பெத்த மனசு…
இசைஞானி இளையராஜா இசையமைத்த அழகி படத்தில் “ஒரு சுந்தரி வந்தாளா ..” என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார் சொற்கோ கருணாநிதி. தொடர்ந்து, “மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தில் ‘ஹர ஹர மஹாதேவகி..”
“திரு மாணிக்கம்” படத்தில் ” வானம் தேம்பி அழுது நின்றாளே பூமி தாங்கி பிடிக்குமோ.. ” என பல்வேறு பாடல்களை 75க்கும் மேற்பட்ட படங்களில் எழுதி இருக்கிறார்.
இளையராஜா- சுஜாதா இணைந்து 1995 ஆம் ஆண்டு நடத்திய திரைப்பட பாடலாசிரியருக்கான போட்டியில் முதல் பரிசாக தங்க பேனா பெற்றவர் முனைவர் சொற்கோ கருணாநிதி
மேலும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை திரையுலகம் கொண்டாடியபோது அதற்கு பாடல் எழுதி இசையமைத்து அரங்கேற்றி இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதன் விருது பெற்றவர். சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியில் தமிழ் துறையில் இணை பேராசிரியராக பணிபுரிகிறார்.
அஜித் நடித்த திருப்பதி, விஜய் நடித்த சிவகாசி, தங்கர் பச்சான் நடித்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் .
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க (TMJA) தீபாவளி மலருக்காக தாய்மையின் நெகிழிச்சியை வெளிப்படுத்தும் “பெத்த மனம்” என்ற உருக்கமான சிறப்பு கவிதை எழுதி அளித்த
தார். அந்த கவிதை இதோ…
பெத்த மனம்..
பட்டினியா இருக்கானோ!
பசியாற தின்னானோ
சாலைகளில் நெரிசல்களை
சமாளிச்சு வருவானோ?
காலையிலே கிளம்பியவன்
கால் பார்த்து நடப்பானா?
தூங்கி இருப்பானோ
துணியைத் துவைப்பானோ?
ஏங்கிடும் எம்மனசு
எப்பத்தான் நெனப்பானோ?
வெள்ளந்தி என்பிள்ளை
வெற்றி பெறுவானா?
பொல்லாத வையத்தில்
பொருள் சேர்த்து வருவானா?
அவன் தின்ன தட்டுபாயி
அவனப் பார்த்துக் கெடப்பதென்ன
அவன் நெனப்பில்
என் மனசு
அலைபாஞ்சி நடப்பதென்ன
மூட்டைப்பூச்சு கொசுவைக் கூட
மோதி அவன் அடிக்க மாட்டான்
காட்டுப்பய எம்புள்ள
கருணையுள்ள மவராசன்!
வீட்டு நெனப்பில்லாம
விலகிப் போய் இருக்கானே
பாட்டெழுதி வந்தானே
பாட்டில்எனை எழுதுவானா?
கல்லத்தான் பெத்திருந்தா
காலடியில் கெடந்திருக்கும்
தொல்லய நான் பெத்ததாலே
தூரமாபோய்த் திரியறானே
பட்டணத்து வண்டியெலாம்
பாக்கயிலே எம்புள்ள
பெட்டியோடு வருவதாகப் பேசாம பார்த்திருப்பேன்
பக்கத்தில் இல்லாமப்
பலதூரம் போயிருக்கான்
கக்கத்தில் அவனிருந்த
காலத்த நெனச்சுக்குவேன்
கவிதை பெற்று வழங்கியவர்
க. ஜெயச்சந்திரன்
Trending cinemas now.com
(web site)
