இசைஞானி இளையராஜா சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. ராயல் ஃபில்ஹாா்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘வேலியண்ட்’ என்ற தலைப்பிலான சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகா்கள் பரவசத்தில் ஆழ்ந்தனா். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியா் என்ற சாதனையை இளையராஜா படைத்தாா்.
லண்டனில் சாதனை படைத்து சென்னை திரும்பிய இளையராஜாவை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, இளையராஜாவை வரவேற்றாா்.
பின்னர் பேட்டி அளித்த இளையராஜா சிம்பொனி இசையை உலகம் முழுவதும் பரப்புவேன் என்றார்.
சிம்பொனி இசை அமைத்து சாதனை புரிந்த இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டப்பட்டது. அதேபோல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் .
இந்நிலையில் 34 நாட்களில் சிம்பொனி எழுதி லண்டளில் அரங்கேற்றி சரித்திரம் படைத்த இசை தேவன் இளையராஜா சாரை திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு நிர்வாகிகள் பி. வாசு , கே. எஸ். ரவிக்குமார் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி சந்தித்து கௌரவித்து மகிழ்ந்தனர்.