படம்: வானம் கொட்டட்டும்
நடிப்பு: சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின், நந்தா.
தயாரிப்பு: மணிரத்னம்
இசை:சித் ஸ்ரீராம்
ஒளிப்பதிவு:பிரீதா ஜெயராமன்
இயக்குனர்:தனசேகரன்
சரத்குமாரின் அண்ணன் பாலாஜி சக்திவேல். இவரை சிலர் கொல்ல முயல்கின்றனர். அதைகண்டு ஆவேசம் அடைந்து கொலையாளியை கொன்று விட்டு சிறை செல்கிறார். கணவர் சிறைக்கு சென்றதால் பிள்ளைகள் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷை வளர்க்கும்
பொறுப்பு தாய் ராதிகா மீது விழுகிறது. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்னையில் குடியேறும் அவர் கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறார். வளர்ந்தபின் விக்ரம் பிரபு டிரைவர் ஆகிறார் பின்னர் அந்த வேலையை விட்டு கோயம்பேடு மார்க் கெட்டில் வாழை மண்டி தொடங்கி நடத்துகிறார். தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டக்கல்லூரியில் படிக்கிறார். இந்நிலையில் ஆயுள் தண்டனை முடிந்து வெளியில் வரும் சரத்குமார் குடும்பத்தினரை காண ஆவலோடு வருகிறார். ஆனால் அவரை பிள்ளைகள் ஏற்க மறுக்கின்றனர். எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பிடிவாதமாக இருக்கின்றனர். இதற்கிடையில் சரத்குமாரை கொல்ல முயல்கிறார் நந்தா. இதன் முடிவு என்ன என்பதை உருக்கமாகவும், சென்டிமென்ட்டாகவும் சொல்கிறது கிளைமாக்ஸ்.
நடிப்பிலிருந்து விலகி அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சரத்குமார் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவர் இடத்தை அவர்தான் நிரப்ப முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வந்தோமா ஆக்ஷன் அவதாரம் எடுத்தோமா என்றில்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள தந்தையின் கதாபாத்திரம் ஏற்று உருக வைக்கிறார். மகன் விக்ரம் பிரபு, மகள் ஐஸ்வர்யா இருவருமே தன்னை அவமானப்படுத்தும்போதெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் மனதுக்குள் புழுங்குவது மனதை கலங்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் கோபித்துக்கொண்டு பிள்ளைகளே வந்து அழைக்கும் வரை திரும்ப வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வெளியேறும்போது தன்மானத் தந்தையாக கண்முன் நிற்கிறார்.
ஒன்றிரண்டு படங்கள் தவிர மற்ற படங்கள் விக்ரம்பிரபுவுக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடியதாக அமையாதது ஏமாற்றமாகவே இருந்து வந்தது. வானம் கொட்டட்டும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றிரண்டு படங்களில் ஒன்றாக இணைந்திருப்பது பிளஸ். வாழை மண்டி வைக்க வேண்டும் என்பது விக்ரம் பிரபுவின் ஆசை படாதபாடுபட்டு அந்த ஆசையை நிறைவேற்றுகிறார். அடிக்கடி கோபப்பட்டு மோதலில் ஈடுபட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடக்கிறார்.
விக்ரம்பிரபுவின் தங்கையாக வேடத்தை கச்சிதமாக செய்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கோண காதலில் சிக்கிக்கொண்டு பயணிப்பது படத்திற்கு கூடுதல் பலம். ஐஸ்வர்யாவின் சிறுவயது பள்ளி நண்பனாக சாந்தனு, ஐஸ்வர்யாவிடம் அன்புகாட்டும் மற்றொரு இளைஞராக அமிதாஷ் வருகிறார். சாந்தனு, அமிதாஷ் இருவரில் யாரை ஐஸ்வர்யா காதலிக்கிறார் என்பது காட்சிகளை சுவாரஸ்யமாக்குகிறது.
இதெல்லாவற்றையும் சரத்குமார், ராதிகா இருவருமே முக்கிய தூண்களாக இருந்து படத்தை தோளில் சுமந்திருக்கின்றனர். ராதிகாவின் பண்பட்ட நடிப்பு மீண்டும் ஒருமுறை முத்திரையாக பதியப்பட்டிருக்கிறது. மடோனா செபாஸ்டினை இதற்கு முன் இவ்வளவு சோகமாக பார்த்ததில்லை. சரத்குமாரை பழிவாங்க துடிக்கும் நந்தா இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார். இயக்குனராக இருந்து நடிகராகியிருக்கும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் ஆச்சர்யப்பட வைக்கிறார். மதுசூதனன் படத்தில் வில்லன் கிடையாது என்பது ஆறுதல்.
நாலு பைட், 2 குத்துப்பாட்ட என்று வழக்கமான பார்முளாவுடன் வராமல் காதல், குடும்ப சென்டிெமன்ட், பாசம், சோகம், அண்ணன் தங்கை பாசம் என பல பரிமாணங்களை உள்ளடக்கிய கதைக்களத்துடன் படத்தை இயக்கியிருக்கும் தனசேகரனுக்கு இதுதான் முதல் படமா என்று கேட்க வைக்கிறார். பெரிய ஸ்டார்களை சரியாக கையாண்டு ஆரம்பகால லிங்குசாமியை ஞாபகத்துக்கு கொண்டு வருகிறார்.
மயக்கும் குரலில் பாடகிகள் மட்டுமல்ல பாடகர்களாலும் ரசிகர்களை தாலாட்ட வைக்க முடியும் என்பதை படத்துக்கு படம் நிரூபித்து வருகிறார் சித் ஸ்ரீராம். இப்படத்தில் குரலில் அடியையும் உச்சத்தை தொட்டிருக்கிறார். உருக்கமான காட்சிகள் அடிக்கடி வந்தாலும் அதை இசையால் நிரப்பியிருக்கிறார். ெஜயராமின் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.
வானம் கொட்டட்டும்- காதல், பாசம் நிறைந்த இடி மின்னல்.