மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் ( 2D Entertainment) நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார்.
இது குறித்து பட இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது:
இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது.
குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும்.
இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர் பி பிலிம்ஸின் (RB Films) எஸ்.ஆர்..ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை மைக்கேல் செய்கிறார். உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.