படம்: குரங்கு பெடல்
நடிப்பு: காளி வெங்கட் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரத்தீஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகரன், தக்ஷனா, சாவித்திரி,, செல்லா, குபேரன்
தயாரிப்பு: சிவகார்த்திகேயன், சவிதா
இசை: ஜிப்ரான் வைபோதா
ஒளிப்பதிவு: சுமீ பாஸ்கரன்
இயக்கம்: கமலக்கண்ணன்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா,( D One), நாசர்
80களுக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது குரங்கு பெடல்.
நெசவு வேலை செய்பவர் காளி வெங்கட். கைக்கு வரும் சொற்ப வருமானத்தில் சைக்கிள் கூட வாங்க முடியாமல் பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்கள் ஐந்து பேர் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சைக்கிள் ஓட்டி பழக வேண்டும் என்று ஆசை. ஊரில் சைக்கிள் கடை நடத்தி வரும் மிலிட்டரி காரரிடம் வாடகைக்கு சைக்கிள் எடுத்து சிறுவர்கள் பழகுகின்றனர். ஒரு சமயம் வாடகை சைக்கிள் எடுக்கும் காளி வெங்கட்டின் மகனிடம் வாடகை கொடுப்பதற்கு போதிய காசு கையில் இல்லாததால் அவன் காணாமல் போய்விடுகிறான். அவனைத் தேடி குடும்பமே அலைகிறது. ஒரு கட்டத்தில் அவன் திரும்பி வருகிறான். அவன் எங்கு சென்றான் சைக்கிளுக்கு வாடகை கொடுக்க முடிந்ததா. மகனை கண்டிப்புடன் வளர்த்த காளி வெங்கட் தன் மகன் செய்த காரியத்திற்கு என்ன தண்டனை கொடுத்தார் என்ற வாழ்வின் நிகழ்வுகளை அற்புதமாக படம் பிடித்து காட்டி இருக்கிறது குரங்கு பெடல் படம்.

2கே கிட்ஸ்களுக்கு குரங்கு பெடல் என்றாலே என்ன என்று அர்த்தம் புரியாது. 70, 80 காலகட்டங்களில் இருசக்கர வாகனங்கள் பயன்பாடு என்பது மிக மிக சொற்பம். எல்லோரும் சைக்கிளை தான் தங்கள் வாகனமாக பயன்படுத்தினார்கள்.
சைக்கிள் ஓட்டுவதற்கு சிறுவயதிலேயே சிறுவர்கள் கற்றுக் கொள்வார்கள் அப்போது சீட்டின் மீது அமர்ந்து அவர்களால் ஓட்ட இயலாது அதனால் சைக்கிள் பாருக்கு இடையே உள்ள இடைவெளியில் கால்களை பெடல்களில் வைத்து சைக்கிள் ஓட்ட பழகுவார்கள் அதைத்தான் குரங்கு பெடல் என்று சொல்வார்கள். இந்த வேலையைத்தான் ஐந்து சிறுவர்களும் செய்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் சிறு சிறு சண்டை, போட்டி, கோபம், தள்ளுமுள்ளு போன்ற சுவாரசியங்கள் கதையை சினிமா தனமாக இல்லாமல் எதார்த்தமான வாழ்க்கை சூழலாக கடைசிவரை நகர்த்திச் செல்கிறது.
வாடகைக்கு எட்டணா கூட அதாவது 50 பைசா கூட கொடுக்க கையில் காசு இல்லாமல் இருக்கும் சிறுவன் வீட்டில் இருக்கும் உண்டியலில் காசை திருடுவதும் முட்டையை எடுத்துச் சென்று விற்பதும் பண ஆசையில் உருட்டு ஆட்டத்தில் காசை இழப்பதும் சிறுவயதில் பலரும் அனுபவித்த ஒரு நிகழ்வாக கண்முன் விரிகிறது.
சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரத்தீஷ் ஆகிய ஐந்து சிறுவர்களும் சினிமாவில் நடிக்கிறோம் கேமரா முன்பு இருக்கிறோம் என்ற எந்தவொரு எண்ணமும் மனதில் இல்லாமல் தங்கள் போக்கில் சைக்கிள் ஓட்டி பழகுவது, அடித்துக் கொள்வது, பிடித்துக் கொள்வது, பந்தயம் அமைப்பது என்று இயல்பாக நடித்து கவர்கின்றனர்.
மலை உச்சி கோயிலுக்கு ஏறும் சைக்கிள் போட்டி வைத்துக் கண்டு ஐந்து சிறுவர்களும் நடத்தும் போட்டி இளம் வயது குறும்புத்தனத்தை செயற்கைத் தனம் இல்லாமல் செய்து முடித்து இருப்பது மகிழ்ச்சியை தருவதுடன் சிறுவர்கள் மனதில் ஒரு நல்ல நட்பு விதையை விதைக்கிறது அந்த காட்சிக்காக ஒரு சபாஷ் கூட போடலாம்.
சைக்கிள் கடை வைத்திருக்கும் மிலிட்டரிக்காரர் வேடத்தில் வரும் பிரசன்னா பாலச்சந்திரன் கிராமத்து சைக்கிள் கடைக்காரரை ஞாபகத்துக்கு கொண்டு வருகிறார்.
காளி வெங்கட் பிரதான கதாபாத்திரம் ஏற்று மற்ற கதாபாத்திரங்களை தன் தோளில் சுமந்து ஒரு தூணாக படத்தை தாங்கி நின்றிருக்கிறார்.
குடிகாரர் ஜென்சன் நிக குடிகாரனாகவே மாறி அடிக்கும் லூட்டி அரங்கை கலகல பாக்குகிறது. ஆனால் பேச்சு பேச்சு ஓவர் பேச்சு..
படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்து பாராட்டியதுடன் தானே இப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். சவிதா தயாரித்திருக்கிறார்.
கமல் படத்துக்கும் இசையமைக்கும் ஜிப்ரான் இந்த குழந்தைகள் படத்திற்கும் கதையின் போக்கிலேயே இசை அமைத்து அந்த காலகட்டங்களை இழையோட .. அல்ல அல்ல இசையோட விடுகிறார்.
சுமி பாஸ்கரன் கேமரா நம்மை கிராம தெருக்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறது.
இப்படத்தின் கதையை ராசி அழகப்பன் எழுதி இருக்கிறார். தன் சிறுவயதில் நடந்த மிக சம்பவத்தை மையமாக வைத்து சைக்கிள் என்ற சிறுகதையாக எழுதிய கதை தான் தற்போது குரங்கு பெடல் படமாக உருவாகி இருக்கிறது.
ராசி அழகப்பன் எந்த உணர்வுடன் கதையை எழுதினாரோ அந்த உணர்வு கொஞ்சமும் குறையாமல் திரைக்கதையாக வடித்து இயக்கியிnருக்கிறார் கமலக்கண்ணன். கோடை காலத்திற்கு சிறுவர்களுக்கு மட்டுமல்ல அந்த கால ஞாபகங்களை நினைவுக்கு கொண்டு வரும் பெரியவர் களுக்கும் ஏற்ற படமாக வெளிவந்திருக்கிறது குரங்கு பெடல்.
சிவ நந்தீஸ்வரன் எடிட்டிங் கைவண்ணம் படத்தை எந்த ஜம்பும், குறுக்குத்தனமும் இல்லாமல் ஜிவ்வென நகர்த்தி செல்கிறது.
குரங்கு பெடல் – பசுமை நிறைந்த நினைவுகள்.

–
,
