மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் மின்நுகர்வோர் காப்பீட்டு தொகையிலிருந்து மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி உள்ளார்.
ஓராண்டின் சராசரி மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கில் எடுத்து மின்நுகர்வோருக்குப் புதிய காப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் தொகையை மின்கட்டணத்துடன் சேர்த்து ஒரே தவணையாகவோ அல்லது மூன்று தவணையாகவோ செலுத்தச் சொல்கிறார்கள்.
கடந்த ஆண்டு முழுக்க கொரோனா பரவலின் காரணமாகப் பெரும்பாலும் மக்கள் தங்கள் இல்லங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டார்கள். இதனால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்தது. ஆகவே, கடந்த ஆண்டின் மின் நுகர்வைக் கணக்கில் கொண்டால் பெரும்பாலான மின்நுகர்வோர் காப்புத்தொகை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், அதை வசூல் செய்வதற்கு உரிய காலம் இதுவல்ல.
நிலவும் அசாதாரண சூழலைக் கணக்கில் கொண்டு கூடுதல் காப்புத் தொகை எனும் கூடுதல் சுமையிலிருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கும்படி தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், கூறி உள்ளார்.