படம்: டியர் ரதி
நடிப்பு: சரவணா விக்ரம், அஸ்லி அமான், பாலச்சந்திரன், சாய் தினேஷ், பத்ரம் யுவராஜ், சுப்ரமணியன்,
தயாரிப்பு: மோகனா மஞ்சுளா எஸ்
இசை : எம் எஸ் ஜோனஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு: லோகேஷ் இளங்கோவன்
இயக்கம்: பிரவீன் கே மணி
பிஆர்ஓ: சக்தி சரவணன்
ஐடி கம்பெனியில் வேலை செய்யும் மதன் (சரவணா விக்ரம்) பெண்களிடம் பேசுவதற்கு வெட்கமாகவும் தயக்கமாகவும் இருப்பதாக உணர்கிறார். அதை போக்குவதற்காக மதனை பலான வீட்டிற்கு அவரது நண்பர் அழைத்து செல்கிறான். அங்கிருக்கும் ரதியிடம் (அஸ்லி அமான்) மனதை பறிகொடுக்கும் மதன் அவருடன் ஒரு நாள் ஜோடியாக ஊரைச்
சுற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பணம் கொடுத்தால் வருகிறேன் என்று ரதி கூற, அதற்கு சம்மதிப்பதால் அவனுடன் செல்கிறாள். இதற்கிடையில் ரதியை ரவுடி கூட்டம் தேடி அலைகிறது. அவர்களிடம் ரதி சிக்கினாரா? மதன் காதல் என்னவானது? ரவுடிகள் ரதியை தேடுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு படம் பதில் அளிக்கிறது.
கதையாக பார்த்தால் இப்படத்தை இரண்டு வரியில் தெளிவாக கூறி விடலாம். ஆனால் திரைக்கதை என்ற பெயரில் எந்த ஜானர் வகையை சேர்ந்த படம் என்று கணிக்க முடியாத அளவுக்கு பிளாக் காமெடி, சஸ்பென்ஸ் திரில்லர், ஆக்சன் காமெடி, லவ் ஜானர் என பலவகை ஜானர்களை கலந்து கட்டி குருமாவையும் சாம்பாரையும் கலந்தடிப்பதுபோல் அடித்திருக்கிறார் இயக்குனர். இதனால் காட்சிகள் ஜம்ப் ஆவதுபோல் இருக்கிறது. ஆனால் இது வித்தியாசமான முயற்சி என்கிறது படக்குழு.
புதுமுக ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார் சரவணா விக்ரம். ரொமான்ஸ் ஹீரோவுக்கு பொருத்தமான முகம் ஆனால் ரொமான்ஸ்தான்
செய்யவில்லை.
பலான இடத்துக்கு சென்றுவிட்டு அங்கு அஸ்லி அமானை பார்த்ததும் அவரது அழகில் மயங்கி காதலில் விழுந்து விடுகிறார்.
ஒரு நாள் முழுக்க வெளியில் என்னுடன் ஊர் சுற்ற வேண்டும் என்று அஸ்லியிடம் கேட்கும் சரவணா ஒப்பந்தபடி அவருடன் ஊர் சுற்ற தொடங்கியதும் அவர்கள் பின்னாலேயே கதையும் நகரத் தொடங்கி விடுகிறது. இவர்கள் ஒரு பக்கம் சுற்ற இவர்களைத் தேடி ரவுடி கூட்டம் இன்னொரு பக்கம் அலைவது காட்சிகளை கிழக்கும் மேற்குமாக எதிரெதிர்புறம் இழுத்துச் செல்கிறது.
அஸ்லி அமான் விபச்சார பெண்ணாக நடித்திருந்தாலும்
விரசம் இல்லாமல் நடித்து கவர்கிறார்.
இவர்களுடன் பாலச்சந்திரன், சாய் தினேஷ், பத்ரம் யுவராஜ், சுப்ரமணியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
மோகனா மஞ்சுளா எஸ் படத்தை தயாரித்திருக்கிறார்.
எம் எஸ் ஜோனஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார்.
லோகேஷ் இளங்கோவனின் கேமரா, கண் போன போக்கில் சுழன்றிருக்கிறது.
எடிட்டரின் கத்தரி முன்னும்.பின்னுமாக வெட்டித் தள்ளியிருக்கிறது.
டியர் ரதி – காதை சுற்றிமூக்கை தொடும் வேலை.

