படம்: வினோதய சித்தம்
நடிப்பு: சமுத்தரக்கனி, தம்பிராமையா, சஞ்சிதா,
தயாரிப்பு: அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன்
ஒளிப்பதிவு:ஏகாம்பரம்
இசை: சத்யா
இயக்கம்: சமுத்திரக்கனி
மனைவி, 2 மகள்கள், மகன் என குடும்பத்தை நிர்வகிக்கும் தம்பி ராமையா நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். நேரம் காலம பார்க்காமல் உழைக்கும் அவர் நேரமில்லை நேரமில்லை என்று சொல்லியபடி எல்லா செயலையும் விரைந்து செய்கிறார். அலுவலக விஷயமாக வெளியூர் சென்றுவிட்டும் விமானத்தில் திரும்ப திட்டமிடுகிறார். விமான டிக்கெட் சரியாக அமையாததால் இரவோடு இரவாக காரில் புறப்படுகிறார். சீட் போட்டு அமரும்படி டிரைவர் பல முறை சொல்லியும் அதை கேட்க மறுக்கிறார் திடீரென்று கார் விபத்தில் சிக்குகிறது. இதில் தம்பி ராமையா உயிரிழக்கிறார். அவரது ஆன்மா வேறு உலகத்துக்கு பயணப்படும் சூழலில் நேரம் (டைம்) உருவில் வரும் சமுத்திரக்கனி அவரை அழைக்கிறது. தான் இறந்துவிட்டதையே நம்ப மறுக்கும் தம்பி ராமையா பின்னர் அதை உணர்கிறார் தன்னுடைய கடமைகளை முழுவதுமாக நிறைவேற்றாமல் உயிரிழந்துவிட்டதால் இன்னும் சில காலம் உயிருடன் வாழ அனுமதிக்கும்படி சமுத்திரக்கனியிடம் கேட்கிறார். 3 மாதம் அதாவது 90 நாட்கள் உயிருடன் இருக்க அவகாசம் தருகிறார். அந்த நாட்களுக்குள் அவரால் தனது கடமைகளை தான் எண்ணியபடி நடத்த முடிகிறதா என்பதை அனுபவபூர்வமாக கிளைமாக்ஸ் விளக்குகிறது.
எதார்த்தமான வாழ்வியல் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு ஆனால் இப்படம் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த அளவே நடிகர், நடிகைகள் என்றாலும் எல்லோருமே கதைக்கு முக்கிய பாத்திரங்களாக அமைந்திருக்கின்றனர். குறிப்பாக பரசுராம் என்ற பிரதான பாத்திரத்தில் தம்பி ராமையா நடித்திருக்கிறார்.
டிப்டாபாக உடை அணிந்து கம்பீரமாக அவர் அலுவலகத்துக்கு புறப்படுவதில் தொடங்கும் நடிப்பை பல வித பரிமாணங்களில் கிளைமாக்ஸ் வரை வெளிப்படுத்தி இருக்கிறார். கார் விபத்தில் இறந்து விட்டதை நம்ப மறுக்கும் அவரது ஆன்மா நேரமாகவரும் சமுத்திரக்கனியிடம் வாக்கு வாதம் செய்வது பரபரப்பு. தான் இறந்துவிட்டோம் என்பதை உணரும் ஆன்மா மீண்டும் தனக்கு வாழ அவகாசம் கேட்டு சமுத்திரக்கனியிடம் கேட்கும்போது உருக வைக்கிறார்.
90 நாட்கள் கூடதலாக வாழலாம் என்ற அனுமதியுடன் மீண்டும் உயிர்பெற்று வந்த பிறகு அவரது நடிப்பின் வேகம் இன்னமும் அதிகரிக்கிறது. மகள் சஞ்சிதாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் தம்பி ராமையா அதற்கான ஏற்பாடுகள் செய்யும்போது,”அப்பா நான் வேற ஒருத்தர விரும்புறேன்” என்று சஞ்சிதா சொல்வதைக் கேட்டு தம்பிரமையா பதறுவது நெஞ்சை சோகத்தில் ஆழ்த்துகிறது. சஞ்சிதா தான் காதலனுடன் சென்றுவிட்டார் என்றாலும் மகன் தன் பேச்சை தட்ட மாட்டான் என்று தம்பி ராமையா எண்ணி அவனிடம் பேசும்போது அவன் வெளிநாட்டு பெண்ணை திரும்ணம் செய்து வந்து ஜோடியாக கண்முன் நிற்பதை கண்டு தம்பி ராமையா ஆவேசப்பட்டு அதிர வைக்கிறார்.
தம்பி ராமையா எங்கு சென்றாலும் அவருடனே ஒட்டிக்கொண்டு எல்லா இடத்துக்கும் செல்லும் சமுத்திர்கனியின் கதாபாத்திரம் அடிக்கடி பஞ்ச் வசனங்கள் பேசி வாழ்வின் எதார்த்த்தை மாற்றி அமைக்கிறார்.
ஸ்ரீரஞ்சனி, ஜெயபிரகாஷ், ஞானவேல், சஞ்சிதா ஷெட்டி, உள்ளிட்டோரின் நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது.
செய்தவினைகளுக்கு ஏற்ப பலாபலன்கள் வாழும் நாட்களிலேயே கிடைக்கிறது என்பதையும் பல காட்சிகள் உணர்த்துகின்றன. இப்படம் யார்த்தபிறகு எல்லோருக்கும் வாழ்வின் நிஜம் புரியும்.
அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் இனைந்து டிஜிட்டல் சினிமாவாக இதனை தயரித்திருக்கின்றனர் அர்த்தம் பொதிந்த படத்தை இயக்கி உள்ளார் சமுத்ரக்கனி. சி.ச்த்யாவின் இசையும் ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சில காட்சிகளில் ரசிகர்களை அமானுஷய உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.
வினோதய சித்தம்- வாழ்க்கையின் உட்பொருள்..