படம்: கிளாப்
நடிப்பு: ஆதி, ஆகான்ஷா சிங், நாசர். கிரிஷ்ணா குருப். பிரகாஷ்ராஜ், முண்டாசுபட்டி ராமதாஸ், மைம் கோபி, பிரம்மாஜி, ஐ பி.கார்த்திகேயன், குமார் சந்தான கிருஷ்ணன், மீரா வாசு
தயாரிப்பு: ஐ.பி.கார்த்திகேயன்
இணை தயாரிப்பு: பி.பிரபா பிரேம்,மனோஜ், ஹர்ஷா
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: பிரவின் குமார்
இயக்கம்: பிரித்வி ஆதித்யா
பி .ஆர்.ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா
ஒட்டப் பந்தய வீரரான ஆதி விபத்தொன்றில் தனது ஒரு காலை இழக்கிறார். இதனால் அவரது ஓட்டப் பந்தய சாதனை கனவு நொறுங்குகிறது. கிராமத்து பெண் கிரிஷ்ணா குருப் உள்ளூர் ஓட்டப்பந்தய போட்டியில் குறைந்த நேரத்தில் ஓடி சாதனை படைத்திருக்கிறார். அவர் விளையாட்டு துறையில் வேலைக்கு மனு செய்து கிடைக்காததை அறியும் ஆதி அந்த பெண் ணுக்கு சரியான பயிற்சி அளித்து தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் சாதனை செய்ய வைக்க எண்ணுகிறார். கிரிஷ்ணாவை ஊரிலிருந்து அழைத்து வருகிறார் ஆதி. ஆனால் அப்பெண்ணுக்கு கோச்சர்கள் யாரும் பயிற்சி தர மறுக்கின்றனர். அதற்கு காரணம் உயர் அதிகாரி நாசரின் செயல்தான் என்பது ஆதிக்கு தெரிகிறது. அவரை நேருக்கு நேராக சந்தித்து நியாயம் கேட்கிறார். ஆனால் ஆதி மீதுள்ள பழைய கோபத்தால் ஆதியை விரட்டியடிக்கிறார் நாசர். தனி ஆளாக நிற்கும் ஆதி, கிரிஷ்ணாவுக்கு பயிற்சி அளித்து அவரை எப்படி தேசிய அளவில் சாதனை படைத்த பெண்ணாக மாற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஆதி நடிப்பில் வந்திருக்கும் படம். அதிரடி, குத்தாட்டம் என்று ஆர்ப்பாட்டம் செய்யாமல் ஓட்டப்பந்தய விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார். அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே விபத்தில் சிக்கி அதற்காக நடக்கும் ஆபரேஷனில் ஒரு கால் அகற்றப்பட்ட வராக அதிர்ச்சி தரும் கதாபாத்திமாக கண்முன் தோன்றுகிறார்.
ஒன்றைக் கால் வைத்துக்கொண்டு ஆதி படம் முழுக்க நடித்து சமாளிப்பாரா என்ற கேள்வி எழ அதற்கு தனது உன்னத நடிப்பின் மூலம் பதில் அளித்திருக்கிறார்.
மதுரை பக்கத்து கிராமத்தில் வாழும் கிரிஷ்ணா வீட்டுக்கு சென்று அவரை ஓட்டப் பந்தயம் மறுபடியும் ஓடக் வரும்படி அழைத்து ஊர்மக்களால் அவமானப்படும் ஆதி அதை தங்கிக் கொண்டு தான் நினைத்த படி கிரிஷ்ணா வை சென்னை அழைத்து வந்து அவரை ஓட்டப்பந்தய போட்டிக்கான பயிற்சி யில் சேர வைக்க அலையும் அலைச்சல் மூச்சு வாங்கிவிடுகிறது. எந்த கோச்சரும் பயிற்சி தர மறுத்ததும் தானே கோச்சராக மாறிபயிற்சியை துவங்கும்போது நம்பிக்கை அளிக்கிறார்.
ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடித்திருக்கும் கிரிஷ்ணா குருப் கடுமையான பயிற்சிகள் மேற்கொள்வதும் நீண்ட தூர போட்டிகளில் திறமையாக ஓடி ஜெயிப்பதுமாக உற்சாகம் தருகிறார்.
நாசர் விளையாட்டு துறை அதிகாரியாக வருகிறார். ஆதி மீதுள்ள கோபத்தில் கிரிஷ்ணாவின் திறமையை காட்ட முடியாமல் தடுக்கும் வேலைகளை கட்டவிழ்த்துவிட்டு வில்லனாக மாறிவிடுகிறார்.
ஆதியின் மனைவியாக வரும் ஆகன்ஷா சிங் பொறுமையாக நடித்து கவர்கிறார். காதலித்து திருமணம் செய்தாலும் இருவரும் ஒரே வீட்டில் 4 வருடமாக பேசாமல் வாழ்க்கை நடத்துவதும் அந்த நேரத்தில் ஆதி கிராமத்திலிருந்து கிரிஷ்ணாவை ஓட்டப்பந்த்ய பயிற்சிக்காக அழைத்து வந்ததும் அதைக் கண்டு ஷாக் ஆகி ஆகன்ஷா தனது அப்பா வீட்டுக்கு திரும்பும்போது இந்த விவகாரம் விவாகரத்தில்தான் போய்முடியும் என்று எண்ணினால் திருப்பு முனையான முடிவால் இன்ப அதிர்ச்சி தருகின்றனர்.
கெஸ்ட் ரோல் என்றாலும் வேடத்தோடு ஒன்றிப்போயிருக்கிறார் பிரகாஷ் ராஜ். முனிஷ்காந்த் ஆதிக்கு உதவும் பாத்திரமாக வநு அவ்வப்போது சிரிப்பூட்டுகிறார்.
ஜி.பி.கார்த்திகேயன் தயாரித்திருப்பதுடன் ஆங்கில பத்திரிகை நிருபராக சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் பிரித்வி ஆதித்யா சிந்தாமல் சிதறாமல் படத்தை கடைசிவரை ஆர்வம் குறைந்து விடாமல் இயக்கி இருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு பலம் இளைய ராஜாவின் இசை. மயிலிறகால் வருடுவதுபோன்ற அவரது இதமான இசை மற்றும் பாடல்கள் படத்தை தென்றாலாக நகர்த்தி செல்கிறது.
கண்களில் பதியும் ஒளிப்பதிவால் நிறைவான பணி தந்திருக்கிறார் பிரவின் குமார்.
கிளாப் – கைதட்டல் பெறுகிறது.