சிவாஜி மூத்த மகன் ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரா. முத்தரசன் பிரதமர் மோடியை விமர்சிக்கும் சாக்கில், எங்கள் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரை தேவையின்றி இழுத்திருக்கிறார்.
நடிகர் திலகம் மற்றும் பிரதமர் மோடி இவருக்கும் உள்ள ஒற்றுமை, இருவருமே தங்களின் இடைவிடா மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினால் இந்த உயர்ந்த இடத்தை அடைந்து இருக்கிறார்களே அன்றி உங்களைப் போல் மற்றவர் முதுகில் சவாரி செய்து வந்தவர்களல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
எங்கள் தந்தை நடிகர் திலகம, உங்களின் மூத்த தலைவர்களுடன் நட்போடு இருந்தவர். நெருக்கடியான காலங்களில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்.
தன் உடல், பொருள், புகழ் யாவற்றையும் எந்த விதமான எதிர்பார்ப்புமில்லாமல் தன் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.
அவருடைய வழியில் நான் பயணித்து வருகிறேன் என்பதையும் பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.
நடிகர் திலகத்தின் திறமை, நேர்மை, கடின உழைப்பு, அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்த்து. இதன் மூலமாக பல விருதுகள் கிடைத்தன. அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்று அவர் இருந்திருந்தால் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்திருப்பார். அது மட்டுமின்றி என் பக்கம் நின்று பாரதீய ஜனதா.கட்சியில் இணையும் என் முடிவை வரவேற்றிருப்பார்.
உலக அரங்கில் பிரதமர் மோடியால் நமது பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதையும் நம் நாட்டுக்கு அவரால் பெருமை சேர்வதையும் கண்டு மகிழ்ந்திருப்பார்.
இறக்குமதி செய்யப்பட்டு தற்போது அழிந்து கொண்டிருக்கும் கொள்கையை இப்போது நீங்கள் பின்பற்றி வருகிறீர்கள்.
பாரத நாட்டின் மண் சார்ந்த கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார் நம் பிரதமர். நமது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இதே பாதையைப் பின்பற்றி வெற்றி நடை போட்டு வருகின்றார். இடது வலது என எந்தப் பக்கமும் திரும்பாமல் நேர்கொண்ட பார்வையில் எங்கள் தலைவர் களின் பயணம் தொடர்கிறது.
உங்களுடைய கருத்தில் இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தைப் பற்றிய அறியாமை தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சி அளித்ததாக நீங்கள் குறிப்பிட்ட வாக்குறுதியை நம்பி மக்கள் கடன் வாங்கவில்லை. உங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. அளித்த வாக்குறுதி தான், மக்களை கடன் வாங்க வைத்தது. இவையெல்லாம் பொதுவெளியில் இருக்கும் தகவல்களாகும்.
“Little Knowledge is Dangerous” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அரைகுறை ஞானம் ஆபத்தானது என்பது உங்கள் அறிக்கை நிரூபிக்கிறது.
உங்களுடைய கருத்துக்கள் வன்முறை, பிரிவினைவாதம் மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவற்றை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவே முதன்மையானது என்ற தேசப்பற்று குறிக்கோளை நிறைவேற்ற பாரத பிரதமர் மோடி அவர்கள் வழியில் பாரதிய ஜனதா கட்சி பாடுபட்டு வருகிறது.
ஒவ்வொரு இந்தியனையும் உயர்வாக மதிக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சி.
அயல்நாட்டு கொள்கைகளை கடைப்பிடித்து, அயல்நாட்டு உதவியைச் சார்ந்து, தேச விரோத சக்திகளின் ஆதரவில் இயங்கும் உங்களின் அறிவுரைகளுக்கு இங்கு தேவையுமில்லை. இடமுமில்லை.
நடிகர் திலகத்தைப் பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால் மற்றவர்களை தரமின்றி விமர்சிப்பதற்கு அவர் பெயரை பயன்படுத்த வேண்டாம். உங்கள் கொள்கைகள், வழிமுறைகள் அனைத்தையும் விட உயர்ந்த மனிதர் நடிகர் திலகம்.
உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்க இந்திய மக்களுக்கு நேரமில்லை.
ஜெய் ஹிந்த்.
இவ்வாறு ராம்குமார் கணேசன் கூறியுள்ளார்.