கொரோனா 2வது அலை இந்தியாவில் கோர தாண்ட வம் ஆடிவருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். லடசக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் மருத்துவ மனைகளைல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் உடனடியாக ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கையகப்படுத்தி ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்று மத்திய அரசு யோசனை கூறியது. அதனை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்த பிரமாண பத்திரம் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தர விட்டது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை யில் நடந்தது. முதல்வர் எடப்படி பழனிசாமி தலைமை தங்கினார். துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ், கம்பூனிஸ்ட், பாஜ க உள்ளிட்ட அங்கீகரிக்கப் பட்ட 8 கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவரவர்கள் தங்கள் தரப்பில் கருத்துக்களை தெரிவித்தனர்.
இறுதியில் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தற்காலிக அனுமதி அளிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ’மக்களின் உயிரை காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் வேறு ஆலையே இல்லையா? ஆக்ஸிஜன் தயாரிக்க தமிழகத்தில் பல ஆலைகள் உள்ளன. அதில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது’ என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.