காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத்தக்கது. மத்திய அரசு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள் அறிக்கை:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு அதன் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் முன்மொழிந்த தனித்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேகதாது அணை கட்ட மத்திய அரசிடம் தொடர்ந்து அனுமதி கோரும் கர்நாடக அரசின் போக்கு ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. அண்டை மாநிலங்களுடனான நல்லுறவை பேணும் அதேசமயம் தமிழக மக்களின் உரிமையை இழக்காமல் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற வேண்டும்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையை வேடிக்கை பார்க்காமல், உடனடியாக தலையிட்டு சுமூகமான நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.