படம்: இரவின் நிழல்
நடிப்பு: இராதாகிருஷ்ணன் பார்த்திபன், வரலட்சுமி, ரோபோ சங்கர், பிரகிடா சகா, சந்த்ரு, ஆனந்த், சினேகா குமார், சாய் பிரியங்கா
தயாரிப்பு: பயாஸ்கோப் USA, அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்.
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்
கலை: ஆர் கே. விஜய்முருகன்
இயக்கம்: ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
ரிலீஸ் : வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு
பி ஆர் ஒ: நிகில் முருகன்
இரவின் நிழல் படத்தை வழக்கமான பட பட்டியலில் சேர்த்துவிட முடியாது. இதற்கென்று சிறப்புகள் உண்டு. முதலில் இப்படத்தின் இயக்குனர், கதாநாயகன் ராதா கிருஷ்ணன் பார்த்திபன், உலகில் முதன்முறையாக ஒரேஷாட்டில் எடுக்கப்பட்ட முழுநீள படம், 340க்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு.. இப்படி நிறைய…
கதை: கள்ளத்தனமான உறவில் பிறந்த குழந்தை நந்து வின்(ராதாகிருஷ்ணன் பார்த்திபன்) தாய் கணவனால் கொலை செய்யப்பட குழந்தை அனாதை ஆகிறது. அதை எடுத்து வளர்ப்போர் சில நாளில் கைவிடுகின்றனர். பின்னர் காக்கிசட்டை நபரால் நந்து தவறாக பயன்படுத்தப்பட பல இன்னல்களுக்கு ஆளாகி கந்துவட்டிக்கு பணம் கொடுத்து பெரிய ஆள் ஆகிறான். முதல் காதலி ஏமாற்ற இரண்டாம் காதலி சிலக்கம்மா (பிரகிடா சகா) நந்துவின் உயிராகிறாள். ஒருகட்டத்தில் அவளையும் இழக்கும் நந்து தன் வாழ்வை சீரழித்தவர்களை சுட்டு வீழ்த்த துபபாக்கியுடன் புறப்படுகிறான். பாவம் செய்த மனத்துடன் நிம்மதி தேடும் நந்து யாரை யெல்லாம் பழிவாங்கினான் என்பதே கிளைமாக்ஸ்.
ஒரேஷட்டில் எடுக்கப்பட்ட படம் தானா என்ற தொழில் நுட்ப ஆராய்ச்சி படம் பார்க்கும் பலருக்கு ஆரம்பத்திலேயே வந்துவிட அவர்கள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு குற்றம் காண தேடுகின்றனர்ர ஆனால் அடுத்த 10 வது நிமிடத்தில் அவர்களின் கண்களும் காட்சியில் நிலைகுத்திப் போகிறது. அருகில் அமர்ந்திருப்பவர் யார் என்பதைகூட மறந்து காட்சிகளோடு காட்சியாகிவிடுகின்றனர்.

நந்து என்ற கதாபாத்திரத்தில் ராதா கிருஷ்ணன் பார்த்திபன் ஒன்றிப்போயிருக்கிறார். கதையை சொல்வதற்காக அவர் கையாண்டிருக்கும் யுக்தியும் அபாரம். உண்மையை எழுதுங்கள் என்பதற்கு சொல்வதாக சொல்லி தனது வாழ்க்கையை அவர் விவரித்து செல்போனில் ரெக்காட்டிங் செய்யச் செய்ய காட்சிகள் விரிகின்றன.
மனமே துரோகத்தால் ரணமாகிப் போக அதற்கு ஒரே மருந்து தன் மகள் தன்னை தப்பா புரிந்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக தன்னிலை விளக்கம் அளித்தபடி மகள் பாசத்தில் துடிக்கும் பார்த்திபன் நெஞ்சை கனமாக்குகிறார். அவர் பேசும் பார்த்தைகள் சில கெட்டவார்த் தைகள் கெட்டவர்களை பற்றித்தான் என்பதால் அந்த வசனங்களிலும் நியாயம் காண முடிகிறது. அதேசமயம் சில அற்புதனமான வசனங்கள் உதாரணத்துக்கு “பார்வை வந்தப்பறம் காட்சி காணாமல் போனா?” என்ற வசனத்தில் ஓராயிரம் அர்த்தம் பொதிந் திருக்கிறது.

சிலக்கம்மாவாக நடித்திருக்கும் பிரகிடா சகா பார்த்திபனின் அறிமுகம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் அளவுக்கு அமைதியான தோற்றம் அழகான முகம், அழுத்தமான நடிப்பு என மனதை கொள்ளையடிக்கிறார்.
பிரேமகுமாரியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் கதையின் மற்றொரு மையம். அவரது அடாவடியான பேச்சு பார்த்திபனின் வாழ்க்கையை திசைமாற்றிப்போடுகிறது.
பரமானந்தா சுவாமியாக வரும் ரோபோ ஷங்கர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். அதேபோல் 18 வயது நந்தவாக நடித்திருக்கும் சந்துரு, 30 வயது நந்துவாக நடித்திருக்கும் ஆனந்த கிருஷ்ணன், லட்சுமி நடித்திருக்கும் சினேகா குமார் ,
பார்வதியாக நடித்திருக்கும் சாய் பிரியங்கா ரூத் மற்றும் அந்த காக்கிச்சட்டை சூத்திரதாரி எல்லோருமே நடிப்பை பங்குபோட்டுக் கொள்கின்றனர்.
இந்த படத்தை உலக அளவில் பேசவைக்கும் சக்தியாக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பணி சிறப்புக்கு சிறப்பு சேக்கிறது. மாயவா பாடலில் மதிமயக்கச் செய்தும், பாவம் செய்யாதிரு மனமே என்ற கடுவெளி சித்தர் பாடல் மூலம் மனதை பக்குவப்படுத்தியும் உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொள்கிறார் ரஹ்மான்.
ஒளிப்பதிவளர் ஆர்தர் வில்சன் உழைப்பு அசாதாரணம்
ஆர் கே. விஜய்முருகன் அரங்க வேலைகள் பல ஆண்டுகளை ஒன்றிணைத்து படத்தை காலநிலைகேற்ப நகர்த்த உதவுகிறது. ஒரேஷாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் இத்தனை விதமான அரங்கு களா என வியக்க வைக்கிறார்.
பயாஸ்கோப் USA, அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் இப்படத்தை கால்டுவேல் வேல்நம்பி , அன்ஷு பிரபாகர் , Dr.பாலா ஸ்வாமிநாதன் , Dr. பிஞ்சி ஸ்ரீனிவாசன் , ரஞ்சித் தண்டபாணி , கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி & இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இத்தனை சிறப்புகளை ஒன்றிணைத்து படத்தை கருவில் சுமந்துபெற்றெடுத்த தாயாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எத்தனை இரவுகள் தூக்கத்தை இழந்தாரோ என்பது அந்த இரவின் நிழலுக்குத்தான் தெரியும்.
இப்படியோரு படம் இதுவரை எடுத்ததுமில்லை இனி எடுக்கப்போவதுமில்லை.
இரவின்நிழல்- ஆஸ்கர் கதவை உடைக்கும்.


