படம்: ரைட்டர்
நடிப்பு: சமுத்திரக்கனி, இனியா, லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், சுப்ரமணியம் சிவா, ஜி.எம்.சுந்தர், கவிதா பாரதி, ஆண்டனி, லார் லேமுவேல், லக்கி குமார், திலீபன், போஸ் வெங்கட்,
தயாரிப்பு:பா.ரஞ்சித், அபையான்ந்த் சிங், பியூஷ் சிங், அதிதி ஆனந்த்
இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா
இயக்கம்: ஃபிராங்ளின் ஜேக்கப்
பி ஆர் ஒ: ரியாஸ் அஹமத், குணா
போலீஸ் நிலையத்தில் ரைட்டராக பெரும்பகுதி சர்வீஸையும் முடிக்கும் நிலையிலுள்ள தர்மராஜ் (சமுத்திரக்கனி) கடைசி சில மாதங்கள் சர்வீஸ் இருக்கும் நிலையில் போலீஸ்காரர்களுக்கு யூனியன் வேண்டும் என்ற வழக்கை கையிலெடுத்து கோர்ட்டில் போராடுகிறார். இது உயர் அதிகாரிக்கு பிடிக்காத நிலையில் அவரை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்கின்றார். பனிஷ்மெண்ட் டிரான்ஸ்பரில் புது போலீஸ் நிலையத்தில் வந்து வேலையில் இணைகிறார். அங்கு அவருக்கு ரைட்டர் பதவி தராமல் பாரா டூட்டி போடப்படுகிறது. சட்டப்படி இல்லாமல் இளைஞர் ஒருவரை பிடித்து வைத்திருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த இளைஞரை லாக்கப்பில் வைக்காமல் கல்யாண மண்டபத்தில் உள்ள அறையில் அடைத்து வைக்கிறார். அவனுக்கு காவல் வேலையை தர்மராஜ் செய்கிறார். எதற்காக அவனை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கும் நிலையில் அவன் மீதான குற்றம்பற்றி அறிந்து அவனுக்கு உதவ எண்ணுகிறார் தர்மராஜ். ஆனால் போலீஸ் உயர் அதிகாரி இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால் தர்மராஜால் பெரிதாக உதவ முடியாத சூழல் உள்ளது. ஆனால் சட்டவிரோதமான இந்த செயல்பற்றி பத்திரிக்கையில் செய்தி வெளியாகிறது. இது உயர் அதிகாரிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இளைஞனை தேசிய விரோத நடவடிக்கை சட்டத்தில் கைது செய்திருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது, ஆனால் பி எச் டி படிக்கும் மாணவரான தான் எந்த தவறும் செய்ய வில்லை என்று இளைஞன் கதறுகிறான். இதையடுத்து அவன் ஜாமினில் வெளிவருவதற்கு தர்மராஜ் உதவுகிறார், தனக்குதெரிந்த வக்கீலை நியமிக்கச் சொல்கிறார். வக்கீல் ஒரு பக்கம் போராட மறுபக்கம் போலீஸ் இளைஞனை சிறையில் அடைக்க துடிக்கிறது. இறுதியில் நடப்பது என்ன என்பதை படம் விளக்குகிறது.
பா.ரஞ்சித் இயக்கும் படமென்றாலும் அவர் தயாரிக்கும் படமென்றாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை அம்பலப்படுத்தும் படமாக இருக்கும் அந்த பட்டியலில் இந்த படமும் இணைகிறது. ஆனால் இப்படத்திற்காக கையாளப்பட்டி ருக்கும் களம் முற்றிலும் புதிது.
போலீஸ் அதிகாரிகள் கீழ் அதிகாரிகளுக்கு எப்படிப்பட்ட மன அழுத்தங்கள் உயர் அதிகாரிகளால் தரப்படுகிறது. இதனால் சிலர் தற்கொலையும் செய்துக்கொள்கின்றனர் என்ற உண்மை கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அம்பலத்துக்கு வருகிறது.
மனித தன்மையுடன் நடந்துகொள்ளும் ரைட்டர் தர்மராஜ் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி வாழ்ந்து காட்டி இருக்கி றார். எந்த கதாபாத்திரத்துக்குள்ளும் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் சமுத்திரக்கனி அதையே இப்படத்திலும் செய்திருக்கிறார்.
போலீஸ் யூனியன் கேட்டு கோர்ட்டுக்கு செல்லும் சமுத்திரக்கனியை உயர் அதிகாரி போஸ் வெங்கட் அழைத்து கடுமையாக கண்டிப்பதும் ஒரு கட்டத்தில் சமுத்திரக் கனியை கன்னத்தில் பளாரென அறைவதுமாக காட்சியில் அனல் கொப்பளிக்கிறது. ஆனால் கன்னத்தில் அறை வாங்கியதை அப்படியே கழுவிவிட்டு வந்து அடுத்த வேலையை பார்க்க சமுத்திரக்கனி ஆயத்தமாவது கதாபத்திரத்தின் பொறுமையை மேம்படுத்திக்காட்டுகிறது.
தனது காவலிலிருக்கும் இளைஞன் தப்பி ஓடும்போது அவனை துரத்திப்பிடிக்க சமுத்திரக்கனி வயதையும் மீறி ஓடிச் சென்று ஒருவழியாக பிடித்து அவனது கன்னத்தில் அறை கொடுப்பதும் பின்னர், தன்னுடைய சர்வீஸில் கைநீட்டி அடித்தது உன்னைத்தான் என்று அவனிடம் பேசி சமாதானம் செய்வது என காட்சிகளில் எதார்த்தத்தை இழையோடச் செய்கிறார்.
படத்தில் மிரட்டும் கதாபாத்திரம் என்று உதவி கமிஷனாராக வரும் கவின் ஜெய்பாபுவைத் தான் சொல்ல வேண்டும். வட இந்தியர்போல் அவர் பேசும் இந்தி கலந்த தமிழும், இன்ஸ் பெக்டர் முதல் எல்லோரையும் விரட்டி வேலை வாங்கும் தோரணையுமாக படுபாதக வில்லனாக கண்முன் நிற்கிறார்.
பரிதாபத்துக்குரிய பாத்திரமாகி உருக வைக்கிறார் ஹரிகிருஷ்ணா. போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டு எதற்காக கைது செய்யப்பட்டோம் என்பதுகூட தெரியாமல் தன்னை விட்டுவிடும்படி கொஞ்சி கதறி மன்றாடும் போது கண்கலங்க வைக்கிறார். இன்ஸ்பெக் டராக கவிதா பாரதி நடித்திருக்கிறார்.
ஹரிகிருஷ்ணனின் அப்பாவித்தனமான அண்ணனாக வரும் சுப்ரமணியம் சிவா தம்பி மீது பாசத்தை கொட்டி கதறுவதும் எப்படியாவது அவனை சிறையிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்று வக்கீலுடன் சேர்ந்து அல்லாடுவதும் என மறக்க முடியாத பாத்திரமாக நெஞ்சில் இடம் பிடிக்கிறார்.
கிளைமாக்ஸ் நெருக்கத்தில் வருகிறார் இனியா. போலீஸில் குதிரைப்படை பிரிவில் சேர வேண்டும் என்ற கனவில் அவர் செய்யும் முயற்சிகள் அதன் பொருட்டு உயர் அதிகாரியால் ஏற்படும் அவமரியாதை என கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து தன் இருப்பிடத்தை தக்க வைக்கிறார்,
கோவிந்த் வசந்தா இசையும், பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உரம் சேர்க்கிறது
ஃபிராங்ளின் ஜேக்கப் இப்படியொரு கதையை உருவாக்க செய்த ஆராய்ச்சிகளுக்கு பி எச் டி பட்டம் தரலாம்.. எண்ணியதை எண்ணியதுபோலவே காட்சிப்படுத்தி பல போலீஸ் ரகசியங்களை அம்பலப் படுத்தி இருக்கிறார்.
ரைட்டர் – சொல்ல மறந்த கதைகளில் சொல்லப்பட வேண்டிய கதை.
by
க.ஜெயச்சந்திரன்