சென்னை ஆக 21-
இயக்குனர் நடிகர் டி. ராஜேந்தர் இன்று பேட்டியளித்தார். அப்போது தான் இயக்கிய உயிருள்ளவரை உஷா படத்தை 42 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
பிரபல இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் என்று பன்முகங்களை கொண்ட டி.ராஜேந்தர் இன்று சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் 1983 ஆம் ஆண்டு நான் எழுதி இயக்கி திரைக்கு வந்த படம் உயிருள்ளவரை உஷா. இந்த காலகட்டத்தில்தான் நான் உஷாவை திருமணம் செய்து கொண்டேன்.

உயிருள்ளவரை உஷா அன்றைக்கு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் என்னுடன் கல்லூரியில் படித்த மாணவர் கங்கா ஹீரோவாக நடித்தார். நளினி ஹீரோயினாக அறிமுகமானார். இவர்களுடன் நான் பெரிதும் மதிக்கும் மறைந்த எம் ஆர் ஆர் ராதா மகன் ராதாரவி வில்லனாக நடித்தார். மேலும் சரிதா, வெண்ணிறாடை மூர்த்தி, இடிச்ச புலி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியதுடன் செயின் ஜெயபால் என்ற கதாபாத்திரத்திலும் நான் நடித்தேன். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அன்றைக்கு கேட்டிருந்தேன். அவரும் கதை மற்றும் கதாபாத்திரத்தை கேட்டுவிட்டு மகிழ்ச்சி அடைந்து என்னை கட்டிப்பிடித்து வாழ்த்தியதுடன் நடிப்பதாகவும் கூறினார்.
ஆனால் அவர் சில தயாரிப்பாளர்களை கூறி அவர்களை தயாரிக்கச் சொல்லுங்கள் நடிக்கிறேன் என கூறினார். ஆனால் அந்த நேரத்தில் நான் ஏற்கனவே வெளியிட்டிருந்த ஒரு படத்தில் இழப்பு ஏற்பட்டிருந்ததால் நானே உயிருள்ளவரை உஷா படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் ரஜினிகாந்த் பெரிய பேனர் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்திருந்தார். அவரது பாலிசியை நான் ஏற்றுக்கொண்டு நான் பெரிய நிறுவனம் ஆகும்போது உங்களை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன் .

பின்னர் செயின் ஜெயபால் கதாபாத்திரத்தில் நானே நடித்தேன். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் ரஜினிகாந்த் காக நான் எழுதிய வசனங்களே வேறு அது அவரது ஸ்டைலில் இருக்கும். அவர் நடிக்கவில்லை என்று முடிவான பிறகு எனக்காக வசனங்களை மாற்றி என் பாணியில் எழுதிக் கொண்டு நடித்தேன்.
உயிருள்ளவரை உஷா படம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப 4 கே டிஜிடல் வடிவில் மாற்றம் செய்யப்பட்டு இசையிலும் நவீன தொழில் நுட்பங்கள் கையாளப்பட்டு படம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்படம் திரையரங்கில் வந்தால் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்டாக அன்றைக்கு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் பெரும் வெற்றி பெறுகிறது
தளபதி விஜய் நடித்த கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளியது
அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் படம், மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்கள் ரீரிலிஸ் செய்யப்பட்டு வசூல் சாதனை படைத்திருக்கிறது. அந்தப் வரிசையில் உயிருள்ள வரை உஷா படமும் பெரும் வரவேற்பு பெறும். வரும் செப்டம்பர் மாதத்தில் இப்படத்தை நான் ரீ ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளேன். இந்தப் படத்தை தொடர்ந்து ஒரு தலை ராகம் உள்ளிட்ட எனது அனைத்து படங்களும் வரிசையாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். இனி இந்த பணியில் எனது கவனத்தை நான் செலுத்துவதில் தீவிரமாக இருக்கிறேன். 42 வருடங்களுக்கு பிறகு உயிருள்ளவரை உஷா படம் ரீ ரிலீஸ் ஆகிறது.
“மீண்டும் படம் இயக்குவீர்களா?” என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக நான் படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறேன். அந்தப் படம் மிகப் பிரமாண்டமாக இருக்கும். இதில் நான்கு கதாநாயகிகள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். அத்துடன் இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஏ ஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகள் அமைக்கவும் எண்ணி உள்ளேன். என்றார்.
முன்னதாக பேட்டியின் போது நிருபர்கள், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம், டி ராஜேந்திரின் லட்சியத் திமுக வின் அரசியல் பணி மற்றும் அரசியல் கட்சிகள் பற்றி கருத்து போன்றவற்றை இயக்குனர் டி ராஜேந்திரிடம் கேட்டபோது உருக்கமான பதில் அளித்தார். அப்போது அவரது கண்கள் கலங்கின..
டி ராஜேந்தர் கூறும் போது,”எனக்கு உடல்நிலை சரி இல்லாதபோது என்னை என் மகன் சிலம்பரசன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அப்போதுகூட எனக்கு எது நடந்தாலும் இந்த தமிழ் மண்ணிலேயே நடக்கட்டும் நான் அமெரிக்காவிறகு வரவில்லை என்று கூறினேன். ஆனாலும் எனக்கு தைரியம் கொடுத்து அமெரிக்கா அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்றபோது நான் ஒரு புதிய முடிவை எடுத்தேன். இனி அன்பு மட்டுமே பகிர்வது. அதையே பண்பாக கொள்வது என்று முடிவு செய்தேன். திரை உலகில் உள்ள அனைவரும் எனக்கு நண்பர்கள்தான் அவர்களுடன் என்றைக்கும் நான் உடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். அது தவிர இனி எனக்கு வேறு ஆசை எதுவும் இல்லை. நடிகர் விஜய் புலி படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்காக அப்படத்தின் தயாரிப்பாளர், என் நண்பர் பி டி செல்வகுமார் அழைப்பின் பேரில் புலி பட ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசினேன். ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கும் எனக்கும் இடையே ஒரு செய்தி மனக்கசப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனால் என் மகன் சிலம்பரசன் நீங்களும். கேப்டன் விஜயகாந்த்தும் மனக்கசப்புடன் இருப்பது சரியல்ல என்று கூறி எங்களை இணைத்து வைத்தார். இனி யாரிடமும் நான் மனக்கசப்பு கொள்ள விரும்பவில்லை. இனி என் படங்களை ரிலீஸ் செய்வதில் கவனம் செலுத்தப் போகிறேன்” என்றார். அரசியல் குறித்து டி ராஜேந்தர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் டி ராஜேந்தர் பேட்டியின் அவரது பிஆர்ஓ கோவிந்தராஜ் உடனிருந்தார்.
