Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஸ்டார் ( பட விமர்சனம்)

படம்: ஸ்டார்

நடிப்பு: கவின், லால், அதிதி  பொன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம்,

தயாரிப்பு: பி வி எஸ் என் பிரசாத், ஸ்ரீநிதி சாகர்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு:  எழிலரசு கே

இயக்கம்: இளன்

பி ஆர் ஓ : யுவராஜ்

சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு  ஊரைவிட்டு ஓடி வந்த தந்தை அதில் சாதிக்க முடியாமல் போட்டோகிராபர் ஆகிறார். பின்னர் தன் மகன் கலையை ( கவின்)  நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார். சிறு வயது முதலே மகனுக்கு நடிப்பில் ஆர்வம் ஊட்டுகிறார். கலையும் நடிப்பில் ஆர்வம் கொண்டு அதில் தீவிர கவனம் செலுத்துகிறான். படிப்பு இரண்டாம் பட்சம் தான் நடிப்புதான் முதல் முக்கியத்துவம் என்று பறக்கிறான். அவனது வாழ்வில் இரண்டு பெண்கள் குறிப்பிடு கின்றனர். காதல் அவனை உற்சாக மூட்டுகிறது சில சமயம் மனதை உடைத்தெறிகிறது. இந்நிலையில் விபத்தில் சிக்குகிறான் கலை.. . அதன் பிறகு அவன் நடிகனாகும் கனவு தகர்ந்து போகிறது. காதலி அவனை விட்டு பிரிகிறாள். நண்பர்கள் மட்டுமே உடன் இருக்கின்றனர். புதிய காதலி அவனுக்கு தெம்பூட்டுகிறாள். இறுதியில் கலை நடிகனாக முடிந்ததா அல்லது குடும்ப வாழ்விலேயே தன் தந்தையைப் போல் சிக்கி எதார்த்த வாழ்க்கைக்கு ஆட்பட்டு போனானா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

கவினை இதுவரை சாக்லேட் பாயாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்டார் படத்திலும் பாதி படம் வரை அவர் சாக்லேட் பாயாகத்தான் உலா வருகிறார். வழக்கமான அவரது ஆட்டம் பாட்டம் உற்சாகம் என்று எல்லாமே இளவட்டங்களை துள்ளல்போட வைக்கிறது

நடிப்பின் மீது ஆசை இருந்தாலும் தன் தாயின் ஆசைக்காக கவின் கல்லூரிக்கு செல்வதும் கல்லூரியில் ரூட்டு தல போல தன் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஆரவாரம் செய்வதுமாக அலம்பல் செய்கி றார் கவின்.

கல்லூரிக்கு புதிதாக வரும் மாணவி பிரித்தியை தன் காதல் வலைக்குள் கொண்டுவர கவின் ஆடும் இளவட்ட ஆட்டம் ரசிக்கும்படி உள்ளது. பிரீத்தி வீட்டுக்கு சென்று காதல் சொல்வதும் பின்னர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொள்வதும் சுவாரஸ்யம்.

படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்புக்கான தேடலை விடாமல் கவின் எந்த படக் கம்பெனியில் இருந்து அழைப்பு வந்தாலும் உடனே ஆடிஷனுக்கு பறப்பதும் அங்கு எந்த பலனும் இல்லாமல் பரிதாபத்துடன் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்புவதும் மனதை உடைக்கிறது.

ஒரு கட்டத்தில் மும்பையில் நடிப்பு பயிற்சிக்காக கவின் சென்றதும் திரும்பி வரும்போது பெரிய நடிகராகத்தான் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அங்கு பெரிய டிவிஸ்ட்டை  இயக்குனர் இளன் வைத்திருப்பது எதிர்பார்க்காத அனுபவம்.

படத்தின் முதல் பாதி ஆட்டம் பாட்டம் காதல் என்று கலகலப்பாகவும் பளபளப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. இரண்டாம் பாதி மனதில் இடியை இறக்குகிறது. நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கவின் விபத்தில் சிக்கி இனி  நடிகனாகவே ஆக முடியாது என்ற நிலைக்கு சென்றதும் இனி காட்சிகள் எப்படி நகரப் போகிறதோ என்ற ஒரு படபடப்பு இதயத்தில் வேகமாக லப்டப்பை  அதிகமாக்குகிறது.

படத்தில் சில சஸ்பென்ஸ்கள்  இங்கு உடைக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு அரங்கில் புதிய அனுபவத்தை தரும் என்பதால் அந்த ரகசியத்தை இயக்குனர் கேட்டுக் கொண்டபடி வெளிப்படுத்தாமல் சஸ்பென்ஸ் ஆகவே விடப்படுகிறது.

கவின் காதலிகளாக அதிதி,  பிரீத்தி என இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இடைவேளை வரை வரும் ப்ரீத்தி மனதை உடைத்து விட்டு செல்கிறார், இடைவேளைக்கு பிறகு வரும் அதிதி உடைந்த மனதை ஒட்ட வைத்து ஒத்தடம் தருகிறார்

கவின் தந்தையாக லால் நடித்தி ருக்கிறார். எத்தனை வயது ஆனாலும் தன் நடிப்புக்கு மட்டும் வயது ஆகாது என்பதை சீனுக்கு சீன் நிரூபித்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் கீதா கைலாசமும் தன் மகன் எங்கே வீணாக போய் விடுவானோ என்று பயந்து அவ்வப்போது  கவினை கண்டிக்கும் போது நம் அம்மாக்கள் கண்முன் வந்து நிழலாடுகின் றனர். அதிதியின் தந்தையாக பாண்டியன் நடித்திருக்கிறார். சொல்லப்போனால் இந்த பாண்டியனின் நிஜ வாழ்க்கை தான் இந்த படத்தின்  கதையாக உருவெடுத்து இருக்கிறது.

பி வி எஸ் என் பிரசாத், ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கின்றனர்.

படத்திற்கு இளவட்டங்களை ஈர்க்கும் இன்னொரு சக்தியாக மாறி இருக்கிறார் இசையமைப் பாளர் யுவன் சங்கர் ராஜா. கதை 80,  90களில் நடக்கும் கதையாக இருந்தாலும் இசை மட்டும் 24ன் வேகத்துடன் அரங்கை சுழன்றடிக்க செய்கிறது.

எழிலரசு கேமரா  இதயத்தில் ஓவியம் தீட்டுகிறது.

இயக்குனர் இளன் கதைக்களத்தை காதல் ஆக்சன் சென்டிமென்ட் என்று  பரவலாக்கி அனைத்து தரப்பையும் கவரும் விதத்தில் அமைத்திருக்கிறார்.  கிளைமாக்ஸ்சில் அவர் வைத்திருக்கும் திருப்பம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அரங்கை விட்டு வெளி வரும்போது அது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி பட்டிமன்றமாக கூட மாறி விடுகிறது. ஒருவகையில் இதுவும் வெற்றியின் சூத்திரமாக கூட அமைந்து விடும்

ஸ்டார் – நடிகர் கனவில் இருக்கும் இளவட்டங்களுக்கு ஒரு அனுபவ பாடம்.

 

 

 

 

Related posts

மக்களிடம் நிதி திரட்டும் வேல்ஸ் நிறுவனம்

Jai Chandran

“ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Jai Chandran

Mohanlal’s Powerful First Look from Vrusshabha

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend