Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி, கமல் இணையும் படம் இயக்காதது ஏன்? லோகேஷ் கனகராஜ் சிறப்பு பேட்டி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி, உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம், தளபதி விஜய் நடித்த மாஸ்டர் போன்ற படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை பிரமாண்ட பொருட்செலவில் இயக்குவதுடன், கார்த்தி நடிக்கும் கைதி 2 படம் இயக்குகிறார். மேலும் தேவதாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிக்கை, மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஜினி சார் நடித்த கூலி படம் வெளியான பிறகு அதை பாராட்டியும் விமர்சித்தும் கருத்துக்கள் வெளி வந்தன. கூலி படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று நான் ஒரு இடத்திலும் கூறியதில்லை. ஆயிரம் கோடி வசூல் என்பது அவ்வளவு எளிதான சாத்தியம் இல்லை. கூலி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது நான் அளித்த பேட்டியின் போது ஆயிரம் கோடி படம் என்று எண்ணி இந்த படத்திற்கு வராதீர்கள். ரஜினி சார் நடிக்கும் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கம் படம் என்ற எண்ணத்துடன் படத்தை பாருங்கள் என்று தான் கூறி வந்தேன்.
கூலி படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படம் லாபகரமாக அமைந்தது என்று கூறினார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்.
இதுவரை என் படங்கள் குறித்து வந்த விமர்சனங்கள் பற்றி நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், எப்படி எல்லாம் என்னிடம் ரசிகர்கள் படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அதற்கேற்றார் போல் இனி எனது படம் இருக்கும்.

ரஜினி சார் கமல் சார் 40 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. இருவரி டமும் தனித்தனியாக நான் கதை கூறினேன். அவர்களுக்கு அது பிடித்திருந்தது. ஆனால் நான் சொன்னது ஆக்சன் கதையாக இருந்த நிலையில் அவர்கள் ஏற்கனவே நிறைய ஆக்சன் படங்கள் நடித்திருந்தால் ஒரு லைட் வெயிட்டான கதையில் நடிக்க ஆசைப்பட்டார்கள். அதுபோன்ற ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டனர். ஆனால் நான் ஆக்சன் படங்களையே பார்த்து வளர்ந்தவன் என்பதால் அதுபோன்ற படங்களை இயக்குவது தான் எனக்கு தெரிந்த விஷயமாக இருந்தது. லைட்டர் வெயிட்டான படத்தை எனக்கு இயக்க வராது என்று கூறி அந்த ப்ராஜெக்ட்டிலிருந்து நான் விலகி விட்டேன்.

மைத்திரி மூவிஸ் பட நிறுவனம் எனக்கு 10 வருடங்களுக்கு முன்பே படம் இயக்க அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். அதனால் அந்த படத்தை இயக்குவது என்று முடிவு செய்தேன். அதையடுத்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். அதேபோல் கைதி 2 படத்தையும் இயக்க உள்ளேன்.

தேவதாஸ் என்ற படத்தில் நான் நடிக்கிறேன். எனது முழு நேர பணி என்பது டைரக்ட் செய்வதுதான். நடிப்பது என்பது நேரம் கிடைக்கும்போது கதை பிடித்திருந்தால் நடிப்பேன். அப்படித்தான் தேவதாஸ் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. நேரம் கிடைக்கும்போது நடிப்பேன் ஆனால் எனது முழு கவனமும் டைரக்ஷனில்தான் இருக்கும்.

எனது படங்களில் போதை மருந்து கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக என் மீது குற்றச்சாட்டு கூறுகிறார்கள். ஆனால் நான் இயக்கிய மாநகரம் தொடங்கி விக்ரம் படம் வரை எல்லா படத்திலும் போதை மருந்தை இளைஞர்கள் பயன்படுத்தக்கூடாது என்ற கருத்தைதான் வலியுறுத்தி இருக்கிறேன். இந்த கருத்தை பிரபல நடிகர்கள் வாயிலாக சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் பிரபல நடிகர்கள் நடித்த படங்களில் அது போன்ற காட்சிகளை நான் வசனமாக வைத்து இளைஞர்களுக்கு அது படிப்பினையாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். போதை மருந்து பற்றி நான் கூறாமல் இருந்தால் நாட்டில் போதை மருந்து கலாச்சாரம் ஒழிந்து விடுமா? நான் படம் எடுக்கும்போது 900 கோடி போதை மருந்து கடத்தல் என்று தான் குறிப்பிட்டேன் ஆனால் அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது 20 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை மருந்தை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை பொறுத்தவரை போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று இளைஞர்களுக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன், குறும்படம் கூட இயக்குவதற்கு உதவி செய்திருக்கிறேன், 15,000 மாணவர்கள் போதை மருந்து உட்கொள்ள மாட்டேன் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள நான் காரணமாக இருந்தேன். இந்தப் பணியை நான் தொடர்ந்து செய்வேன்.

நான் எல்லா நட்சத்திரங்களின் படங்களையும் இயக்கத்தான் ஆசைப்படுகிறேன். அதற்கான வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் இயக்குவேன்.

விஜய்க்காக நான் மலேசியா சென்று ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். அதில் அரசியல் கிடையாது. விஜய் சார் எனக்கு நண்பர். அந்த முறையில் தான் ஜனநாயகன் ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். தேர்தலுக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக நான் கதை கூறி இருக்கிறேனா என்று கேட்கிறார்கள் அப்படி எந்த கதையும் நான் அவருக்கு கூறவில்லை. விஜய் கட்சிக்காக பிரச்சாரம் செய்வீர்களா என்கிறார்கள். எனக்கு அரசியல் தெரியாது. தேர்தல் பிரச்சாரம் எதுவும் நான் செய்யவில்லை.

என்னை பற்றி சமூக ஊடகங்களில் ஏராளமான சர்ச்சை கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருந்ததால் அதற்கெல்லாம் நானே விளக்கம் தர வேண்டும் என்பதற்காகவே இன்று பத்திரிகை ஊடகங்களை சந்தித்து பேட்டி அளித்தேன். இன்னொரு விஷயத்துக்கும் நான் பதில் கூறியாக வேண்டும். ரஜினி சார் கமல் சார் ஆகியோரை நான் ட்விட்டரில் இருந்து அன்ஃபாலோ செய்து விட்டதாக தகவல் வெளியானது. அது எப்படி என்னால் முடியும். நான் ஊரில் இருந்து வந்து அவர்களை வைத்து படம் இயக்கியதே
எனக்கு பெரிய பாக்கியம். அவர்களை அன்பாலோ செய்யும் அளவுக்கு நான் நான் ஒன்றும் சாதித்து விடவில்லை. நான் நடிக்க வருவது பற்றி அவர்களிடம் கூறியபோது ரஜினி சாரும், கமல் சாரும் எனக்கு வாழ்த்து கூறினார்கள். அவர்களுடன் என்றுமே எனக்கு நட்பு பழக்கம் தொடர்ந்து இருக்கும்.
என்னைப் பற்றி தவறான கருத்துக்கள் வெளியாகும் போது அது பற்றி பத்திரிகையாளர்கள் என்னிடமோ அல்லது எனது உதவியாளர்களிடமும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம் அதற்கு பதில் கூற தயாராக இருக்கிறோம். வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இனி அடுத்து எனது படப் பணிகளை தொடர்கிறேன். நன்றி.

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் கூறினார்.
பேட்டிக்கான ஏற்பாடுகளை சதீஷ் ( S2) செய்திருந்தார்.

Related posts

தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை: பன்னீர் செல்வம் பேட்டி

Jai Chandran

சிறுகதை, அங்கம்மாள் திரைப்படமாகிறது

Jai Chandran

மருத்துவர் சீட்டுக்காக காத்திருக்காமல்‌ நேரடியாக ஆய்வக பரிசோதனை.. அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend