படம்: வேலன்
நடிப்பு: பிரபு, முகேன், சூரி, மீனாட்சி கோவிந்தராஜன், மரியா வின்சென்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பெராடி, ராகுல், பிரகிடா, ஜோ மல்லூரி, ஸ்ரீரஞ்சனி
தயாரிப்பு: கலைமகன் முபாரக்
இசை: கோபிசுந்தர்
ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்
இயக்கம் கவின்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா
பிரபுவுக்கும் ஹரிஷ் பெராடிக்கும் சிறுவயதிலிருந்து பகை.வளர்ந்த பிறகும் அந்த பகை தொடர்கிறது. பிரபுவின் மகன் முகேன் ஒரு மலையாள பெண்ணை காதலிக்கிறார். அவருக்கு காதல் கடிதம் கொடுக்கிறார். அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு தம்பி ராமையா, பிரபுவிடம் வந்து புகார் சொல்கிறார். அவரை சமாதானம் செய்து அவரது மகளை தன் மகனுக்கு கட்டி வைப்பதாக வாக்கு தருகிறார் பிரபு. தான் காதல் கடிதம் கொடுத்தது தம்பி ராமையா மகளுக்கு இல்லை என்பதும் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதும் முகேனுக்கு பின்னர் தெரிய வருகிறது, இதை தம்பி ராமையாவிடம் சொல்லி புரியவைக்க முயன்றால் அவர் பேசியபடி திருமணம் நடக்கும் என்று கறார் காட்டுகிறார். ஆனால் தம்பி ராமையா மகளை கட்டிக்கொள்ள முறைமாமன் சூரி காத்திருக்கிறார். ஏமாற்றம் அடையும் சூரி, முகேனுடன் சேர்ந்து திருமணத்தை நிறுத்த முயல்கிறார். இந்நிலையில் சிறுவயது பகைவரான ஹரிஷ் பெராடி பிரபுவை அவமானப்படுத்த திட்டமிட்டு தம்பி ராமையா மகளை தன் மகனுக்கு கட்டி வைக்க எண்ணுகிறார். தந்தையின் வாக்கை காப்பாற்ற தன் நிஜ காதலை மறைத்துவிட்டு அவர் பேசிய பெண்ணையே மணக்க எண்ணுகிறார் முகேன். இறுதியில் நடப்பது என்ன என்பதை கலாட்டாவுடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.
இலகுவான காதல் கதையில் சில பல திருப்பங்களை வைத்து காமெடி கலந்த படமாக வேலன் உருவாகி இருக்கிறது. டைட்டில் ரோலில் முகேன் நடித்திருக்கிறார். இடத்தை ஒருவரே ஆக்ரமிக்கவிடாமல் எல்லா பாத்திரங்களுக்கும் இடம் தந்து படத்தை கடைசி வரை இயக்கி சென்றிருக்கிறார் கவின்.
பிரபுவின் தோற்றத்துக்கும் கம்பீரத்துக்கும் ஏற்ப கதாபாத்திரமும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. பிரபுவிடம் மகளுக்கு வந்த காதல் கடிதத்தை காட்டி மிரட்ட கோபத்துடன் வரும் தம்பி ராமையா பிரபுவின் அந்தஸ்த்தை பார்த்து பெட்டி பாம்பாக அடங்கி அவரிடம் சம்பந்தம் பேசிவிட்டு நகர்வது கதைக்கு போடப்படும் முடிச்சி என்பது பின்னர்தான் தெரிய வருகிறது.
தன் காதலி, தம்பி ராமையா மகள் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடையும் முகேன் அந்த உண்மையை அவரிடம் சொல்லி புரிய வைக்க முயல்வதும் அவருக்கு சப்போர்ட்டாக சூரி கைகோர்ப்பதும் காமெடிக்கு வித்திடுகிறது.
பிரபுவிடம் நியாயம் கேட்ட செல்லும் சூரி அவரை நேரில் பார்த்ததும் ஷாக்காகி சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் அடியாட்களிடம் அடி வாங்கி வெளியேறுவது குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.
ஹீரோ முகேன் காதலிக்கிறேன் என்றால் காதலிக்கவும், வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நகரும் நாயகியாக வருகிறார் மீனாட்சி கோவிந்தராஜன். வழக்கமாக படங்களில் காதலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காட்சிகள் இருக்கும் இதில் அதுபற்றி இயக்கு னரும், ஹீரோவும், ஹீரோயினும் கவலைபடவில்லை என்றே தெரிகிறது.
தம்பி ராமையா தனது பாத்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார். எல்லா வசனத்தையும் உச்ச சாயலிலேயே பேசி இருக்கிறார்.
கிளைமாக்ஸில் பிரபுவும், ஹரிஷ் பெராடியும் நேருக்கு நேர் அனல் கக்க நடத்தும் பார்வை மோதல் பரபரப்பு.
பிரபு தனது பெருந்தன்மையை காட்டியும் ஹரிஷ் ரேங்கும்போது இது இன்னொரு கிளைமாஸுக்கு வித்திடுமோ என்று யோசிக்க வைக்கிறது. ஆனால் எதிர்பார்க்காத திருப்பத்தை தந்து கதைக்கு முடிவுரை எழுதி இருக்கிறார் இயக்குனர் கவின்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது. கோபி சுந்தர் இசை கைகொடுக்கிறது.
இயக்குனர் கவின், காமெடிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை காதலுக்கு தரவிட்டாலும் காதலை கைவிடாமல் சேர்த்து வைப்பது ஆறுதல்.
வேலன் – பொழுதுபோக்கு.