வேளாண் சட்டம் வாபஸ்: ஜனநாயகத்தின் வெற்றி என மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநில செயலாளர் ஜி.ம்யில்சாமி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
`விவசாயிகளின் நலனுக்காக’ என்ற பெயரில் விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம், வணிகத்தை மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை உருவாக்கித் தருதல் சட்ட மசோதா, விவசாயிகளுக்கு விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மூன்று வேளாண் சட்டங்களும் கடந்த 2020 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள், இச்சட்டத்தினை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
தங்களுக்கான உரிமையை எப்படியாவது போராடிப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் விவாயிகள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளும் டிராக்டர்களிலும், பேருந்துகளிலும், கார்களிலும் டெல்லியை நோக்கிச் சென்றனர்.
டெல்லி ஸ்தம்பித்துப்போனது! கண்ணீர்புகைக் குண்டு வீசுதல், தண்ணீரைப் பீய்ச்சியடித்தல், தடுப்புகள் வைத்தல் போன்ற பல தடைகளைக் கடந்து, 15 டிகிரி கடும் குளிரிலும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டக் களத்தில் மனஉறுதியுடன் போராடினர்.
இந்த அறவழிப் போராட்டத்தில், சுமார் 750 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர். விவசாயிகளின் ஓராண்டிற்கும்மேலான தொடர் போராட்டத்தினால் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது மிகச் சரியான முடிவு. மக்கள் நீதி மய்யம் இதை வரவேற்கிறது.
`சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்…’ என்று சொன்னார் திருவள்ளுவர். உலகம் இயங்குவதற்கு இன்றைக்கும் முதன்மையான காரணமாக இருப்பவர்கள் விவசாயிகள். `இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்’ என்றார் காந்தி. ஆனால் விவசாயிகளின் முதுகெலும்பையே இல்லாமல் செய்ய உத்தேசித்த அரசினை, தங்கள் உறுதியான போராட்ட குணத்தினால் வென்றிருக்கிறார்கள் விவசாயிகள்.
மக்களுக்கு எதிராக அரசு செயல்பட்டால், அதை எதிர்த்து தங்களது உரிமைகளை நிலைநாட்ட எந்த அளவிற்கும் செல்வோம் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் விவசாயிகள். அறப்போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரலும் ஒலித்தது என்பது மகிழ்ச்சிக்குரியது.
இப்போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகத்திற்குத் தலைவணங்குகிறேன். இதுவே மக்களாட்சியின் வலிமை. கடும் இன்னல்களுக்கு இடையில் துணிச்சலுடன் களத்தில் நின்று போராடி இதைச் சாத்தியப்படுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துகளும்!
iஇவ்வாறு ஜி மயில்சாமி கூறி உள்ளார்.