Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மனம்விட்டு சிரிக்க வைக்கும் பேபி அண்ட் பேபி: ஜெய் பேச்சு

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”.

ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது…
எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்கு கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில் இசை வள்ளல் எனப் பட்டம் தந்துள்ளோம். ஜெய் சார், சத்யராஜ் சார், யோகிபாபு சார் என எல்லோரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். வெளியிலிருந்து பார்க்க சினிமா ஈஸியாக தெரிகிறது. திரைத்துறைக்குள் வந்த பின் தான், இங்குள்ள கஷ்டம் தெரிகிறது. பிரதாப் சொன்ன கதையால் தான் இந்தப்படம் நடந்தது. அவருக்கு நன்றி. பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். புதிதாக உங்களை நம்பி திரைக்கு வந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை பாப்ரி கோஷ் பேசியதாவது…
நான் தொலைக்காட்சியில் நடித்து வந்தேன். இந்தப்படத்தில் சத்யராஜ் சாருக்கு மகளாக நடித்துள்ளேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். யோகிபாபு சாருடன் விஸ்வாசம் படத்திலேயே நடித்துள்ளேன். இப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. கீர்த்தனா மேடமுடன் ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருந்தது. ஜெய், பிரக்யா நிறைய ஆதரவு தந்தார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது.

நடிகர் பழைய ஜோக் தங்கதுரை பேசியதாவது…
கண்ணுக்கு மையழகு இந்தப்படத்துக்கு ஜெய் அழகு, எங்கேயும் எப்போதும் படத்தில் அவருடன் நடித்தேன், இப்போது தான் மீண்டும் நடித்துள்ளேன் நன்றி. தெலுங்குல மகேஷ்பாபு மாதிரி, தமிழுக்கு யோகிபாபு, அவர் மாஸாக நடிப்பார் இவர் கிளாஸாக காமெடியில் அசத்துவார். சத்யராஜ் சார் எல்லா கேரக்டரிலும் அசத்திவிடுகிறார். நிறைய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மொட்டை ராஜேந்திரன் சாருடன் எனக்கு காம்பினேசன் காட்சிகள், ஜாலியாக வந்துள்ளது. எல்லா தொழில் நுட்ப கலைஞர்களும், கடினமாக உழைத்துள்ளனர். எல்லோரும் பேபியோட ஹேப்பியா பார்க்க கூடிய படம். அனைவரும் வந்து படம் பாருங்கள் நன்றி.

நடிகை கீர்த்தனா பேசியதாவது,
பேபி பேபி எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு நன்றி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளேன், முதலில் ஜெய் அம்மா என்றவுடன் தயங்கினேன், சத்யராஜ் சாருக்கு ஜோடி என்றவுடன் ஒகே சொல்லிவிட்டேன். எனக்கு நல்ல கேரக்டர், பேபியை வைத்து அழகாக கதை சொல்லியுள்ளார்கள். பிரதாப்புக்கு நன்றி.

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது…
இசை வள்ளல் டைட்டில் கொஞ்சம் ஓவர் தான், அன்பால் தந்துள்ளார்கள் நன்றி. இப்படம் ஆரம்பிக்கும்போது இருந்த பாஸிடிவிடி படம் முழுக்க இருந்தது. படம் முழுக்க நிறைய நட்சத்திரங்கள், இத்தனை பெரிய நடிகர்கள் முதல் படத்தில் கிடைப்பது அரிது. அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி, அனைவரும் கொண்டாடும் வகையில், சிரித்து மகிழும் படமாகத் தந்துள்ளார் பிரதாப். யோகிபாபுவை கேரக்டர் ரொலில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஜெய் அவர் பாத்திரத்தை மிக அருமையாகச் செய்துள்ளார். சினிமாவில் புதிதாகத் தயாரிப்புக்கு வருவது எளிதல்ல. யுவராஜ் சாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றியடையவும், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் விஜய் ஆதிராஜ் பேசியதாவது…
சத்யராஜ் சார் புரட்சித் தமிழன் இல்லை, இனிமேல் அவர் பான் இந்தியன் ஸ்டார். சத்யராஜ் சாருடன் இரண்டு படங்கள் செய்யும் ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்தது நன்றி. இங்கு அவரைப் பார்த்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் யுவராஜ் சமீபத்தில் தான் பழக்கம். படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார். பிரதாப்புக்கு என் வாழ்த்துக்கள். யோகிபாபு மின்னும் ஸ்டார் எங்கு பார்த்தாலும் அவர் முகம் தான். ஜெய் இன்னும் நிறையப் படங்கள் நடிக்க வேண்டும். பேபி & பேபி படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பிரதாப் பேசியதாவது…
இந்தக்கதையை எழுதியவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன், இறுதியாக யுவாராஜ் சாரை சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்த கதாப்பாத்திரத்துக்கு இவரை போடலாம், அல்லது இவரைப் போடலாம் என, அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணைத்தார். நான் தான் பட்ஜெட் பற்றிக் கவலைப்பட்டேன். இந்தக்கதையை சத்யராஜ் சாரிடம் சொன்னதும் அவர் ஒத்துக்கொண்டார், அவர் படத்திற்குள் வந்ததும் படமே மாறிவிட்டது. ஜெய் சார் இப்படத்திற்காக அவ்வளவு உழைத்தார். ரம்ஜான் நோம்பினில் மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார். யோகிபாபு சார், அவர் தான் இந்தப்படம் நடக்கக் காரணம். கீர்த்தனா மேடம் முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் ஆனால் சத்யராஜ் சார் ஜோடி என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரக்யா நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். ஒளிப்பதிவாளர் மிக அருமையாகச் செய்து தந்துள்ளார். நான் இமான் சார் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், தயாரிப்பாளரும் அவரையே சொன்னார். அவர் கதை கேட்டு உடனே ஒத்துக்கொண்டார். அவர் இசையில் எல்லாப்பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். கண்டிப்பாக இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும். படம் நன்றாக எடுத்துள்ளோம்.

நடிகர் யோகிபாபு பேசியதாவது….
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த பிரதாப் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. பிரதாப் 17 வருட நண்பர். 17 வருடம் முன்பு ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளோம். இன்னக்கி அவர் இயக்குநர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும். இந்தப்படம் மிக நல்ல அனுபவம். சத்யராஜ் சாருடன் எப்போதும் கவுண்டமணி சார் பற்றி பேசி சிரிப்போம். ஜெய் இன்னும் எப்படி இளைமையாகவே இருக்கிறீர்கள் எனக்கேட்டேன், அவர் சிங்கிளா இருப்பதால் யங்கா இருக்கேன் என்றார். சீக்கிரம் அங்கிளா ஆகிவிடப்போகிறீர்கள், கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் சத்யாராஜ் பேசியதாவது…
இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நிறைய நடிகர்கள், ஆனால் இத்தனை பேரை ஒருங்கிணைத்து மிக அழகாக எடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் எளிமையாக அவரது மொழியில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படித்தான் நமக்கு வரும் மொழியில் பேச வேண்டும். நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். ராஜா ராணி வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. பார்டி படம் இன்னும் வரவில்லை, மதகதராஜா போல் அந்தப்படம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படத்தில் அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கீர்த்தனா எனக்கு ஜோடி. நாமளும் இன்னும் இளைஞர் தான். தயாரிப்பாளர் அப்பாவி போல் இருந்தாலும், ரொம்பவும் விவரமானவர். பிரதாப் இத்தனை நடிகர்களை வைத்து, வெகு அழகாக வெகு சீக்கிரமாக திட்டமிட்டுப் படத்தை எடுத்துள்ளார் வாழ்த்துக்கள். நானும் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி.

நடிகர் ஜெய் பேசியதாவது…
இயக்குநர் கதை சொல்ல வந்த போது, சத்யராஜ் சார், யோகிபாபு டார்லிங் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றவுடனே நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஷூட்டிங்கில் பட்டினியாக நடித்தது கஷ்டமாகத் தெரியவில்லை. பட ஷூட்டிங்கில் சத்யராஜ் சார், யோகிபாபு என எல்லோரும் வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்து விடுவார்கள் அது தான் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெரிய ஆர்டிஸ்ட் இருப்பார்கள், ஆனால் அதை மிக அழகாக எடுத்துள்ளார். இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல், மனம் விட்டுச் சிரித்து மகிழும் படமாக இப்படம் இருக்கும். பார்த்து விட்டுச் சொல்லுங்கள் நன்றி.

Related posts

முதல் சென்னை ஓபன் டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப்

Jai Chandran

Yaanai – First single YelammaaYela hits 1.5 M+ Views

Jai Chandran

New Movie “Nalla Perai Vaanga Vendum Pillaigale”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend