படம்: பிளான் பண்ணி பண்ணனும்
நடிப்பு: ரியோ ராஜ், ரம்யா நம்பீசன். எம் எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், தங்கதுரை, ஆடுகளம் நரேன், முனிஷ்காந்த், பால சரவணன்
தயாரிப்பு: ராஜேஷ்குமார், எல்.சிந்தன்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: பி.ராஜசேகர்
இயக்கம்:பத்ரி வெங்கடேஷ்
பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா, ரேகா
ஐடி கம்பெனியில் பணிபுரியும் ரியோ ராஜ், பால சரவனன் இருவரும் நெருக்கமான நண்பர்கள், பால சரணனின் தங்கைக்கு வரன் பார்க்கிறார்கள். பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் முன் பால சரவணனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடக்கமாக இருக்கும் தங்கை திருமணத்துக்கு சம்மதிக்கிறார். திடீரென்று அவர் வீட்டை விட்டு காதலனுடன் ஓடுகிறார் அதிர்ச்சி அடையும் பால சரவணன் தங்கையை தேடிச் செல்கிறார். அவருடன் ரியோ ராஜ் வருகிறார். காதலனுடன் பால சரவணன் தங்கையை ஓட விட்டது யார் என்று துப்பு கிடைத்து ரம்யா நம்பீஸனை தேடி செல்கின்றனர். ரியோ, பால சரவணன் இருவரும்.தங்கையை தேடிவந்திருப்பதை அறிந்த ரம்யா அங்கிருந்து தப்பி ஓட பார்க்கிறார். அவரை இருவரும் மடக்கி பிடித்து விசாரிக்கும் போது காதல் ஜோடி கேரளாவில் தனது வீட்டில் இருப்பதாக சொல்கிறார் ரம்யா. அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்வரை எங்களுடனே வரவேண்டும் என்று ரம்யாவையும் அழைத்துக்கொண்டு கேரளா செல்கின்றனர். தங்கையை தேடிச் சென்ற பால சரவணன் பெரிய பணக்கார வீட்டு பையனை தங்கை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் அவனுக்கு கட்டித்தர சம்மதிக்கிறார். இதற்கிடையில் ரம்யா நம்பீஸன் அமெரிக்காவில் கிடைத்த வேலையில் சேர விரைகிறார். அதற்கு சம்மதிக்காத அவரது தந்தை நரேன் முறைமாமன் முனிஷ்காந்துக்கு ரம்யாவை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார். ஆனால் அவரை மணக்க விரும்பாத ரம்யா வீட்டிலிருந்து தப்பி செல்ல எண்ணுகிறார். அவரை ஒரு கூட்டம் தேடி வருகிறது. அவர்கள் தங்கைக்கு திருமணம் முடித்துக்கொண்டு ஊர் திரும்பும் ரியோ ராஜ், பால சரவனன் குடும்பத்தை சுற்றி வளைக்கிறது. இதற்கிடையில் ரியோ ராஜின் நல்ல குணத்தை ரம்யா நம்பீஸன் அவ்வப்போது கண்டு நெகிழ்கிறார். ஒருகட்டத்தில் ரியோ ராஜே , ரம்யாவின் தந்தையிடம் பேசி அவரை அமெரிக்கா செல்ல சம்மதிக்க வைக்கிறார். இந்நிலையில் ரம்யா நம்பீசனை நரேனின் எதிரி மாரிமுத்து ஆட்கள் கடத்தி செல்கின்றனர். அவரை காப்பாற்ற செல்கிறார் ரியோ ராஜ் அடுத்த நடப்பது என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.
ரொம்ப காமெடி கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் சென்டிமென்ட் என்ற கலவையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். ரியோ ராஜை ரொமாண்டிகாகவும் காட்டாமல், ஆக்ஷன் ஹீரோவாகவும் காட்டாமல் நண்பரின் தங்கையை தேடும் நல்ல நண்பராககவும், ரம்யாவின் அமெரிக்க செல்லும் லட்சியத்தை நிறைவேற்ற முயலும் வெல்விஷராகவும் காட்டி இருப்பது பொருத்தம்.
ரம்யா நம்பீஸன் வழக்கமான காதலியாக இல்லாமல் காமெடி கலந்த கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். தன்னை காதலிப்பதாக கூறி வீடியோகாலில் அழைத்து அழுதுபுலம்பும் ரோபோ சங்கருக்கு சமாதானம் சொல்லும் ரம்யா திடீரென்று ரியோ ராஜிம், பால சரவணனும் தனது தங்கையை தேடிக்கொண்டு வந்து ரம்யாவை வளைப்பதும் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ரம்யா தப்பிக்க பார்ப்பதும் கலகலப்பின் தொடக்கம்.
ரம்யாவை காதலிப்பதாக கூறும் ரோபோ சங்கர் அவர் காதலுக்கு சம்மதிக்காவிட்டால் விஷம் குடித்துவிடுவதாக சொல்லி கையீல் விஷ பாட்டிலுடன் அலைவதும் ரியோதான் தனது காதலன் என்று ரம்யா பொய் சொல்லி ரோபோவை சமாதானம் செய்ய பார்ப்பதும் அதற்காக ரியோராஜ், ரம்யாவும் தானும் எப்படி காதலர்கள் ஆனோம் என்று ஒரு கட்டுக்கதையை விடுவதும் காமெடியோ காமெடி ரம்யாவின் தோற்றத்தில் ஏனோ முதிர்ச்சி தெரிகிறது.
கேரளாவில் தனது தங்கை இருப்பதை அறிந்து ரியோ, பால சரவணன் ரம்யாவுடன் கேரளா சென்றதும் அங்கு இன்னொரு காமெடி களம் முனிஷ்காந்தால் தொடர்கிறது.. ரம்யா செய்த காரியத்தால் ஒரு அண்ணன் தனது தங்கையை தேடி கேரளா வரை வரவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது இவர் அமெரிக்கா சென்றால் என்ன செய்வாரோ என்று கோபப்படும் ரம்யாவின் தந்தை நரேன் ரம்யாவை முறை மாமன் முனிஷ்காந்த்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பது எதிர்பார்க்காத டிவிஸ்ட்.
ரியோ ராஜ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதால் வேடத்தோடு பொருந்திவிடுகிறார். ரியோவையும், பால சரவனனையும் 4 லட்சம் பாக்கிக்காக எம் எஸ் பாஸ்கர் செல்லும் இடமெல்லாம் துரத்துவதும் அவருக்கு மாற்று இடங்களை சொல்லி பால சரவணன் அலையவிடுவதும் கிளைமாக்ஸ் வரை தொடரும் காமெடி.
ராஜேஷ்குமார், எல்.சிந்தன் தயாரித்திருக்கும் இப்படத்தை கமர்ஷியல் அம்சங்களுடன் கலகலப்பாக இயக்கி இருக்கிறார் பத்ரி வெங்கடேஷ்.
பி.ராஜசேகர் ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசை பாடல்களை பரவசமாக்கி இருக்கிறது.
பிளான் பண்ணி பண்ணனும் – கவலையை மறந்து சிரித்துவிட்டு வரலாம்.

by
க.ஜெயச்சந்திரன்
