தமிழ்க முதலவராகும் மு.க.ஸ்டாலினுக்கு அகில் இந்திய சமத்துவ மக்கள் கட்ட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஜனநாயக முறையில் சிறப்பாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், திமுக தலைவர் .மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், அதன் தோழமை கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று பரவி கொண்டிருக்கும் அசாதாரண சூழலில் திமுக சார்பில் 6 – வது முதல்வராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் அவர்களின் அரசியல் பாரம்பரிய வழியில் சிறப்பாக மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
தற்போது துரிதமாக கொரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடியை சமாளிப்பதற்கு மருத்துவ, விஞ்ஞான ரீதியில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மக்களின் வேதனையையும், அச்சத்தையும் போக்கி, உயிர்களை பாதுகாத்து, மக்கள் வாழ்வு மலர அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் அமையவிருக்கும் ஆட்சி, மக்கள் நலன்சார்ந்த சிறந்த திட்டங்கள், திறமையான நிர்வாகம், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவதுடன், தமிழகத்தின் தனித்தன்மையை உலகளவில் பறைசாற்றும் அளவிற்கு முன்னேற்றம் காண செய்யும் என நம்புகிறேன்.
மேலும், எந்தவொரு போட்டியிலும் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு, வெற்றி அடைந்தவுடன் பேருவகை கொள்வது, தோல்வியடைந்ததும் துவண்டு விடுவது என்றில்லாமல், சமநிலையில் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சி சார்ந்த வேட்பாளர்கள் மீண்டும் வெற்றி பெறுவதற்கு எப்படி செயல்பட வேண்டும் என உணர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை நோக்கி பயணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
2021 சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் அடையாளப்படுத்தப்பட்டோம், விரைவில் அங்கீகரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து மக்கள் பணி செய்வோம்.
தமிழகத்தின் 16 – வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைக்கவிருக்கும் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், திமுகவினருக்கும், திமுகவின் தோழமை கட்சியினருக்கும் மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்
இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர்
ரா.சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.