Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“என்ன விலை” மறக்க முடியாத அனுபவம் தரும் – நிமிஷா சஜயன்

என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!*

கவனம் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பாராட்டு பெற்று வருபவர் நடிகை நிமிஷா சஜயன். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது தலைமுறையின் திறமையான நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்திப் படமான ’பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது மாறுபட்ட கதாபாத்திரங்கள் இவரது நடிப்பு திறனுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த படங்கள் வரிசையில் ‘என்ன விலை‘ திரைப்படமும் இணைய இருக்கிறது. படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பத்திரிகையாளர் திரையிடல்களில் கிடைத்துவரும் வரவேற்பு, படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, “சஜீவ் என்னிடம் கதையைச் சொன்னபோது, எனக்காக எந்தக் கதாபாத்திரத்தை மனதில் வைத்திருக்கிறார் என்பதை அவர் சொல்லவில்லை. ‘சரி, இப்போது நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்’ என்று மட்டும் கூறினார். இரண்டு கதாபாத்திரங்களும் மிக அழகாக எழுதப்பட்டிருந்தன. ரிஷியின் கதாபாத்திரமும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால், விஜயலட்சுமி அல்லது காஞ்சனா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேனா என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், நேர்மையாகச் சொல்வதென்றால், எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பேன். விஜியின் கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருந்தேன். ஏனென்றால், அந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால், காஞ்சனா கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. அதனால், காஞ்சனா கதாபாத்திரத்தில் நான் நடிக்க போவதாக சஜீவ் என்னிடம் சொன்னபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அவரைக் கட்டிப்பிடித்து, ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டேன். இரண்டு கதாபாத்திரங்களுமே மிகவும் அழகாகவும், வலுவாகவும் எழுதப்பட்டிருந்ததால், எந்தக் கதாபாத்திரத்தை அவர் எனக்கு தரப் போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘அது உங்களுக்கான கதாபாத்திரம்’ என்று அவர் சொன்ன அந்த நொடி, எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்தது.

’என்ன விலை’ திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆழமான உணர்வுப்பூர்வமான பயணம் உள்ளது. கருணாஸ் சாருடன் எனக்கு அதிகமான காட்சிகள் இல்லை. ஆனால், அவரது நடிப்பு அசாத்தியமானது. விஜயலட்சுமி கதாபாத்திரமும் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரும் சிறப்பாக நடித்துள்ளார். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் திரைப்படத்தையும் என் கதாபாத்திரத்தையும் பாராட்டியுள்ளது மகிழ்ச்சி. இந்தக் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக உருவாக்கியதற்கான முழுப் பாராட்டும் இயக்குநர் சஜீவுக்கே சேரும். ’என்ன விலை’ திரைப்படம் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார். ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

Related posts

Maidaan Triumphs at the Septimius Awards

Jai Chandran

மாஸ்க் (பட விமர்சனம்)

Jai Chandran

மாணவ மாணவிகளுக்கு சூர்யா உருக்கமான வேண்டுகோள்: தற்கொலை எண்ணம் வேண்டாம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend