Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராஜ்யசபை எம்பி ஆகிறார் கமல்ஹாசன்: முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

உலகநாயகன் , மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி ஆகிறார். அவருக்கு திரை உலகினரும், ரசிகர்களும், மக்கள் நீதி மையத் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் திமுக-வுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார்.

திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திமுக சார்பில் 4-வது வேட்பாளருக்கான இடம் கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை வேட்பாளராக அறிவித்து அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 இடங்களுக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பா.ம.க. எம்.பி. அன்புமணி, அண்ணா தி.மு.க. எம்.பி. சந்திரசேகரன், ம.தி.மு.க. எம்.பி. வைகோ ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 6 புதிய ராஜ்ய சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 19–ந் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களுக்கும் மற்றுமுள்ள ஒரு இடத்துக்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கும் ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர்களாக

1. பி.வில்சன்,

2.எஸ்.ஆர்.சிவலிங்கம்,

3. ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராஜ்யசபை எம்.பி.ஆக இருந்த பி.வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அவர் இணைந்தார். அவர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடாத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, ராஜ்யசபை எம்.பி. பதவி வழங்குவது குறித்து உடன்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. எனவே, ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாடு அடிப்படையில் தி.மு.க.வில் ஒரு ராஜ்யசபை எம்.பி. பதவி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ராஜ்யசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. தீர்மானத்தில் கூறப்பட்டதாவது:-

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது தி.மு.க.வுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வருகிற ஜூன் 19-ம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் கமல் ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல் ஹாசனுக்குத் தங்களது மேலான ஆதரவை நல்கும்படி தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கமல்ஹாசன் ராஜ்யசபை எம்.பி ஆக உள்ளார்.

மாநிலங்களவையில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 245. அதில் 233 பேர் சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களால் வாக்களித்து தேர்வு செய்யப்படுவார்கள். மற்ற 12 பேர் ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

ஒவ்வொரு கட்சியும் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்கள் தரப்பில் வேட்பாளரை நிறுத்தும். தமிழகத்தை பொறுத்தவரை, ஒரு மாநிலங்களவை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்கு வேண்டும்.

அண்ணா தி.மு.க.வுக்கு 2 இடம்

தி.மு.க. கூட்டணி கட்சிகளும் சேரும்போது 4 எம்.பி.க்கள் அவர்களுக்கு கிடைக்கும். அதேபோல் அண்ணா தி.மு.க.வுக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு எம்.பி. உறுதி. மேலும் ஒரு எம்.பி.க்கு 2 வாக்குகள் குறைவாக இருக்கிறது. தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் அந்த கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களும் சேரும்போது எளிதாக 2 எம்.பி.க்களை அண்ணா தி.மு.க. பெற்றுவிடும். அதாவது தி.மு.க. – 4, அண்ணா தி.மு.க. – 2 என்ற அடிப்படையில் எம்.பி.க்கள் மனு தாக்கல் செய்தால் போட்டி இருக்காது.

போட்டி இருந்தால் ஜூன் 19-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு: சரத் இரங்கல்

Jai Chandran

விடுதலை 2ம் பாகம் வேறமாதிரி இருக்கும்: இளையராஜா பேச்சு

Jai Chandran

மலேஷியா to அம்னீஷியாமுக்கிய பாத்திரத்தில் கருணாகரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend