வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் கர்ணன், தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன். தேனி ஈஸ்வர், நடிகர்கள் நட்டி, யோகிபாபு, மதன்குமார், நடிகைகள் ரஜிஷா விஜயன், கவுரி, லட்சுமி, ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், கவிஞர் யுகபாரதி, எடிட்டர் செல்வா, நடன இயக்குனர் சாண்டி, பாடகி தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
கதாநாயகன் தனுஷ் ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அவரால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அமெரிக்காவிலிருந்தபடி கர்ணன் பட விழாக்குழுவினருக்கு ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார். அது விழாவில் வாசிக்கப்பட்டது. அதில் சீறும் கேள்விகளை ஏந்தி கர்ணன் வருவான் என தனுஷ் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தில் தனுஷ் கூறியிருந்தாவது:
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் கர்ணன் குழுவின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டதற்கும், கர்ணன் திரைப்படத்திற்கு தொடர்ந்து பெரும் ஆதரவு தந்து வரும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றி.
உங்களுடன் இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாகவே இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கற, கொண்டாடுற நிறைய பேர் இந்த படத்துல இருக்காங்க. இந்த படம் எனக்கு ஒரு நடிகனா, மனிதனா நிறைய விஷயங்கள கத்துகொடுத்துச்சு.மாரி செல்வராஜோட உறுதியும், அவரோட ஹியூமானிட்டியும் தினம் தினம் ஒரு சர்ப்ரைஸா இருந்தது. ஒரு பெர்சன் மாரி மாதிரி ஒரு நல்ல ஹியுமனா இருக்க முடியாமனு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னைய உங்க கர்ணனா மாத்துனத்துக்கும், என் லைஃப்ல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்துகிட்டு இருக்கு.
என்னையும் நான் தேர்ந்தெடுக்குற கதைகளையும் அவ்ளோ நம்புற தாணு சார்க்கு என் நன்றி. அவர் என் மேல் வச்சிருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்கு ஒரு நடிகனா இருக்கிற பொறுப்புக்களை ஞாபகப்படுத்திட்டே இருக்கு. இன்னும் அதிகமா உழைக்கணும் அப்படிங்கற சக்திய கொடுத்துட்டே இருக்கு.
நம்ம மண்ணோட இசை வழியாகவும் அந்த மண்ணின் கலைஞர்கள் மூலமாகவும் சந்தோஷ் கர்ணனுக்கு ஒரு யானை பலத்தை சேர்ந்த்திருக்கார். அவருக்கு தேங்க்ஸ். எனக்கு வெல் விஷர்ஸ் கம்மி தான், என்னோட ஜெனியுன் ஆன வெல் விஷரா இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சந்தோஷ்..
இந்த இடத்துல நான் மீனா சந்தோஷ் அவர்களுக்கும் என் நன்றியை சொல்லணும் அவங்கதான் எனக்கு மாரி செல்வராஜ அறிமுகப்படுத்தி வச்சாங்க.
தேங்க் யூ தேனி ஈஸ்வர் சார், உங்களோட ஒர்க்க பார்த்த எல்லாரும் அத அவ்ளோ நேசிக்கிறாங்க ஆல் த பெஸ்ட் சார்.
கர்ணனோட மொத்த காஸ்ட் அண்ட் க்ரூக்கும் அவங்க டெடிகேஷன், லவ்,, சப்போர்ட் எல்லாத்துக்கும் நனறி. இந்த படத்துக்காக உடல் ரீதியா, மனரீதியா, எமோஷனலா என்னைவிட அதிகமான உழைப்ப அவங்க எல்லாருமே போட்டுருக்காங்க. கர்ணன் இவ்ளோ நம்பகதன்மையோட ஆதண்ட்டிக்கா இருக்கு அப்படின்னா அது அவங்க எல்லாரோட கடும் உழைப்பாலதான்.
எனக்கு தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்து வரும் என் ரசிகர்களுக்கு நன்றி. நான் என்னோட பெஸ்ட்ட கொடுக்க, எப்போதும் ட்ரை பண்றேன். கர்ணன் உங்க எல்லாரையும் சந்தோஷபடுத்தும்னு நம்புறேன். இங்க வந்ததுக்கு எல்லாருக்கும் மறுபடியும் நன்றி. கர்ணன் வருவான், சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்.
ஓம் நமசிவாயா
இவ்வாறு தனுஷ் கடிதத்தில் கூறி உள்ளார்.