Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

திருக்குறள் (பட விமர்சனம்)

படம்: திருக்குறள்

நடிப்பு: கலைச்சோழன, தனலட்சுமி, குணாபாபு,
பாடினி குமார், பவளக்கொடி சுகன்யா,
சந்துரு,
ஓ.ஏ.கே.சுந்தர்,
சுப்ரமணிய சிவா,
கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், அருவி ஆனந்தன, இந்துமதி,
கார்த்தி, யாசர்,
ஹரிதா ஸ்ரீ

தயாரிப்பு: ரமணா கம்யூனிகேஷன்ஸ்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: எட்வின்

இயக்கம்: ஏ.ஜே.பாலகிருஷ்ணன்

பிஆர்ஓ: மணவை புவன்

திருவள்ளுவர் பற்றி ஒரு படம் எடுக்க முடியுமா என்று எண்ணினால் அதை ஒரு பாடமாகத்தான் வைக்க முடியும், எப்படி படமாக எடுக்க முடியும் என்று பலரும் கேட்பார்கள் ஆனால் இயக்குனர் ஏ.ஜே .பாலகிருஷ்ணன் அந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக திருவள்ளுவரின் வாழ்க்கையை திருக்குறள் என்ற தலைப்பில் ஒரு படமாக இயக்கியிருக்கிறார் என்பது ஆச்சரியம்.

இந்தப் படத்தை பார்ப்பதற்கு முன்பு இதில் திருக்குறளில் உள்ள 1330 திருக்குறலுக்கும் விளக்கம் சொல்வார்களோ? இது ஒரு திருக்குறள் விளக்க உரை படமாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லாம் இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் கதைக்கு நிகராக இப்படத்தின் கதை , திரைக்கதை வசனத்தை ஏஜே பாலகிருஷ்ணன் அமைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

திருவள்ளுவராக நடிப்பவர் நல்ல திடகாத்திரமாக திருவிளையாடல் சிவாஜி போல் அல்லது ராஜராஜன் சோழன் சிவாஜி போல் கம்பீர தோற்றத்தில் இருப்பார் என்று எண்ணினால் நம் பள்ளி ஆசிரியர் எப்படி ஒரு எளிமை தோற்றத்தில் இருப்பாரோ அப்படி ஒரு தோற்றத்தை கொண்ட ஒருவரை திருவள்ளூவராக நடிக்க வைத்திருப்பது துணிச்சல்தான். ஆனால் அதுதான் திருவள்ளுவருக்கு சரியான அடையாளம் என்று கூட தோன்றுகிறது.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியராக திருவள்ளுவர் சித்தரிக்கப்பட்டிருப்பது பொருத்தமான ஒரு சித்தரிப்புதான் அதற்கு ஏற்ப திருவள்ளுவராக நடித்திருக்கும் கலைச்சோழன் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாக நடித்து கவர்கிறார்.
வசன உச்சரிப்பு, ஆங்கங்கே அள்ளித் தெளிக்கும் குறள் கருத்துக்கள் செவிக்கு மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து.

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் தான் எழுதினார் என்று காலம் காலமாக பலரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவர் பல்வேறு மன்னர்களுக்கு ஆலோசகராகவும் இருந்திருக்கிறார், ஒரு நாட்டைக் காக்க அந்த நாட்டு மன்னனுக்கு அறிவுரை சொல்வதற்கும், போர் வீரர்களுக்கு வீர உரை ஆற்றுவதற்கும் சென்று இருக்கிறார், திருக்குறளை அரங்கேற்ற மதுரை தமிழ் சங்கத்தில் நக்கீரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார், போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் நடச்சொல்லி அவர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு அசாதாரண செயலை செய்திருக்கிறார் என்ற பல்வேறு செயல்பாடுகள் இப்படத்தில் இடம்பெற்றிருப்பது கதையை சுவாரசியமாகவும், வரலாற்று பின்னணியோடும் ரசிக்க வைக்கிறது.

திருவள்ளுவரின் மனைவி வாசுகியாக நடித்திருக்கும் தனலட்சுமி சரியான தேர்வு. அவர் முகத்தில் அமைதியும் சிரிப்பும் தவழ்வது காட்சிக்கு கூடுதல் மிளிர்வை தருகிறது.

மேலும் குணாபாபு – பரிதி ,
பாடினி குமார் – பவளக்கொடி, சுகன்யா – மாட்டத்தி ,
சந்துரு – சங்கு மாறன்,
ஓ.ஏ.கே.சுந்தர் –
பாண்டிய மன்னன்,
சுப்ரமணிய சிவா – நக்கீரர் ,
கொட்டாச்சி – புலவர்
பெருந்தலைச்சாத்தனா, அரவிந்த் ஆண்டவர் – குமணன், அருவி ஆனந்தன் – மாடத்தி தந்தை , இந்துமதி – மாடத்தி தாய்,
கார்த்தி – நன்னன்,
யாசர் – பரிதியின் தோழன் ,
ஹரிதா ஸ்ரீ – பவளக்கொடியின் தோழி ) ஆகிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்

இப்படத்தில் கதை வசனம் நடிப்பு இயக்கம் எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்தால் மறுபக்கம் இன்னொரு தட்டில் இசை ஞானி இளையராஜாவின் இசை சமன் செய்திருக்கிறது. வசனங்களை பொறுத்தவரை 2000 ஆண்டுக்கு முன்பு பேசிய தமிழ் இலக்கண சுத்த பேச்சு இல்லாமல் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான வசனங்களை கையாண்டு இருக்கிறார்கள். அதேசமயம் சில உச்சரிப்புகள் லோக்கல் பாஷை பேசுகிறார்களோ என்று கூட எண்ணும் அளவுக்கு அமைந்துவிட்டது சிறுபிழைதான்.

எட்வின் ஒளிப்பதிவு ரசிகர்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பான இயற்கை சூழலான காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் ஏற்கனவே வெல்கம் பேக் காந்தி, காமராஜ் ஆகிய அருமையான சரித்திர படங்களை இயக்கியவர். அவரே திருக்குறள் படத்தையும் எப்படி ரசிகர்களுக்கு ஒரு திரைப்படமாக வழங்க வேண்டுமோ அப்படி இயக்கி வழங்கி இருக்கிறார்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையை சொன்னாலும் இந்த கால சூழலுக்கு ஏற்ற அரசியல் வசனங்கள் அதாவது “வருங்காலத்தில் என் மீது என்னென்ன காயங்கள் பூசப்போகிறார்களோ” என்று திருவள்ளுவர் ஆதங்கப்படுவது போன்ற வசனங்களை அமைத்திருப்பது கைதட்டல் பெறுகிறது.

கிளைமாக்சில் குமரியில் அமைக்கப்பட்டிருக்கும் வானுயர்ந்த திருவள்ளுவர் சிலையை காட்டி முடிப்பது படத்திற்கு முழுமை தருகிறது.

அறம் பொருள் இன்பம் என்ற மூன்று அத்தியாயங்களை இப்படம் பேசினாலும் இன்பத்துப்பால் அதாவது காமத்துப்பால் குறளை பல இடங்களில் கையாண்டிருப்பது இளசுகளுக்கும் பெருசுகளுக்கும் ஒரு கிளுகிளுப்பை தரும்.

திருக்குறள் – பட்ஜெட் படமாக இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்.

 

Related posts

புதுவை முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி

Jai Chandran

தரமான “அக்கா குருவி” ஓடாவிட்டால் சர்ச்சை படம்தான் எடுப்பேன்: இயக்குனர் சாமி பரபரப்பு

Jai Chandran

சின்னஞ்சிறு கிளியே (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend