படம்: டெஸ்ட்
நடிப்பு: மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின்
தயாரிப்பு: சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் சசிகாந்த்
இசை : சக்தி ஸ்ரீ கோபாலன்
ஒளிப்பதிவு: விராஜ்
இயக்கம்: சசிகாந்த்
ரிலீஸ்: நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளம்
பிஆர்ஓ: நிகில் முருகன்
வசதியற்ற குடும்பத்தில் பிறந்து ஹைட்ரோ பெட்ரோல் கண்டுபிடிக்க போராடுகிறார் மாதவன். அவரது மனைவி நயன்தாரா செயற்கை குழந்தை பெற்றுக் கொள்ள கணவன் மாதவனிடம் பணம் ரெடி செய்யச் சொல்கிறார். இந்நிலையில் மாதவனின் ஹைட்ரோ பெட்ரோலிக் கண்டுபிடிப்பை அங்கீகரிக்க அதிகாரிகளுக்கு 5 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று கேட்கப்படுகிறது. இதேபோல் கிரிக்கெட் வீரரான சித்தார்த்தை கட்டாய ஓய்வு பெறச் சொல்லி அவரது அணியில் வற்புறுத்துகின்றனர். இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் மும்பை தாதா ஒருவர் பெட்டிங் நடத்துகிறார். இதில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் மூவரும் எப்படி சிக்கிக் கொள்கின்றனர். அதிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா உள்ளிட்ட பல்வேறு கேள்வி களுக்கு டெஸ்ட் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது
ஆரம்ப காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த மாதவன் ஒரு கட்டத்துக்கு பிறகு தனது பாணியை மாற்றிக் கொண்டு முரட்டுத்தனமான வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். அது ஒர்க்அவுட்டும் ஆனது..அந்த வரிசையில் ஒரு பாத்திரமாகத்தான் டெஸ்ட் படத்தில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார்.
முதலில் இந்த கதாபாத்திரத்தை இயக்குனர் சசிகாந்த் அவரிடம் சொன்னபோது “இந்த வேடத்தில் நடிக்கிறேன். ஆனால் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறி பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு கதாபாத்திரத்தை செதுக்கி செதுக்கி ஒரு கட்டத்தில் இதற்கு மேல் செதுக்க முடியாது என்ற நிலை வந்தபோதுதான் அந்த பாத்திரத்தை மாதவன் ஏற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். அவர் ஏன் இந்த பாத்திரத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது படத்தில் அவரது நடிப்பை பார்க்கும்போது தெரிகிறது. மனுஷன் நடிப்பு ராட்சஷனாக மாறி இருக்கிறார். அது எப்படி என்று கேட்டால், அதை வார்த்தைகளால் விளக்க முடியாது காட்சிகளில் தான் காண முடியும்..
கிரிக்கெட் வீரர் சித்தார்த் அர்ஜுனாக சித்தார்த் நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் என்றால் சினிமாத்தனமான கிரிக்கெட் வீரராக இல்லாமல் நிஜ கிரிக்கெட் வீரராக மாறுவதற்கு ஆறு மாத காலம் கிரிக்கெட் கோச்சுகளிடம் பயிற்சி பெற்றிருக்கிறார். அந்த பயிற்சிதான் அவரை காட்சிகளில் நிஜ கிரிக்கெட் வீரராக கண்முன் நிறுத்துகிறது.
நயன்தாரா செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாயாக வேடமேற்றிருக்கிறார் . இது ஒரு வகையில் அவரது நிஜ கதாபாத்திர சாயல் என்றாலும் கதாபாத்தி ரத்தில் அவர் ஏனோ ஒன்றாதவர்போல் தெரிகிறது. அவர் மீது பெரிய நடிகை என்ற முத்திரை இருப்பதன் காரணமாக அவர் செய்வதெல்லாம் நடிப்பு போலவே தெரிகிறது. அதன் காரணமாக அவரிடம் எதார்த்தத்தை எதிர்பார்க்க முடிய வில்லை..
சித்தார்த் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைகாட்டி இருக்கிறார். இவரை திரையில் பார்க்கும் வாய்ப்பு இந்த படத்தில் கிடைக்கவில்லை காரணம் இந்த படம் நெடப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
சித்தார்த்தை கன்னத்தில் அறையும் அந்த ஒரு காட்சியில் நடிப்புத்திறனை முத்திரையாக பதிக்கிறார் மீரா.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் சசிகாந்த் ஏற்கனவே பிரபலமான பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர். பட இயக்குனராக ஆக வேண்டும் என்று திரையுலகுக்கு வந்த சசிகாந்த்
படங்களை தயாரித்து அதில் பெற்ற அனுபவத்துடன் தற்போது இயக்குனராக மாறியிருப்பது அவரை ஒரு தரமான இயக்குனராக உருமாற்றி இருக்கிறது. எல்லா கதாபாத்திரங் களையும் நைய புடைத்து பிசிறு இல்லாமல் கையாண்டிருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் லேசாக குறைந்தாலும் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஆர்வத்தை தூண்டி விடுவது சிறப்பு.
படத்தில் நடிகர்கள் நடிக்கும் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட படத்தில் இடம்பெறும் கிரிக்கெட் மேட்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவு. நிஜ கிரிக்கெட்டை டிவியில் எப்படி பார்ப்போமோ அதே பாணியில் கிரிக்கெட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ். அதற்காக ஒளிப்பதிவாளர் விராஜ் எடுத்துக் கொண்டி ருக்கும் சிரத்தையும் கண் முன் நிற்கிறது.
இந்த படத்திற்கு இந்த இசைதான் பொருத்தமானது என்பதை காட்சிகளோடு இழையோடி யிருக்கும் சக்தி ஸ்ரீ கோபாலனின் இசை நிறைவு செய்கிறது.
டெஸ்ட் – சினிமா திரையில் வெளிவராத ஒரு படம். ஆனால் உலகம் முழுவதும் எந்த மொழியிலும் நெட் பிளக்ஸ் ஒடிடியில் தேர்வு செய்து நேரத்தை ஒதுக்கி பார்க்க வேண்டிய அருமையான படம்.