பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் காந்தி கிருஷ்ணா. இவர் விஷால் நடித்த செல்லமே, ரோஜா நடித்த நிலா காலம், சித்தார்த் நடித்த ஆனந்த தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது “பிரேக் பாஸ்ட்” என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் பிக் பாஸ் புகழ் ராணவ் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக ரோஸ்லின் நடித்திருக்கிறார். மற்றொரு கதாநாயகனாக கிருத்திக் மோகன் நடித்துள்ளார். கிரிஜா வரதராஜ் இப்படத்தை அதிகப்பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்தி ருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி ஆர் ஓ சுரேஷ் சந்திரா.
இப்படம் பற்றி இயக்குனர் காந்தி கிருஷ்ணா கூறியதாவது:
பிரேக் பாஸ்ட் என்று படத்திற்கு டைட்டில் வைத்திருப்பது இன்றைய காலகட்டத்தில் காதல் எவ்வளவு வேகமாக முறிந்து போகிறது அதாவது நேற்று பார்க்கிறார்கள், இன்று காதலிக்கிறார்கள், நாளை பிரேக் அப் சொல்லி விடுகிறார்கள் அந்தளவுக்கு காதலின் நிலைமை தற்போது மாறி இருக்கிறது. அதைக் குறிக்கும் வகையில்தான் பிரேக் ஃபாஸ்ட் என்று இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
2000 வருடங்களுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, ஆயிரம் வருடங்களுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, நூறு வருடங்களுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய காலகட்டத்தில் காதலின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை சொல்லும் ஒரு கதையாக இது உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க பெரிய ஹீரோக்கள் யாரையும் தேடிச் செல்லவில்லை. அதேபோல் பெரிய ஹீரோயின்கள் யாரையும் தேடவில்லை காரணம் அப்படி தேடிச் சென்றால் அவர்களுக்காகத்தான் காட்சிகளை அமைக்க முடியும். அதிரடி ஆக்சன் காட்சி, நடந்தால் காலில் நெருப்பு பறக்க வேண்டும், ஒரே அடியில் 10 பேர் விழவேண்டும் போன்ற பில்டப் காட்சிகள் பெரிய ஹீரோக்களுக்கு வைக்க வேண்டும் அதெல்லாம் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்காது.
புது முகங்களாக இருந்தால் தான் இந்த கதையில் இடம்பெற்ற கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வாங்க முடியும் என்பதால் புதுமுக ஹீரோவாக ராணவ், ஹீரோயினாக ரோஸ்லின் ஒப்பந்தமானார்கள். அவர்களால் எதிர்பார்த்த நடிப்பை வழங்க முடியுமா என்பதை அறிய சூட்டிங் செல்வதற்கு முன்பே ரிகர்சல் வைத்து அதாவது ஒத்திகை காட்சிகள் படமாக்கப்பட்டு பார்க்கப்பட்டது. அது திருப்தியாக இருந்ததால் அவர்களே இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கிருத்திக் மோகன் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற
ஜீவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அதேபோல் தேசிய விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் சென்னை புதுச்சேரி, மணாலி மற்றும் கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
படம் இயக்குவதற்கு காலதாமதமானது ஏன் என்கிறார்கள். அதற்குக் காரணம் கரிகாலன் என்ற ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வந்தேன். அதற்கே ஆண்டு கணக்கில் நேரம் தேவைப்பட்டது. அந்த ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டது ஆனால் அதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால் அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கும்போது படமாக்குவேன். இந்த நிலையில் தான் தற்போது பிரேக் பாஸ்ட் படத்தை விரைவாக எடுத்து முடித்திருக்கிறேன். இப்படம் வெளியான பிறகு அடுத்தடுத்த படங்கள் இயக்க என்னிடம் 15க்கும் மேற்பட்ட ஸ்கிரிப்டுகள் தயாராக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக படமாகி வெளியாகும்.
இவ்வாறு இயக்குனர் காந்தி கிருஷ்ணா கூறினார்.
ஹீரோ ராணவ் கூறியதாவது :
இப்படிப்பட்ட ஒரு வாய்ப்புக்காக தான் நான் காத்திருந்தேன். இயக்குனர் காந்தி கிருஷ்ணா மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். இயக்குனருக்கும் எனது நடிப்பு திருப்தியை அளித்தது படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் எனது நடிப்பு பிடிக்கும்.
உங்கள் வாழ்க்கையில் பிரேக் அப் ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்கிறார்கள் அதையெல்லாம் கடந்து தான் வந்திருக்கிறேன். இந்த படம் நடிக்கும்போது என்னுடைய காதல் ஞாபகங்கள் வந்து சென்றது. இப்படம் பார்க்கும் யாராக இருந்தாலும், பிரிந்திருந்தால் நிச்சயம் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
கதாநாயகி ரோஸ்லின் கூறியதாவது:
தமிழில் எனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு இது. காதல் கதையாக இருந்தாலும் ஒரு திரில்லர் கதை பார்ப்பது போல் காட்சிகள் இருக்கும். இந்த கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது நன்றி.
இரண்டாவது ஹீரோ கிருத்திக் மோகன் கூறியதாவது :
ப்ரேக் பாஸ்ட் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு இயக்குனர் வழங்கி இருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு என்னை பலரும் அடையாளம் கண்டு கொள்வார்கள். நிறைய பட வாய்ப்புகளும் வரும் என்று நம்புகிறேன்.
இப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன..
