நடந்து முடிந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றுகொண்டார்.
இந்நிலையில் கொரோனா 2ம் அலை உச்சத்தில் இருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டதுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தினார். தற்போது மூன்றாம் அலை வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறார். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நடத்த முடிவு செய்த முதல்வர் கடந்த வாரம் டெல்லி சென்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
அதன்படி விழாவில் கலந்துகொள்ள இன்று (02.08.2021) ஜனாதிபதி சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் பலத்த 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னர் சட்டமன்ற நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜார்ஜ் கோட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.அங்கு அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சபாநாயகர் அப்பாவு, வரவேற்புரை வழங்கினார்.
இதையடுத்து சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரிமோட் பட்டன் அழுத்தி திறந்துவைத்தார். யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது; படத்திற்குக் கீழே ’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கே.ராஜன் எழுதிய “early writing system a journey from graffiti to brahmi” என்ற புத்தகத்தை பரிசளித்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.