படம்: மாண்புமிகு பறை
நடிப்பு: லியோ சிவகுமார், காயத்ரி ரெமா, ஆரியன், கஜராஜ், ரமா, அசோக் ராஜா, செரண்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்கா குணசேகரன்
தயாரிப்பு: சியா ப்ரொடக்ஷன்
இசை: தேவா
ஒளிப்பதிவு: ஆர் கொளஞ்சி குமார்
இயக்கம்: எஸ் விஜயகுமார்
பிஆர்ஓ: சதீஷ் (AIM )
பறை இசையை கற்றுத்தரும் பள்ளியை நடத்துகின்றனர் வெற்றி (லியோ சிவகுமார்), எழில் (ஆரியன்). ஊர் தலைவரும் இன்னும் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சாவுக்கு பறை அடிக்க மாட்டோம் என்பது வெற்றி, எழில் இருவரின் கொள்கை. அதற்காக வரும் வாய்ப்புகளை அவர்கள் தட்டிக் கழிக்கின்றனர். வெளியூரில் நடக்கும் திருவிழாவிற்கு பறை இசைக்க செல்கிறார் எழில். அங்கு சிலரால் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ஆனால் அதை போலீசை வைத்து அங்குள்ளவர்கள் மறைத்துவிடுகிறார்கள். வெற்றி எவ்வளவு முயன்றும் உண்மையை வெளிக்கொண்டுவர முடியவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றிக்கு இப்படி ஒரு சூழலை ஏற்படுகிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்
பறை இசை கருவி எவ்வளவு உறுதியானதோ அந்த அளவுக்கு உறுதி இருந்தால்தான் வெற்றி, எழில் கதாபாத்திரத்தில் யாராலும் நடிக்க முடியும். அந்த உறுதியை லியோ சிவகுமாரும், ஆரியனும் பெற்றிருக்கிறார்கள் என்பது அவர்களது நடிப்பின் மூலம் உணர முடிகிறது. இவர்கள் இருவருமே பறை கருவியை அடித்து ஒலி எழுப்ப முறைப்படி பழகி இருப்பது அவர்களது பக்காவான நடிப்பின் மூலம் தெரிகிறது.
லியோ சிவகுமாருக்கு கூடுதலாக ஒரு காதலியும் கிடைக்கிறார். அந்த காதலுக்ககுள் ஒரு கதையை இயக்குனர் வைத்திருப்பது கிளைமாக்ஸ் நெருங்கும்போதுதான் தெரிகிறது. அது என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
லியோ சிவகுமாரின் காதலியாக காயத்ரி ரெமா நடித்திருக்கிறார். தென்றலாக மென்மையான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் காயத்ரி கிளைமாக்ஸ்சில்
ஆக்ரோஷம் பொங்க பறையடித்து புயலாக மாறுவது புல்லரிக்க வைக்கிறது. இந்த காட்சியை இன்னும் கூட நீளமாக்கி இருந்தால் அரங்கில் கரவொலி அதிர்ந்திருக்கும்.
மேலும் கஜராஜ், ரமா, அசோக் ராஜா, சரண்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்கா குணசேகரன் நடித்திருக்கிறார்கள்.
படத்தை சியா புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவா தன் ஆக்ரோஷ
இசையை காது ஜவ்வு கிழியும் அளவுக்கு அடி பொளந்திருக்கிறார். எவ்வளவு அடியையும் தாங்கி நிற்கிறது பறை.
பறை இசை கருவி உருவான வரலாறு பற்றி தொடக்க காட்சியில் தரும் முன்னுரை அனைத்து இசைக் கருவிக்கும் பறைதான் தாய்க் கருவி என்பதை உணர்த்துகிறது.
படத்தை பா ரஞ்சித், மாரி செல்வராஜ் பாணியில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் துணிச்சலுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் எஸ். விஜயகுமார்.
கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு வழக்கமான ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரல்களை ஒலிக்கும் இருள் சூழ்ந்த, குடிசை பகுதியில் இருந்து காட்டப்படாமல் தெளிவாக ஒளி வெள்ளத்துடன் காட்டி இருப்பது காட்சிகளை மனதுக்குள் பதிய வைக்கிறது.
பறை – ஓங்கி ஒலிக்க வேண்டிய குரல்.
Review By
K Jayachandhiran
Trending cenimas now.com

