படம்: ராமம் ராகவம்
நடிப்பு: சமுத்திரகனி, தன்ராஜ், சுனில், ஹரிஷ் உத்தமன், மோக்ஷா
தயாரிப்பு: ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் பிருத்வி
இசை: அருண்
ஒளிப்பதிவு: துர்கா பிரசாத்
இயக்கம்: தன்ராஜ்
பிஆர்ஓ: குணா
அரசு அலுவலகத்தில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி சமுத்திரக்கனி. இவரது மகன் தன்ராஜ். குழந்தையிலிருந்து மகனை பாசமாக வளர்க்கிறார் சமுத்திரகனி. மகன் தன்ராஜ் பெரியவன் ஆன பிறகு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி தந்தையின் சொல் பேச்சை கேட்காமல் ஏராளமான தவறுகள் செய்கிறார். ஒவ்வொரு முறையும் அவரை சமுத்திரகனி காப்பாற்றினாலும் மீண்டும் மீண்டும் எதிர்பாராத அதிர்ச்சியை தந்தைக்கு தந்துக் கொண்டே இருக்கிறார் தன்ராஜ். தன் ஆசைக்கு தடையாக இருக்கும் தந்தையைக் கொல்லக்கூட தன்ராஜ் திட்டமிடுகிறார் ஆனால் எதிர்பாராதது நடக்கிறது.
தந்தை மகனுக்குமான உறவை சொல்லும் கதையாக ராமம் ராகவம் உருவாகி இருக்கிறது. ராமம் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, ராகவம் கதாபாத்திரத்தில் தன்ராஜ் நடித்திருக்கின்றனர்.
தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சூரி நடித்திருந்தார் இந்தபடம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது தெலுங்கில் பரோட்டா சூரி வேடத்தை ஏற்று நடித்தவர் தான் இந்த தனராஜ். ஏராளமான தெலுங்கு படங்களில் தனராஜ் நடித்திருந்தாலும் அவர் ஹீரோவாக நடித்து இயக்கி இருக்கும் படம் ராமம் ராகவம்.
எப்படியெல்லாம் ஒரு பிள்ளை இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கும் ராகவன் கதாபாத்திரத்தை ரொம்பவும் கச்சிதமாக நடித்திருக்கிறார் தன்ராஜ்.
தந்தை சமுத்திரக்கனி மீது அவர் கோபப்பட்டு ஒவ்வொரு முறையும் அவரை கோபமூட்டும் விதமாகவே அவருக்கு எதிராக செயல்படுவது இப்படி கூட ஒரு பிள்ளையா என்று கடுப்பை ஏற்றுகிறது.
சினிமா காட்சிகளாக அமைத்திருந்தாலும் எல்லாமே நிஜத்தில் சமுதாயத்தில் பல நேரங்களில் நாம் பார்த்த சம்பவங்களாகவே தொகுக்கப்பட்டிருப்பதால் காட்சிகளில் உண்மைத் தன்மை அதிகமாகவே இருக்கிறது.
தமிழில் தன்ராஜிக்கு எவ்வளவு வரவேற்பு கிடைக்குமோ தெரியாது ஆனால் தெலுங்கில் அவரை சோலோ ஹீரோவாக நிறுத்தும் ஒரு கதாபாத்திரத்தை தனக்குத்தானே வடிவமைத்து அதை தத்ரூபமாக செய்து ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் விதமாக நடித்திருக்கிறார்.
சமுத்திரகனியும் ஏற்கனவே பல படங்களில் அப்பா வேடம் ஏற்றிருந்தாலும் இப்படம் அவரை ஒரு தியாக தந்தையாக மனதில் பதிவு செய்கிறது. தந்தை மகன் உறவு சொல்லும் கதையிலும் சஸ்பென்ஸ் வைக்க முடியும் என்பதை இயக்குனர் தன்ராஜ் திறம்பட செய்திருக்கிறார்
சுனில் காவி வேட்டி உடுத்திக்கொண்டு வில்லத்தனமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஹரிஸ் உத்தமன் லாரி டிரைவராக வந்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் தன்ராஜின் தாயாக நடிச்சிருப்பவரும் இயல்பான நடிப்பில் உருக வைக்கிறார்.
ராமம் ராகவம் – தந்தை – மகன் உறவின் இணைப்பு பாலம்.

