முதல் முறையாக நடிகர் விஷால் நடிப்பில் இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியாகிறது “சக்ரா” திரைப்படம். விஷாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் “சக்ரா” திரைப்படம் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களுல் ஒன்றாக மாறியிருக்கிறது.
நீண்ட பொது முடக்க காலத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ரவிதேஜாவின் ‘க்ராக்’ திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. அடுத்தடுத்து வெளியாகும் படங்களில் நடிகர் விஷால் நடித்துள்ள “சக்ரா” படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நடிகர் விஷாலின் படங்கள், வழக்கமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும். இம்முறை முதல்முறையாக “சக்ரா” திரைப்படம் இந்தி மொழியிலும் “சக்ரா கா ரக்சக்” எனும் பெயரில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான “சக்ரா” படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்று, வைரலாகி வருகிறது. படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பில் இந்தி திரை விநியோகஸ்தர்கள் “சக்ரா கா ரக்சக்” படத்தினை இந்தி படத்திற்கு இணையான பெரும் எண்ணிக்கை கொண்ட திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது.:
தியேட்டர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ், ஆந்திரா, தெலுங்கானா மக்கள் திரைப்படங்கள் மீது கொண்டிருக்கும் காதலும் அவர்கள் தந்துவரும் ஆதரவு மிகப்பெரியது. கடின உழைப்பில், பெரும் பொருட்செலவில் “சக்ரா” திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம். சைபர் க்ரைம் உலகினை மையமாக வைத்து உருவாகியுள்ள “சக்ரா” படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடியுள்ளார்கள். இந்தி விநியோகஸ்தர்களிடம் இருந்தும் பாராட்டு கிடைத்தது பெரும் நம்பிக்கையை தந்துள்ளது.
தற்போது சக்ரா படத்தினை இந்தி மொழியில் “சக்ரா கா ரக்சக்” என வெளியிடுகிறோம். இந்தி மொழி ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சைபர் க்ரைம் உலகை மையப்படுத்தி, திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “சக்ரா” படத்தினை விஷாலின் Vishal Film Factory நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் M.S. ஆனந்தன் எழுதி இயக்கியுள்ளார். விஷால், ஷ்ரதா ஶ்ரீநாத், ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிருஷ்டி டாங்கே, மனோபாலா ரோபோ சங்கர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிக விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இத்திரைப்படம்.