Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சூர்யா திரைப்படத்துக்கு மிரட்டலா? மார்க்சிய கம்யூ கண்டனம்

நடிகர் சூர்யா திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுவதா? என பாமக-வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி யுள்ள “எதற்கும் துணிந்தவன்” என்ற திரைப்படம் 10.3.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாமக-வைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களைச் சந்தித்து நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தை திரையிடக்கூடாது என கடிதம் கொடுத்து மிரட்டி வருகின்றனர்.

நடிகர் சூர்யா ஜெய்பீம் என்ற சிறந்த திரைப்படத்தில் நடித்ததோடு அந்தப் படத்தையும் தயாரித்து வெளியிட்டி ருந்தார். இந்தப் படம் வெளியானபோது பாமகவினர் பல்வேறு வகையான மிரட்டல்களை விடுத்தனர்.

எந்தவொரு தனிப்பட்ட பிரிவினரையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லையென படத்தின் இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார். நடிகர் சூர்யாவும் உரிய விளக்கமளித்தார்.

ஆனாலும், சூர்யா பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தத் திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பாமகவினர் மிரட்டுவது கலைச் சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானது. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நோக்கமுடையது.

ஜெய்பீம் திரைப்படக் கலைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு விழா நடத்தி ஊக்குவித்தது. இத்தகைய திரைப்படங்கள் மென்மேலும் வரவேண்டி யது காலத்தின் தேவையாகும்.

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செயலில் ஈடுபடுவதை பாமக நிறுத்திக் கொள்ள வேண்டும். பாமகவின் இச்செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டன குரலெழுப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேலும் நடிகர் சூர்யாவின் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

Related posts

ரசிகர்களுடன் சார் படக் குழு வெற்றி விழா

Jai Chandran

பார்த்திபன் மற்றும் கௌதம் நடிக்கும் யுத்த சத்தம்

Jai Chandran

G.V.Prakash Kumar in Disney Hot Star – Kavithalaya Movie

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend