Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட இயக்குனர் சொர்ணம் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திரைப்பட இயக்குனரும் கதாரியர் வசனகர்த்தவுமான சொர்ணம் திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான  மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய “ஒரே ரத்தம்” எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். நான் நடத்திய “இளைய சூரியன்” வார ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக் கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி- கலை இலக்கியப் பணிக்கு பெருமை சேர்த்தவர்.

முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று – முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கெளரவப்படுத்தப்பட்டவர்.

எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்த சொர்ணத்தை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Related posts

இரு மாறுபட்ட பாத்திரத்தில், நடித்தது மிகவும் பிடித்திருக்கிறது: நடிகர் டாம் ஹார்டி

Jai Chandran

Prime Video Unveils the Teaser of Upcoming Action Thriller ‘Mahaan’

Jai Chandran

சுஷாந்த் தற்கொலையில் காதலியை வளைக்கும் போலீஸ்.. ரூ 15 கோடி எங்கே? நடிகர் தந்தை புகாரால் பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend