தங்கள் சாதிக் கயிற்றை கட்டிக்கொண்டு அழிச் சாட்டியம் செய்கிறார்கள். அந்த கல்லூரிக்கு தமிழ் பேராசிரியராக வரும் சமுத்திரக்கனி, மாணவர்களை சாதியில் இருந்து வெளியில் கொண்டு வந்து ஒற்றுமைப்படுத்த முயற்சிப்பதோடு, கலை அறிவியல் கல்லூரியிலும் கேம்பஸ் இன்டர் வியூ கொண்டு வருகிறார்.
எப்படி இது சாத்தியம் என்பதுதான் கதை. சாட்டை படத்திலேயே கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்ட இயக்குனர் அன்பழகன், இந்தப் படத்திலும் அதை செவ்வனே செய்துள்ளார். என்றாலும், சாட்டையில் இருந்த சினிமா நயம் மிஸ்சிங். காட்சிகள்மற்றும் வசனங்கள் நெருப்பாகவே இருக்கிறது என்றாலும், பிரச்சார நெடி வீசுவதால், ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற அனுபவத்தை பெற முடியவில்லை. இப்படத்தில் முழுக்க, முழுக்க மாணவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், கொஞ்சம் சுவாரஸ்யம் பக்கம் திருப்ப சமுத்திரக்கனியின் காதலும், கல்யாணமும் திணிக்கப் பட்டு இருக்கிறது.
என்றாலும் கூட, அதை மட்டும் தனித்து பார்த்தால் அழகான கவிதை. கல்லூரியில் நடக்கும் பேராசிரியரின் பிரிவுபசார விழா எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றி விடுகிறது. கல்லூரிக்குள் மாணவர்கள் பிரதமர், ஜனாதிபதி என்று தங்களை கருதிக்கொண்டு நடத்தும் ‘மாணவர் பாராளுமன்றம்’ ஆச்சரியப்பட வைக்கிறது. சமுத்திரக்கனி வழக்கமான மிடுக்குடன் வருகிறார். சீனுக்கு சீன் அட்வைஸ் பண்ணுகிறார்.
தமிழ் புரொபசர்னா வேட்டிய கட்டிக்கிட்டு, கக்கத்துல புத்தகம் வெச்சுக்கிட்டு அலைகிறவர்னு நினைச்சியா? கம்பராமாயணம் படிக்கவும் தெரியும், கம்பு எடுத்து அடிக்கவும் தெரியும் என்று பன்ச் டயலாக் பேசுகிறார். நடப்பு அரசியல் மற்றும் செக்ஸ் கல்வி குறித்த வசனங்களை மியூட் செய்திருக்கிறார்கள், தணிக்கை துறையை சேர்ந்த அதிகாரிகள். சாதி வெறி பிடித்த மாணவனாக யுவன், நியாயத்துக்குப் போராடும் மாணவியாக அதுல்யா ரவி வந்து நிறைவாக நடித்து இருக்கின்றனர்.
உயிர் பலியாகி அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார் கவுசிக். தம்பி ராமய்யா சாட்டையில் செய்திருந்த அட்ராசிட்டியை, அடுத்த சாட்டை படத்திலும் தொடர்ந்து இருக்கிறார். கல்லூரி முதல்வர் ஆக துடிக்கும் பிச்சைக்காரன் மூர்த்தி மற்றும் பேராசிரியர் கே.பி.மோகன் கவனம் ஈர்க்கின்றனர். ராசாமதி ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும் அடுத்த சாட்டைக்கு கை கொடுத்துள்ளது. குறிப்பாக, ‘வேகாத வெயிலிலே…’ என்ற பாடல் இதயத்தை உருக வைக்கிறது. நாடகத்தன்மையோடு இருந்தாலும் கூட, நல்ல கருத்தை பேசியிருக்கிறது படம்.