Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சிறை (பட விமர்சனம்)

படம்: சிறை

நடிப்பு: விக்ரம் பிரபு, அறிமுகம் எல் கே அக்ஷய் குமார், அனந்தா அனிஷ்மா மற்றும் பலர்

தயாரிப்பு: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) SS லலித் குமார்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி

பி ஆர் ஓ: யுவராஜ்

வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது சிறை.

கதை: கொலை வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் ஆண்டு கணக்கில் அடைபட்டு கிடக்கிறான் இளைஞன் அப்துல் ( அக்ஷய் குமார்). அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த கைவிலங்கிட்டு போலீஸ் ஏட்டு ( விக்ரம் பிரபு) மற்றும் இரண்டு போலீசார் பஸ்ஸில் அழைத்து செல்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல அப்துல் முயல்கிறான். ஒரு வழியாக அவனை கண்டுபிடிக்கும் போலீஸ் அவனை கவனத்துடன் பிடித்து அழைத்து செல்கின்றனர் அப்போது போலீஸ் ஏட்டுவிடம் தனது காதல் கதையை சொல்கிறான் அப்துல். உருக்கமான அந்த கதையை கேட்டு ஏட்டு எடுக்கும்முடிவு என்ன? அப்துல் காதல் என்னவாகிறது என்பதற்கு விறுவிறுப்பான பதில் அளிக்கிறது சிறை.

போலீஸ் பாணி படம் என்றாலே அதற்கு ஒரு ஃபார்முலாவை தமிழ் படத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ஆனால் அந்த ஃபார்முலாவை இந்த படம் உடைத்திருக்கிறது. அதேபோல் ஒரு ஹீரோ தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் கதாபாத்திரத்தில் சினிமாத்தனமாக இல்லாமல் எதார்த்தமான மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஏட்டுவாக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.

தொடக்க காட்சியிலேயே ரவுடிகள் மிளகாய் பொடி வீசி நடத்தும் தாக்குதலில் விக்ரம் பிரபு தடாலடி ஆக்சன் காட்டி நிமிர வைக்கிறார்.

கைதி அப்துல்லின் காதல் கதையைக் கேட்கும் விக்ரம் பிரபு அந்த காதலை சேர்த்து வைக்கும் முடிவை மனதில் நிறுத்திக் கொண்டு கைதியின் காதலி வந்தவுடன் அவர்கள் இருவரையும் மனம் விட்டு பேச வைத்து இந்த காதல் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு விதையை ரசிகர்கள் மனதுக்குள் விதைத்து வைக்கிறார் விக்ரம் பிரபு.

விசாரணை கைதி அப்துல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுகம் அக்ஷய்குமார் தயாரிப்பாளரின் மகன் என்பதால் எந்த சலுகையும் காட்டாமல் கதாபாத்திரமாகவே அவரை மாற்றி நடிக்க வைத்திருப்பது இயக்குனர் எடுத்திருக்கும் ரிஸ்க் என்றாலும் அதில் நடிகரையும் தேர்ச்சி பெற வைத்து இயக்குனரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதுதான் சிறப்பு.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கையில் விலங்குடன் வரும் அக்ஷய் குமார் தனது காதலி முன் தனக்கு கைவிலங்கு போட வேண்டாம் என்று விக்ரம் பிரபுவிடம் கேட்டுக்கொள்வதும் அதற்கு காரணம் கேட்கும் போது தனது காதல் கதையை அக்ஷய் குமார் சொல்லும்போது இது ஆணவக் கொலை கதையாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது நல்ல வேலையாக கதைக்களத்தை மாற்றிக் கொண்டு செல்வது புதிய அனுபவத்தை தருகிறது.

அக்ஷய் குமார், அனிஷ்மா காதல் ஜோடி ஒன்று  சேர வேண்டும் என்ற உணர்வை ரசிகர்கள் மனதில் உருவாக்க அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது. அனிஷ்மாவின் அப்பாவித்தனமான முகமும் எதார்த்தமான நடிப்பும் வெள்ளந்தியான சிரிப்பும் நெஞ்சாங் கூட்டில் ஒட்டிக் கொள்கிறது.

படத்தின் கதையை எழுதி இருக்கிறார் நடிகரும் இயக்குனருமான தமிழ்.
வெற்றி மாறனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய  சுரேஷ் ராஜகுமாரி காதலைப் பற்றி மட்டுமல்லாமல் மத இணக்கத்தை பற்றியும் ரொம்பவே எதார்த்தமாக பேசி இருப்பது அவர் வெற்றி மாறனிடம் கற்றிருக்கும் வித்தையின் வீரியம் என்ன என்பது புரிகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசை, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு படத்துக்கு தூண் .

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) SS லலித் குமார் படத்தை தயாரித்திருக்கிறார்.

சிறை – மனங்களை வெல்லும் காதல் கதை.

Review by
k.Jayachandhuran
trending cinemas now.com

 

 

Related posts

மகளிர் தினம்: பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டு சேலை வழங்கிய ஜெய்

Jai Chandran

Team #LIGER wrapped up the entire shoot

Jai Chandran

Anbarivu trailer launched by KamalHaasan at BiggBoss

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend