Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மாமன் (பட விமர்சனம்)

படம்: மாமன்

நடிப்பு: சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், நிகிலா ஷங்கர், கீதா கைலாசம், உன்னி முகுந்தன், ஜெயபிரகாஷ், மாஸ்டர் பிரகீத் சிவன்

தயாரிப்பு: கே குமார்

இசை: ஹேசம் அல்துல் வஹாப்

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ்

பி.ஆர் ஒ : யுவராஜ்

திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் கிரிஜா ( சுவாசிகா) தாயாகாததால் உறவினர்கள் அவரை மலடி என்கின்றனர். சோகத்தில் இருக்கும் அவர் திடீர் கர்ப்பமாகிறார். குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை மீது கிரிஜாவின் தம்பியும், தாய்மாமனுமான இன்பா ( சூரி) உயிருக்கு உயிராக பாசம் வைக்கிறார். குழந்தையை வளர்ப்பது,சாதம் ஊட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது என எல்லாமும் செய்கிறான் இன்பா. குழந்தை லட்டுவும் (பிரகீத் சிவன்) மாமன் மீது உயிராக இருக்கிறான். ஒரு கட்டத்தில் இன்பாவுக்கு ரேகாவுடன் ( ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் இன்பா, லட்டு பாசம் தொடர்வதால் இன்பாவுக்கும், ரேகாவுக்கும் முதலிரவு நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுவே இருவருக்குள் மோதலாக வெடிக்கிறது. இந்த மோதலுக்கு முடிவு ஏற்பட்டதா? இன்பா, லட்டு பாசம் என்னவானது? என்பதற்கு உருக்கமாக பதில் அளிக்கிறது மாமன்.

சூரி தனித்து ஹீரோவாக நடித்து வந்திருக்கும் படம் மாமன். ஏற்கனவே அவர் ஹீரோவாக நடித்த விடுதலை, கருடன் போன்ற படங்களில் விஜய் சேதுபதி, சசிகுமார் போன்ற ஹீரோக்கள் நடித்து அவருக்கு கைகொடுத்திருந்தனர். இந்த படத்தில் விமல் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே நடித்திருப்பதால் மாமன் படம் முழுவதையும் சூரி தன் தோளில் சுமந்திருக்கிறார். கதையையும் சூரியே எழுதி உள்ளார்.

காமெடி செய்து நடித்துக் கொண்டிருந்த சூரி அப்படியே எதிர்மறையாக கண்களை கலங்க வைக்கும் ஒரு குணச்சித்திர நடிகராக மாறி இருக்கிறார். தன் அக்கா மகள் லட்டுவுடன் சூரி அடிக்கும் லூட்டி பாதி படம் வரை கலகலவென்று காட்சிகளை கொண்டு செல்கிறது. ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணமான பிறகு லட்டுவுடன் பழகுவதற்கு ஐஸ்வர்யா லட்சுமி எதிர்ப்பு கட்டுவதால் அந்த இடத்திலிருந்து படத்தின் சோகம் தொடங்கி விடுகிறது. அதன் பிறகு வரும் ஒவ்வொரு காட்சியும் செண்டிமெண்ட் என்ற பெயரில் சோகத்தை பிழிந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

மீண்டும் கலகலப்பு காட்சி வராதா? என்று கிளைமாக்ஸ் வரையே எதிர்பார்த்து எதிர்பார்த்து கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம். சோகத்துக்கு மேல் சோகம் என காட்சிகளை அடுக்கி ரசிகர்களை அழவிடாமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்துபோல் இருக்கிறது.

கெஸ்ட் ரோலில் வரும் விமல் கூட ஒரு காட்சியில் சூரி சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து,” எங்க கூட ஜாலியா சிரிச்சி சுத்திட்டு இருந்த, இப்ப உன்னையும் சோகமா உக்கார வச்சுட்டாங்களா?” என்று பஞ்ச் வசனம் பேசி அரங்கையே கலகலப்புக்குள்ளாக்குகிறார்.

சூரி, டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமி காதல் எப்படி ஒரே பார்வையில் பற்றிக் கொண்டது என்பது தான் தெரியவில்லை. அதை கேட்டால் பொறாமை என்று கூட சொல்வார்கள் . ஆனாலும் கேட்க வேண்டிய கேள்வியாக உள்ளது.
படத்தில் சூரி ஸ்வீட் பேக்டரி வைத்திருப்பதாக வசனம் தான் வருகிறது. அவர் என்ன வேலை செய்கிறார் என்பது அப்போதுதான் ஆடியன்சுக்கு தெரிகிறது.

படத்தில் வரும் ராஜ்கிரண் -விஜி ஜோடி, சூரி -ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி, சுவாசிகா மற்றும் அவரது கணவன் ஜோடி என எல்லாமே மல்லுக்கட்டி சண்டை போடுவது கூட்டு குடும்பம் என்றால் இப்படித்தான் அடிதடி மோதலாக இருக்கும் என்பதுபோல் ஒரு பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
நல்ல வேளையாக இதில் கிளைமாக்சை சோகமாக வைக்காமல் இருந்தார்களே என்ற ஆறுதல் மனதை தேற்றுகிறது.

சூரி ஒரு சண்டைக் காட்சியில் நடித்திருக் கிறார். அதில் கொஞ்சம் ஸ்டைலும் காட்டி இருக்கிறார். ஆக்ஷன் காட்சியில் அவர் ஓகே ஆகிவிடுகிறார்.

60 காலகட்டங்களில் கே. எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் “கற்பகம்” என்ற படம் வந்தது. கே ஆர் விஜயா, முத்துராமன் போன்றவர்கள் நடித்திருப்பார்கள். முத்துராமன் மற்றும் அவரது மனைவிக்கு பிறக்கும் குழந்தையை கே ஆர் விஜயாதான் பாசம் காட்டி வளர்ப்பார். அந்த படத்தின் பாதி கதை சூரியின் மாமன் படத்தில் அப்படியே இருக்கிறது.

மாமன் படத்தை கே குமார் தயாரித்திருக்கிறார்.

ஹேசம் அல்துல் வஹாப் இசையில் பாடல்கள் ஓ கே.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.

இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் சென்டிமென்ட்டை ஓவர் டோஸாக்கிவிட்டாரோ என்று தோன்றினாலும் குடும்ப உறவுகளின் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக உடைத்திருக்கிறார். அதைப்பார்த்து சிலர் திருத்தவும் செய்யலாம், சிலர் கூட்டு குடும்பத்திலிருந்து பீய்த்துக் கொண்டு ஓடவும் கூடும். அவரவர் மனதை.  ஸாரி ஸாரி .. அவரவர் மனைவியை பொறுத்தது.

மாமன் – கொஞ்சம் கலகலப்பு, ரொம்ப சோகம்.

 

Related posts

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய படம் ‘#AS23’*

Jai Chandran

BloomingStar PoojaKumar

Jai Chandran

டைரக்டர் வெங்கட்பிரபு ரிலீஸ் செய்த “தக்கு முக்கு திக்கு தாளம்” பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend