படம்: பயர்
நடிப்பு: பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன் , சாக்ஷி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜே எஸ் கே, சிங்கம்புலி, எஸ் கே ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ்
தயாரிப்பு: ஜே எஸ் கே
இசை: டி கே
ஒளிப்பதிவு: சதீஷ். ஜி.
இயக்கம்: ஜே எஸ் கே
பி ஆர் ஓ: நிகில் முருகன்
பிசியோதெரபி டாக்டராக இருக்கும் தன் மகன் காசியை (பாலாஜி முருகதாஸ்) காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் தருகின்றனர். அது பற்றி விசாரிக்க தொடங்குகிறார் இன்ஸ்பெக்டர் சரவணன் ( ஜே எஸ் கே). ஸ்லோவாக தொடங்கும் விசாரணை படிப்படியாக வேகம் எடுக்கிறது. ஒரு கட்டத்தில் டாக்டர் காசி மன்மத லீலையில் கை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை பலாத்காரம் செய்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குற்றவாளி என்று விசாரணையில் தெரிகிறது. இந்த விஷயம் போலீசுக்கு தெரிய வந்தவுடன் விசாரணை தீவிரமடைகிறது. காசி தலைமறைவாக இருக்கிறாரா? கொல்லப்பட்டாரா? வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டாரா? அல்லது அவர் பெற்றோர் பொய் செல்கிறார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. இதன் முடிவு எதிர்பாராத திருப்பமாக அமைகிறது.
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை தங்களது இச்சைக்கு பயன்படுத்தும் ஒரு சில டாக்டர்கள் பற்றி ஏற்கனவே நிஜ சம்பவங்கள் நடந்திருக்கிறது. அந்தச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே.
காசி என்ற பிசியோதெரபி டாக்டர் கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார். அவருக்கு எங்கோ மச்சம் இருக்கிறது இல்லாவிட்டால் இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
நல்லவன்போல் நடித்து தன்னிடம் சிகிச்சைக்கு வரும் சாந்தினி தமிழரசன், ஷாக்சி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி ஆகியோரை ஜூஸ் பிழிவதுபோல் பிழிந்து கட்டிலில் புரட்டி எடுத்து மன்மதராசாவாக வலம் வருகிறார் பாலாஜி முருகதாஸ்.
சாந்தினி தமிழரசன், ஷாக்சி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி இவர்களெல்லாம் இவ்வளவு கவர்ச்சி காட்டி நடிப்பார்களா என்பதை வேறு எந்த இயக்குனரும் யோசித்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் இயக்குனர் ஜே எஸ் கே நன்றாகவே யோசித்திருக்கிறார். எப்படி ஒரு கதையை சொன்னால் இப்படி ஒரு கவர்ச்சி நடிப்பை இவர்களெல்லாம் தருவார்கள் என்பதை நன்றாகவே கணித்திருக்கிறார் அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ் கூட போடலாம்.
பெண்கள் யார் பேச்சிலும் மயங்கி ஏமாந்து விடக்கூடாது என்ற மெசேஜ் உடன் கூடிய படமாக இருந்தாலும் இது போன்ற கவர்ச்சி காட்சிகளை அந்தக் கால மலையாள படங்களில்தான் 90ஸ் கிட்ஸ்கள் பார்த்திருப்பார்கள். அந்த வாய்ப்பு தற்போது 2k கிட்ஸ்களுக்கு பயர் படம் மூலம் கிடைத்திருக்கிறது. நண்பர்களோடு சென்று மஜா செய்து பார்க்க சரியான படம் தான் பயர்.
படத்தை தயாரித்து இயக்கி சரவணன் என்ற இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடித்திருக்கிறார் ஜே எஸ் கே. நடிப்பில் நிதானம்,, விசாரணையில் நெளிவு சுளிவு, இயக்கத்தில் இளவட்டங்களை வளைத்துப் போடும் ஃபார்முலா என்று பின்னி பெடலெடுத்திருக்கிறார். கடைசியில் வரும் சஸ்பென்ஸ் சட்டென யாராலும் யூகிக்க முடியாதது திரில் அனுபவம்.
டி கே இசையும், சதீஷ். ஜி. ஒளிப்பதிவும் காட்சிக்கு கைகுலுக்கி இருக்கிறது.
பயர் – இளவட்டங்கள் காதுகளுக்குள் கிசுகிசுத்துக் கொண்டே படத்தை பார்ப்பார்கள்.