படம்: தீர்ப்புக்கள் விற்கப்படும்
நடிப்பு: சத்யராஜ், யுவன், ஸ்மிருதி வெங்கட், மதுசூதனன், ஹரிஸ் உத்தமன், சார்லி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ், சூப்பர்குட் சுப்ரமணி,
தயாரிப்பு: சி.ஆர்.சலீம்
இசை: பிரசாத் எஸ்.என்.
ஒளிப்பதிவு: கருடசேவா ஆஞ்சி
இயக்கம்: தீரன்
வெளியீடு : 11:11 புரொடக்ஷன்ஸ் பிரபு திலக்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா
அரசு மருத்துவமனை டாக்டர் நலன்குமார் தன் மகள் மீது பாசம், பொழிகிறார். அவள் காதலிப்பவரையே திருமணம் செய்து வைக்கவும் சம்மதிப்பதுடன் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து நிச்சயம் செய்கிறார். திருமணம் ஆன பிறகு மாப்பிள்ளையும் பெண்ணும் வெளிநாட்டில் படிக்கவும் ஏற்பாடு செய்கிறார். எல்லாம் நல்லவிதமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த ஊர் எம் எல் ஏ மகன், நலன்குமாரின் மகளை மானபங்கப்படுத்துவதுடன் அவளது காதலனையும் அடித்து சாய்க்கிறான். மகள் சீரழிக்கப்பட் டதை அறிந்து நீதிமன்றத்தில் நீதி கேட்கிறார் நலன்குமார் ஆனால் எதிரிகளுக்கு சாதகமாக நீதி கிடைக்கிறது. இதனால் கோபம் அடைந்த நலன்குமார் எம் எல் ஏ மகனை கடத்தி அவனது ஆணுறுப்பை அறுத்துவிடுகிறார். மயக்கநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் எம் எல் ஏ மகனுக்கு மீண்டும் ஆண்மை வரவேண்டுமென்றால் வெட்டப்பட்ட ஆணுறுப்பை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு வந்து பொருத்த வேண்டும் என்று டாக்டர்கள், எம் எல் ஏவிடம் கூறுகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பாக வைத்திருக்கும் வெட்டப்பட்ட ஆணுறுப்பை தருவதாக கூறும் நலன்குமார் எம் எல் ஏவிடம் கோடிகள் கேட்டு பெறுகிறார். பின்னர் பல்வேறு இடங்களுக்கு வரச்சொல்லி அலைக்கழிக்கிறார். இறுதியில் எம் எல் ஏ மகன் கதி என்னவானது? நலன்குமார் மகள் எடுக்கும் முடிவு என்ன? நலன்குமார் எப்படி பழி தீர்க்கிறார்? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் நச்செனபதில் சொல்கிறது.
இப்படத்தின் டைட்டிலுக்கு சென்சாரில் அனுமதி பெற்றதே பெரிய காரியம். அதேபோல் கதை சொல்லப்பட்டிருக்கும் வசனங்களில் எந்த பீப் சவுண்டும் இல்லாமல் சான்றிதழ் தரப்பட்டதும் மற்றொரு சாதனைதான்.
நலன்குமாராக சத்யராஜ் ஏற்றிருக்கும் வேடம் அவரது அனுபவ நடிப்பால் உயிர்ப்பெறுகிறது.
மகளிடம் பாசம் காட்டும் சத்யராஜ் அவள் எம் எல் ஏ மகனால் சீரழிக்கப்பட்டாள் என்பதை அறிந்ததும் அதற்காக நீதிகேட்டு கோர்ட் படி ஏறி நிற்பதும் அங்கு வக்கீல் ஒருவர் தன்னிடம் சொல்லும் பொய்களை கேட்டு எந்த அசைவும் காட்டாமல் மவுனம் சாதிப்பதும் விரக்த்தியின் வெளிப்பாடு.
நீதி கிடைக்காத நிலையில் தன் கையால் பழி வாங்க முடிவு செய்து சத்யராஜ் போடும் திட்டங்கள் அடுத்தடுத்த ஆக்ஷன் காட்சிகளாக மாறுகிறது. தன்னை மிரட்டும் எம் எல் ஏவை மென்னையாக பேசியே தன்னிடம் சரண் அடைய வைக்கும் யுக்தி அருமை.
எம் எல் ஏ கூட்டி வரும் அடியாட்களை வைத்து இரண்டு பேரை சுட்டுக்கொல்ல வைக்கும் தந்திரம், தன்னிடம் இருக்கும் கோடிகளை காட்டி அடியாட்களை ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டு சாகச் செய்வது போன்ற சத்யராஜின் சமயோசிதம் எல்லாம் நெத்தியடியாக வேலை செய்கிறது. இறுதியில் எம் எல் ஏ கையாளேயே அவரது மச்சானையும் சுட்டுத்தள்ளிவிட்டு அவருக்கு பெப்பே காட்டிவிட்டு செல்வது அசல் சத்யராஜ் முத்திரை.
எம் எல் ஏவாக வரும் மதுசூதனன் கோபத்துக்கு கோபம் காட்டும் அதே வேளையில் மகன் மீதான பாசத்துக்காக இறுதிவரை சத்யராஜ் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆடுவது என்று நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஹரிஷ் உத்தமன் எம் எல் ஏ மச்சானாக சப்போர்ட்டிங் வில்லனாக வந்து செல்கிறார்.
கதையே பழிவாங்கும் கதை என்பதால் காதலுக்கும் காமெடிக்கும் இடமில்லை. அதெல்லாம் இல்லாவிட்டாலும் கதையின் கருவை இயக்குனர் தீரன் பலமாக சொல்லியி ருப்பது அப்ளாஸ் பெறும். இப்படத்தின் 2ம் பாகத்துக்கும் காத்திருக்கும்படி டைட்டில் போடுகிறார் இயக்குனர்.
பிரசாத் எஸ்.என். இசை காட்சிகளை வேகப்படுத்தி இருக்கிறது. கருடசேவா ஆஞ்சியின் ஒளிப்பதிவும் பேசப்படும்.
தீர்ப்புக்கள் விற்கப்படும் – நீதி கிடைக்காத ஒரு தந்தையின் கோபம்.

