படம்: LIK (love Insurance Kompany)
நடிப்பு : பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, மாளவிகா, கௌரி ஜி கிஷன், சாரா, ஆனந்தராஜ்
தயாரிப்பு: நயன்தாரா, எஸ் எஸ் லலித் குமார்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: ரவி வர்மன்
இயக்கம்: விக்னேஷ் சிவன்
பிஆர்ஓ : யுவராஜ்
கதை: 2040 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இளைஞர் கையிலும் லைக் (lik ) என்ற கம்பெனியின் ஆப் (செயலி )இருக்கிறது. அந்த செயலியில் காதல் ஜோடிகள் கை கொடுத்தால் இருவருக்கும் காதல் பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை நொடிப்பொழுதில் காட்டிவிடுகிறது. ஒரு சமயம் இளைஞன் வைப் வஸ்ஸி ( பிரதீப் ரங்கநாதன் ) இளம் பெண் தீமாவை (கிரித்தி ஷெட்டி) பார்த்த அடுத்த நொடி காதலில் விழுகிறான். அவரிடம் நட்பாக பழகுகிறான். இவர்களுக்குள் காதல் இருக்கிறதா என்பதை கண்டறிய லைக் செயலியில் கைகோர்த்து சோதிக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் காதல் இல்லை என்று செயலி காட்ட வைப் வஸ்ஸியை விட்டு விலகுகிறார் தீமா. ஆனால் தான் உண்மையாக காதலிப்பதாக கூறும் வைப் வஸ்ஸி, செயலி கூறுவது தவறு என நிரூபித்து தன் காதலை உலகுக்கு வெளிப்படுத்துவதாக சபதம் செய்கிறான். அவரால் அதை நிரூபிக்க முடிந்ததா என்பதுதான் கதை
2040 ஆம் ஆண்டில் நடக்கும் கதை என்பதற்கு சாட்சியாக காட்சிகளில் குட்டி ட்ரோன், . கார்கள் விண்ணில் பறந்து கொண்டிருக்கிறது, பூங்காக்கள் முதல் ரோடுகள், மேம்பாலம், மெட்ரோ ரயில் போன்றவை எல்லாமே மேலும் நவீன மயத்துக்கு மாறி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அமைத்திருப்பது 2040 என்று சொல்வதற்கு ஆதாரமாக இருக்கிறது மற்றபடி மனிதர்களின் உணர்வுகள் எல்லாமே செயலியில் மூழ்கிக் கிடப்பது, நாகரீக மோகத்தில் சுற்றுவது என்று காட்சிகள் நகர்கிறது.
சீமான் மகனாக நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். செயலியில் தவறு செய்யும் நபர்களைப் பிடித்து செல்போனே இல்லாத இயற்கை சூழலில் அடைக்கும் ஆர்கானிக் சிறையில் பலரையும் சீமான் குரூப் அடைத்துவைத்து அவர்களை செல்போன் பார்க்காத நபர்களாக மாற்ற முயற்சிப்பது நடக்குமா என்பது தெரியாவிட்டாலும் இது நடந்தால் மனிதர்கள் மீண்டும் இயந்திரத்துக்கு அடிமை ஆகாமல் இருக்கலாம் என்பதை உணர முடிகிறது.
பிரதீப் ரங்கநாதன் கிரித்தியை காதலிக்க தொடங்குவதும் ஆனால் கிரித்தி தன் கையில் வைத்திருக்கும் லைக் ஆப் சொன்னால் மட்டுமே காதலிப்பது என்று விடாப்பிடியாக பிரதீப்பை கண்டுகொள்ளாமல் ஒதுங்குவது இளவட்டங்கள் தினம் தினம் காணும் பிரேக் அப் பிரச்சினை.
தன் காதலை ஏற்க மறுக்கும் கிரித்தியிடம் அவரது மனதை மாற்றி தனது காதல் உண்மையானது என்பதை நிரூபிக்க பிரதீப் ரங்கநாதன் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதுதான் படத்தின் அடுத்தடுத்த காட்சிகளாக நகர்கிறது. இயந்திரத்தை விட மனிதனே சிறந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில் தனது உணர்வுகளை பிரதீப் பிரதிபலித்திருக்கிறார்.

கிரித்தி ஷெட்டி அழகு தேவதையாக வருகிறார். இன்ஸ்டாகிராமில் தங்களை ஒப்படைத்துவிட்டு லைக்ஸ்காக ஏங்கி தவிக்கும் இளம்பெண்களின் செல்போன் அடிமைத்தனத்தை கனகச்சிதமாக செய்திருக்கிறார். அவரிடம் அசத்தலான ஒரு டான்ஸ் வாங்க தவறியிருக்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் தந்தையாக சீமான் பொருத்தமான வேடம் ஏற்றிருக்கிறார். இயற்கையான சூழலில் வாழ்வதுதான் மனிதனை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்கும் என்பதை தனது கதாபாத்திரத்தின் மூலம் நிரூபிக்க முயன்றிருக்கிறார்.
lik ஆப், சி இ ஓ சூரியனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். வழக்கமான தனது பாணியில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசன்னமாகி இருக்கிறார் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு மாளவிகா, மேலும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிச்சிருக்கிறார்கள்.
நயன்தாரா, எஸ் எஸ் லலித் குமார் தயாரித்திருக்கின்றனர்
அனிருத் இசை ஓகே ஆனால் அவரிடம் இந்த கதைக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது என்பது உண்மை.
ரவி வர்மன் கேமரா காட்சிகளை வண்ணமயமாக கண்களுக்குள் ஒற்றி எடுக்கிறது
இயக்குனர் விக்னேஷ் சிவன் வழக்கமான தனது பாணியில் இருந்து மாறி ஷங்கர் போல் ஒரு பிரம்மாண்ட படத்தை தர முயற்சித்திருக்கிறார்.
Lik – பிரதீப் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

Review By
K.Jayachandhiran
Trending cinemas now.com
