படம் : மருத
நடிப்பு: ராதிகா சரத்குமார், விஜி, சரவணன், வேல ராமமூர்த்தி, ஜி ஆர் எஸ், லவ்லின் சந்திரசேகர், மாரிமுத்து, கஞ்சா கருப்பு
தயாரிப்பு: பிக்வே பிக்சர்ஸ் சபாபதி
இசை: இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு: பட்டுக்கோட்டை ரமேஷ் பி.
இயக்கம்: ஜி ஆர் எஸ்
பி ஆர் ஓ : நிகில்
மதுரை பக்கத்து கதைகள் ஏராளமாக வந்திருக்கின்றன, அந்த பகுதி கதை என்றாலும் அங்கு நடக்கும் செய்முறை என்ற ஒரு பண்பாட்டை மையமாக கொண்டு இக்கதை உருவாகி இருக்கிறது.
மருதபாண்டியின் (சரவணன்) தங்கை மீனாட்சி (ராதிகா). மனைவி காளி (விஜி). மீனாட்சியின் குழந்தைக்கு காது குத்து விழா நடக்கும்போது செய்முறை செய்யும் நிகழ்வில் மருதபாண்டிக்கும் மற்றொருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. இதில் 5 பவுன் தங்க சங்கிலி 30 ஆயிரம் ரொக்கம் என மருதபாண்டி செய்முறையை செய்து கெத்து காட்டுகிறார். ஆனால் அந்த போட்டியை தடுத்து செய்முறையை அளவுக்கு மீறிசெய்ய வேண்டாம் என்று அண்ணனிடம் மீனாட்சி கூறியும் கேட்கவில்லை. இப்போது என்ன செய்ய முறை செய்யப்படுகிறதோ அதே அளவுக்கு மீனாட்சியும் அண்ணன் குடும்பத்துக்கு செய்தாக வேண்டும் அந்தளவுக்கு மீனாட்சிக்கு வசதி கிடையாது. செய்முறையில் வந்த பணத்தை மீனாட்சியின் கணவர் குடித்தே அழிக்கிறார். ஒரு கட்டத்தில் அண்ணன் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வில் மீனாட்சியால் செய்முறை செய்ய முடியாமல் போகிறது. இதனால் அண்ணன் மனைவி காளி வாய்க்கு வந்தபடி மீனாட்சியை திட்டி அவமானப் படுத்துகிறார். மீனாட்சியின் மகனும் ஊதாரியாக சுற்றி திரிவதால் செய்வதறியாது தவிக்கிறார். இரண்டாவது முறையாக அண்ணன் வீட்டில் செய்முறை நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்போது மீனாட்சி வீட்டுக்கு வரும் காளி எச்சரிக்கிறார். இந்தமுறை செய்முறை பணம் அவ்வளவையும் திருப்பி தராவிட்டால் நடுத்தெருவில் மானத்தை வாங்கிவிடுவேன் என்று மிரட்டுகிறார். மீனாட்சியால் செய்முறை பணத்தை தர முடிந்ததா என்பதற்கு படம் அதிரவலைகளுடன் கூடிய பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
இப்படத்தின் இயக்குனர் ஜி ஆர் எஸ். இவர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இவர் பாரதிராஜா பள்ளியிலிருந்து வந்திருப்பவர். மண்வாசனை 16 வயதினிலே, முதல் மரியாதை, காலத்து பாரதிராஜா படத்தை மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு அர்த்தமுள்ள கதை அம்சத்துடன் இப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக் கின்றன.
நடிகர், நடிகைகளுக்கு பதிலாக மீனாட்சி, காளி, மருதுபாண்டி, பாண்டி என்று இப்படத்தில் எல்லோரையும் அந்த பாத்திரங்களாகவே பார்க்கமுடிகிறது. குறிப்பாக செய்முறை கடன் சுமையுடன் மீனாட்சியாக ராதிகா சரத்குமார், அவரிடம் பணத்தை வசூல் செய்ய ஆவேசமாக ஆர்ப்பாட்டம் செய்யும் காளியாக விஜி சந்திரசேகர் நடித்திருக்கின்றனர். படத்தின் உயிரும் உடலும் இந்த இரண்டு கதாபாத்திரங்கள்தான்.
எப்படிதான் இவ்வளவு பணத்தை செய்முறையாக நான் திரும்ப செய்யாப்போகிறோனோ என கண்ணீர் மல்க சோகத்தில் அழும் ராதிகா பல காட்சிகளில் மனதை கனமாக்குகிறார். பட்ட இடத்தி லேயேபடும், கெட்ட குடியே கெடும் என்பதுபோல ராதிகாவின் மகன் பாண்டியாக நடிக்கும் ஜி ஆர் எஸ் ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்து அம்மாவின் கஷ்டத்தை புரிந்துகொள்ளாத பிள்ளையாக வலம் வருவது கற்பனையாக சொல்லப்பட்டதல்ல நிஜ வாழ்க்கையில் இத்தகைய பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதும் நிஜம்..
ஒரு பக்கம் தாய்க்கே உரிய குணத்துடன் சாந்தமாக அமைதியாக ராதிகா பாசத்தை பொழிந்தால் மறுபக்கம் காளியாக ஆவேசம் கொண்ட மதயானையாக விஜி சந்திரசேகர் நடித்து பிரமிப்பை ஏற்படுத்துகிறார். கடன் வாங்கி வட்டி கட்டாதவர்களை தெருத்தெருவாக விரட்டி சென்று தாக்கும்போது கோலிவுட் ஆண் வில்லன்களையெல்லாம் அசால்ட்டாக ஓரம் கட்டிவிடுகிறார்.
நடுத்தெருவில் வாழை இலைபோட்டு ராதிகாவுக்கு கறிகஞ்சி பரிமாறி தனது செய்முறை பணத்தை வசூலிக்கும்போது இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாரா என்று பயமுறுத்தலை உணரவைக்க்கிறார் விஜி.
பாண்டியாக நடித்திருக்கும் ஜி ஆர் எஸ் ஊதாரியாக சுற்றுவரும் மகனாக குறும்புத்தனங்களும், காமெடியும் லேசாக காதலும் செய்து நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் இப்படியே முடிந்துவிடுமோ என்று எண்ணிக் கொண்டிருக்க அதற்கு பதிலடியை கிளைமாஸில் தருகிறார்.
தன் தாயை அவமானப்படுத்திய விஜியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் அவரது குடுமியை ஜி ஆர் எஸ் அறுப்பது அரங்கை அமைதியாக்குகிறது.
புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் லவ்லின் சந்திரசேகர் அசல் கிராமத்து சாயல் பெண்ணாக தோற்றமளிக்கிறார். இவர் படத்தில் விஜியின் பெண்ணாக நடித்திருக்கிறார். நிஜத்திலும் இவர் விஜியின் மகள்தான்.
ஒரு காட்சியில் லவ்லின் கழுத்தில் விஜி தூக்கு கயிற்றை மாட்டி அவரை தொங்கவிடும்போது மகளிடமே நடிப்பின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி மிரள வைத்துவிடுகிறார் விஜி.
மருதுபாண்டியாக வரும் சரவணன் வேடத்துக்கு ஏற்ப நடித்திருக் கிறார். தன் நிழல்கூட தன் மீது படக்கூடாது என்று ஒதுங்கிச் செல்லும் தங்கை ராதிகாவிடம் மனம் வெதும்பி பேசும்போது உருக வைக்கிறார். வேல ராமமூர்த்தி, மாரிமுத்து சிறிய வேடங்களில் வந்தாலும் கதையின் திருப்புமுனையாக அமைத்திருக்கின்றனர்.
கஞ்சா கருப்புக்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை காமெடி செய்து புன்னகைக்க வைக்கிறார்.
கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரு பக்கம் தங்களின் பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இசைஞானி இளையாராஜா படத்தை இசையாலும் பாடலாலும் தூக்கி நிறுத்துகிறார். இந்த கதைக்கு இவரை விட்டால் இசை அமைக்க வேறு ஆள் கிடையாது என்று பேச வைத்துவிடுகிறார். மீண்டும் அந்த எய்டீஸ் கால இசை ராகம் காதில் அருவியாக பாய்கிறது.
பட்டுக்கோட்டை ரமேஷ் பி கிராமத்து மக்களையும் கிராமத்து மண் வாசனையையும் மழுங்காமல் படமாக்கி இருக்கிறார்.
மருத – முத்தமிழர் பண்பாட்டில் ஒரு பகுதி பண்பாடு எப்படி திசை மாறிவிட்டது என்பதை அழுத்தமாக சொல்லும் படம்.
by
க. ஜெயச்சந்திரன்