Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி மகள் இயக்க, கண்ணன் ரவியின் ‘டெக்ஸ்லா’ பட தொடக்க விழா..

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம். தமிழ் குமரன், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி தயாரிப்பாளர்களும், நட்சத்திர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், ” பொதுவாகவே மேடையில் பேசுவது என்றால் சிறிது அச்சமும், தயக்கமும் இருக்கும். அதிலும் இங்கு எனக்கு முன்னால் சிற்பிகளும், பிரம்மாக்களும் அமர்ந்திருக்கிறார்கள். திரைத்துறையை பொறுத்தவரை நான் சின்னவன் தான். பிசினஸ் என்றால் தலைக்கனத்துடன் பேசுவேன். ஆனால் சினிமா என்றால் நான் எல்கேஜி தான்.  சினிமாவிற்கு திரையுலகினர் – ஊடகங்கள் – மக்கள் – ரசிகர்கள்-  ஆகியோரின் ஆதரவும், ஆசியும் தேவை.

இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக திகழும் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இவ்வளவு விரைவாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறமையான பெண். இவ்வளவு அன்பாகவும், கனிவாகவும் இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. அதற்கு என் வாழ்த்துக்கள். டெக்ஸ்லா படமும் சிறப்பாக வரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக என்னுடைய சகோதரர் சுராஜ். சிறந்த கலைஞர். அவருடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு தவறியது. இந்த படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் சிறந்த நண்பர். கலைஞர். ஜெய், அனிருத் உள்ளிட்ட இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப் பயணம் தொடரும்” என்றார்.

திரு சீமான் பேசுகையில், ”ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் டெக்ஸ்லா படத்தின் தொடக்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது வாழ்த்துகள். இங்கு ஒரு படம் தயாரிப்பதற்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரியும். ஆனால் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரே நேரத்தில் 16 திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமா மீது வைத்திருக்கும் பேரன்பையும், பெரும் காதலையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அவரது தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்து இந்த படத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதில் நடிக்கும் நடிகர்களுக்கும், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ஒரு வெற்றி என்பது பலருடைய வாழ்க்கையில் பெரும் கொண்டாட்டமாக அமைந்து விடுகிறது. எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு தேவை கடுமையான உழைப்புதான். கடுமையாக உழைக்கக்கூடிய கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ” என்றார் .

இயக்குநர் பாலா பேசுகையில், ” என்னுடைய முதல் வாழ்த்து தங்கை ஐஸ்வர்யாவிற்கு. அடுத்ததாக அவருக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களுக்கு.  அவர் ஒரே நேரத்தில் 16 படங்கள் அல்ல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி சொன்னது போல் நல்ல படங்களை தயாரிக்கலாம்.‌ 16 படங்களை தயாரிப்பதன் மூலம் பல குடும்பங்களுக்கு அவர் வாய்ப்பளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் -யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், ”வாழ்த்துகள். அற்புதமான தொடக்கம். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் திரையுலகமே திரண்டு கலந்து கொண்டிருக்கும் படத்தின் பூஜை இது. அண்மைக்காலமாக எல்லா திரைப்பட விழாக்களும் சுருங்கிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் படத்தின் வெற்றி விழாவாக இருக்கட்டும் படத்தின் தொடக்க விழாவாக இருக்கட்டும் எல்லோரும் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

நேற்று அவருடன் பயணித்த அனுபவம் மறக்க முடியாதது. அதிலும் அவருடன் உரையாடிய போது, ‘நிறைய சம்பாதிக்கிறோம். அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வைத்து விடுவேன்’ என்று சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய இந்த மனதிற்காகவே அவர் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும். தயாரிப்பார்.‌ வாழ்த்துகள். ” என்றார்.

நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், ” இந்தப் படத்தின் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் மிக நன்றாக இருக்கிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி நண்பர் தான். அவரை சந்தித்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரையும் அவரது மனைவி மற்றும் தீபக்கையும் சந்தித்து இருக்கிறேன். அவருடைய விருந்தோம்பல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மிகவும் உண்மையான மனிதர். அவருடைய தயாரிப்பில் அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நன்றி” என்றார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், ” இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நல்லதொரு தொடக்கம். என் மீதும் என்னுடைய குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களுக்கும் நன்றி. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் வெற்றிக்காக அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்க உள்ளோம்” என்றார்.

நடிகர் ஜெய் பேசுகையில்,” என்மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி. தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்திருக்கிறேன். அப்போதே அவர் நாம் இருவரும் இணைந்து பணியாற்றலாமா? என அவர் கேட்டிருக்கிறார். அப்போது நான் இருந்த நிலையில் எதற்கு ரிஸ்க்? என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன் சந்தித்த போது கூட.. நான் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என சொல்ல விரும்பினேன். ஆனால் அதற்குள் உனக்கான வளர்ச்சி என்னுடைய படத்தின் மூலம் கிடைக்கட்டும் என்று சொல்லி நம்பிக்கையுடன் இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். அதனால் என்னுடைய எல்லா கடின உழைப்பையும் இப்படத்திற்காக வழங்குவேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வார்கள். ஆனால் தயாரிப்பாளரின் எண்ணத்தை பார்த்தால் வாழ்க்கை சிறியது போல் தோன்றுகிறது. அவருக்கு அவ்வளவு பெரிய மனது.  அதை நான் நேரடியாக பார்த்து வியந்து இருக்கிறேன். திரைத்துறையில் அவர் மேலும் பல உயரங்களை தொட வேண்டும் என விரும்புகிறேன். இன்னும் ஏராளமானவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்றார்.

Related posts

Superstar Wished the Director Rajamouli for his Great Win

Jai Chandran

கமல் விடுத்த கோரிக்கை துணை முதல்வர் உதயநிதி பதில்

Jai Chandran

பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend