படம்: ஆடு ஜீவிதம்
நடிப்பு: பிரித்விராஜ், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கே ஆர். கோகுல், ,தலிப் அல் பலுசி, ரிகா
தயாரிப்பு: விஷுவல் ரொமான்ஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒலிப்பதிவு:சுனில் கே எஸ்
இயக்கம்: பிளஸ்ஸி
பி ஆர். ஒ: சுரேஷ் சந்திரா
ஆற்றில் மணல் அள்ளும் பிரித்விராஜ் தனது குடும்பத்தை வசதியாக வைக்க அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரபு நாட்டுக்கு செல்கிறார். அவருடன் இன்னொரு நண்பரும் செல்கிறார். சென்ற இடத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் ஒட்டகம், ஆடு மேய்க்கும் வேலை தரப்படுகிறது. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை நடத்த வேண்டிய சூழலில் சிக்கும் அவர்கள் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் பாலை வனத்தில் இருந்து தப்பி ஊர் திரும்ப முயற்சிக்கின்றனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற முடிந்ததா அல்லது பாலைவனத்திலேயே மடிந்தார்களா என்பதற்கு வெயிலின் வெப்பத்துடன் பதில் அளிக்கிறது ஆடுஜீவிதம் கிளைமாக்ஸ்.
பிரித்திவிராஜ் இதுவரை ஏராள மான படங்களில் நடித்திருந்தாலும் அவர் உயிரும் உடலும் கொடுத்து நடித்திருக்கும் படம் ஆடுஜீவிதம்.
டிப் டாப்பாக அரபு நாட்டுக்கு செல்லும் பிரித்திவிராஜ் அங்குள்ள ஒட்டக, ஆடு பண்ணை முதலாளியிடம் சிக்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழந்து, அழகிழந்து பாலைவன பிச்சைக்காரன்போல் மாறுவது மனதை உலுக்குகிறது.
எலும்பும் தோலுமாக மாறி காலில் கொப்பபலங்கள் வலிக்க பாலை வனத்தில் பிரித்விராஜ் நடக்கும் காட்சிகள் நம் கால்களில் வலிகளை ஏற்படுத்த செய்து விடுகிறது. இவ்வளவு கடுமையாக கூட ஒரு நடிகரால் உழைக்க முடியுமா என்று வியக்க வைக் கிறார்.
அமலாபால் பிரித்விராஜ் மனைவி யாக சில காட்சிகளில் வருகிறார் செல்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ் பிரித்திவிராஜை பாலைவனத்தில் இருந்து தப்பிக்க வைத்து அழைத்து வரும் காட்சிகள், மணல் புயலில் அவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கும் பரிதாபம் திடுக்கிட வைக்கிறது.
அரபு நாட்டுக்கு ஒட்டகம் மேய்க்க கூட இனிமேல் இங்கிருந்து யாரும் செல்வதற்கு யோசிப்பார்கள் அந்த அளவிற்கு இங்கிருந்து வேலை தேடி செல்லும் நபர்கள் படும் அவஸ்தையை ஆக்குவேறு ஆணிவேராக காட்டி எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறார் இயக்குனர் பிளஸ்சி
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசை மணல் புயலை தாண்டி காதுக்குள் பாய்கிறது.
ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி இயற்கையான ஒலிகளை பதிவு செய்து செவிப்பறையில் மோத விடுகிறார்.
சுனில் கே எஸ் ஒளிப்பதிவு அரங்கில் இருப்பவர்களை பாலைவன மைதானத்திற்கு கொண்டு சென்று அமர்த்தி விடுகிறது.
ஆடு ஜீவிதம் பாலைவன அனுபவம்.