Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சசிகுமார் நடிக்கும் “டெத் இரயில்வே” பக்கா கமர்ஷியல் வரலாற்று படமாக உருவாகி உள்ளது : இயக்குனர் பேட்டி

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார் தரணி ராசேந்திரன்.

இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டுள்ளது ‘டெத் இரயில்வே’. இந்தியா தனது சொந்த மண்ணில் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அதே வேளையில், இந்திய வீரர்கள் தொலைதூர எல்லைகளில் அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகம் அறியப்படாத இந்த வரலாற்றுப் பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டெத் இரயில்வே’ திரைப்படம் போர்க்களத்தின் தீவிரத்துடன் உணர்வுப்பூர்வமான காதலையும் இதில் பேசுகிறது.

இயக்குநர் தரணி ராசேந்திரன் பகிர்ந்து கொண்டதாவது, “இரண்டாம் உலகப்போர் தீவிரமடையும் பொழுது ஜப்பான் பர்மா, நாகலாந்தை ஆக்கிரமித்து இந்தியாவை நோக்கி முன்னேறியது. இந்த வரலாற்றை நேரடியாக படமாக்காமல் அந்த துயரத்தை பதிவு செய்ய விரும்பினேன் அதுதான் டெத் இரயில்வே. கதையை எழுதிவிட்டு தான் அதற்கான நடிகர்களை தேர்வு செய்தேன். சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்திலும் அதாவது INA கமாண்டராகவும் , இந்திய சோல்ஜர்களின் தலைவராக சமுத்திரக்கனியும், அசோக் செல்வன் கேமியோ ரோலிலும் நடித்திருக்கின்றனர். சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு சசிகுமார், சமுத்திரக்கனி நேரடியாக சண்டை போடும் காட்சிகளும் உண்டு.

இந்த படத்தை பக்கா கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம். 1942-44 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த போரையும், போரால் எளியவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இதில் பதிவு செய்திருக்கிறோம்.

படப்பிடிப்புக்கு நாகலாந்தில் அனுமதி கிடைக்கவில்லை. அதனால், நாகர்கோவிலில் செட் போட்டு 90% படமாக்கினோம். மீதி 10% சிஜி, VFX பயன்படுத்தியிருக்கிறோம். பட வேலைகள் முடிய இன்னும் முழுமையாக ஒரு மாதம் ஆகும். அதன் பிறகுதான் வெளியீட்டு தேதி, புரோமோஷன் பணிகளை தொடங்க வேண்டும்” என்றார்.

இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதா பாத்திரத்தில், இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ மற்றும் ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். திறமையான நடிகர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படம், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பின்னணியில் வலுவான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என எதிர்பார்க்கலாம்.

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கும் இப்படத்தை தரணி ராசேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். சர்தக் கல்யாணி இசையமைக்க, ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைத்துள்ளார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். மாலதி நாராயணன் இணை இயக்குநராகவும், வீரமணி கணேசன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், லிவி ஜேம்ஸ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

சண்டைப் பயிற்சி மிரட்டல் செல்வா, ஒலி வடிவமைப்பாளர் சரவணன் ராமச்சந்திரன், விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணர் டி.எஸ். ஹரி ஹர சுதீன், ஒலி கலவைப் பணிகளை கே.சி. பூபதி ராஜா, பாடலாசிரியர் நெய்தல், ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீ நிஷா, கலரிஸ்ட் பராஜிதர் ஆகியோர் பணியாற்றுகின்றனர். விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்களாக பி.ஜே. ஆகாஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளனர். குமரன் கே. புகைப்படக் கலைஞராகவும், நாகராஜ் செல்வம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், திருநீலகண்டன் ஜி. தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர்.

டெத் ரயில்வே பற்றி படத்தில் நடிக்கும் யாத்திசை சேயோன் கூறியதாவது :
பிரிட்டிஷ் ராணுவ வீரராக இப்படத்தில் நடிக்கிறேன். எனக்கும் நாகலாந்தை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவருக்கும் காதல் மலர்வது போன்ற காட்சிகள் படத்தில் இருக்கின்றன. தவிர போர்க்கள காட்சிகள் கவனத்தை கவரும் அளவுக்கு படமாக்கப்பட்டிருக்கிறது. நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் கடுமையாக பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பு வீண் போகாது.

நடிகை பவானிஸ்ரீ கூறியதாவது:
நாகலாந்து பழங்குடி பெண்ணாக வரும் நான் சேயோன் காதலியாக வேடமேற்றிருக்கிறேன். வெற்றிமாறன் சார் இயக்கிய விடுதலை படத்தில் மலைவாழ் இனப் பெண்ணாக நான் நடித்திருந்தேன். எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்போது எனக்கு தேடி வரும் வாய்ப்புகளும் மலை வாழப் பெண் வேடங்களே அதிகம் வருகின்றன. வெவ்வேறு பத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எதிர்வரும் காலங்களில் அந்த ஆசை நிறைவேறும் என்று எண்ணுகிறேன்.

இவ்வாறு பவானி ஸ்ரீ கூறினார்.

தயாரிப்பாளர் ஜே கமலக்கண்ணன் கூறியதாவது :

இயக்குனர் தரணி ராஜேந்திரன் எனது நண்பர். அவர் இயக்கிய யாத்திசை திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழர் வரலாற்று படத்தை சிறிய பட்ஜெட்டை வைத்துக் கொண்டே அவ்வளவு பிரமாதமாக இயக்கியிருந்தார். இதைவிட அதிகமாக முதலீடு செய்தால் பிரம்மாண்ட படங்களை அவரால் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. டெத் ரயில்வே கதையை என்னிடம் அவர் கூறிய போது மிகவும் பிடித்தது எவ்வளவு செலவானாலும் இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பது எனக்கு பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியும் தருகிறது. இயக்குனர் தரணி ராஜேந்திரன் கூறியதுபோல் படம் அற்புதமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களிடம் மட்டும் அல்லாமல் உலக அளவில் இந்த படம் பெரும் வரவேற்பு பெரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இவ்வாறு தயாரிப்பாளர் கூறினார்.

 

Related posts

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் அயோத்தி

Jai Chandran

சாயம் பட இயக்குனர் ஆண்டனி சாமிக்கு மிரட்டலால் பரபரப்பு

Jai Chandran

மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend