படம்: ஆனந்தம் விளையாடும் வீடு
நடிப்பு: கவுதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சவுந்தர் ராஜா, முனிஷ்ராஜ், சிங்கம் புலி, நமோ நாரயணன், சினேகன், ஜோ மல்லூரி, நக்கலைட் செல்ல, சூப்பர் குட் சுப்ரமணி, விஐ கதிரவன், மவுனிகா,மைனா சுசானே, பிரியங்கா, மதுமிதா, சுஜாதா, நக்கலைட் தனம், ஜானகி, வெண்பா, சுபாதினி, சிந்துஜா
தயாரிப்பு:ரங்கநாதன்
இசை: சிந்துகுமார்
ஒளிப்பதிவு: பொர்ரா பாலபரணி
இயக்கம்: நந்தா பெரியசாமி
பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா
அம்மா, அப்பா, அண்ணன் தம்பி, மாமன், மச்சன், தங்கை, பேரன் பேத்தி, மருமகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அருகருகே வசிக்கிறார்கள். பாசத்தில் இணைந்தி ருக்கிறார்கள். மூத்த பிள்ளை சரவணன் தனது மகளுக்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். ஆனால் அவர் களை தனது வீட்டில் தங்க வைக்க முடியாத நிலையில் தாய் மாமன் வீட்டில் தங்க வைக்கிறார். மறுநாள் தாய் மாமன் மனைவி வீட்டை நாசமாக்கிவிட்டதாக புலம்புகிறார். இதையறிந்து பெரிய வீட்டை கட்டி அதில் அம்மா, அப்பா உள்ளிட்ட அனைத்து குடும்பத்துடனும் ஒன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுகிறார் சரவணன். அதைக்கேட்டு தம்பி சேரன் நிலத்தை தர முன் வருகிறார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் டேனியல் பாலாஜி அந்த நிலத்தை அபகரிக்க திட்டமிடுகிறார். பல வழிகளில் முயன்றும் முடியாத நிலையில் வெட்டியாக திரியும் சரவணனின் இரண்டு தம்பிகளை தன் கைக்குள் போட்டுக் கொண்டு குறிப்பிட்ட நிலத்தை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்லி சரவணன் குடும்பத்தில் கலகம் ஏற்படுத்துகிறார். இது பெரிய பிரச்னையாக வெடித்து குடும்பத் துக்குள் அடி தடி ஏற்படுகிறது. இந்த குழப்பத்திலிருந்து சரவணன் குடும்பம் மீண்டதா அல்லது சிதறிப்போனதா ?என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
கூட்டு குடும்ப கதைகள் என்பது அரிதான நிலையில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒன்று என வருகிறது. அப்படியொரு கூட்டு குடும்ப கதையாக இப்படத்தை இயக்கி இருக்கிறார் நந்தா பெரியசாமி.
ஆனந்தம் விளையாடும் வீடு என்று டைட்டில் அழகாக இருந்தாலும் சொத்து என்று வந்த பிறகு அந்த குடும்பத்தில் ஆனந்தம் என்பதே இல்லாமல் போவதுதான் எதார்த்தம் என்பதை ஒரு பார்வையில் இப்படம் உணர்ந்த்துகிறது.
குடும்பத்தினர் அனைவரும் ஒரே வீட்டில் வாழவேண்டும் என்று சரவணன் மனதில் ஏற்படும் ஆசையை அவரது தம்பிகள் சேரன்,சினேகன் வரவேற்று பெரிதாக வீடு கட்ட ஒத்துழைப்பு தருகின்றனர்.
ஒற்றுமையாக இருக்கும் தேன்கூட்டில் கல் எறிந்ததுபோல் சரவணன் குடும்பத்தில் டேனியல் பாலாஜி வஞ்சம் வைத்து அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்துவது உச் கொட்ட வைக்கிறது.
சேரன் சம்மதித்தாலும் அவரது மனைவி சொத்தை விட்டுத்தர சம்மதிக்காமல் நடத்தும் ஆர்ப்பாட்டம் பல குடும்பங் களில் நடக்கும் அக்கப்போர்.
சொத்துக்காக பெற்ற தாய் தந்தையை எதிர்க்கும் மகன் சவுந்தரராஜாவும் மற்றொரு தம்பியும் அவர்களை கழுத்தை நெறிக்கும் அளவுக்கு செல்வது பதற வைக்கிறது.
சரவணன் மகனாக கவுதம் கார்த்திக் நடித்திருக்கிறார். அவரும் தந்தையை போலவே குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்கிறார். பெரிய நட்சத்திர பட்டாளத்தில் இவர் பெருங்காய வாசனையாக மணக்கிறார்.
ஹீரோயினாக ஜீவிதா, டாக்டர் ராஜசேகர் மகள் ஷிவாத்மிகா அறிமுகமாகி உள்ளார்.பக்கத்துவீட்டு பெண்போல் இருக்கும் ஷிவாத்மிகா க்கு நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பில்லை.
டேனியல் பாலாஜி வில்லத்தனம் ஒரே குடும்பத்தின் மீது மட்டும் சுற்றிக் கொண்டிருப்பது ஏனோ?
பண்பட்ட நடிப்பை சரவணன்,சேரன் வெளிப்படுத்தி இருக்கின்றனர். மனைவியின் தூக்கிட்டு சாவதாக கூறும் மிரட்டலுக்கு பயந்து சேரன் செய்வத றியாது நிற்பது சரியான தவிப்பு.
படத்துக்கு சித்துகுமார் இசை அமைத் திருக்கிறார். பொர்ரா
பாலபரணி ஒளிப்பதிவு கிராமத்து குடும்பத்தை அப்பட்டமாக காட்சிபடுத்தி உள்ளது.
கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை சொல்ல வேண்டுமென்று முன்வந்தால் அதில் உள்ளவர்களின் ஈகோவை சொல்லாமல் இருக்க முடியாது என்பதற்கு நந்தா பெரியசாமியின் இப்படமும் ஒரு சாட்சி.
ஆனந்தம் விளையாடும் வீடு – ஒரு குடும்பத்தின் கதை.