படம்: பேய் மாமா
நடிப்பு:யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், எம் எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, ரேகா,கோவை சரளா, மாளவிகா மேனன், ரேஷ்மா,
தயாரிப்பு: விக்னேஷ் ஏலப்பன்
இசை:ராஜ் ஆர்யன்
ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர் செல்வம்
இயக்கம்: ஷக்தி சிதம்பரம்
100 ஏக்கர் நடுவில் அமைந்திருக்கும் பட்டுமலை பங்களாவில் வசிக்கும் குடும்பம் பாரம்பரிய வைத்திய முறைப்படி நோய்களை குணமாக்குகின்றனர். அந்தப் பகுதியில் மூலிகைகள் நிறைந்திருப்பதால் பங்களாவையும் அந்த இடத்தையும் வாங்க கார்ப்ரேட் நிறுவனம் முயல்கிறது.அதை நூறு கோடிக்கு விற்க ஒருவன் திட்டம் போட மற்றொரு டாக்டர் அந்த பங்களாவை தங்களுக்கு விற்கும்படி கேட்கின்றனர். ஆனால் தரமறுக்கப்படுகிறது. யாராவது பங்களாவை வாங்க வந்தால் அதில் பேய் இருப்பதாக கூறி டாக்டர் விரட்டுகிறார். இந்நிலையில் அந்த பங்களாவுக்கு யோகிபாபுவும் அவரது குடும்பமும் வருகிறது. நிஜத்திலேயே அந்த பங்களாவில் பேய் இருப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிக்க எண்ணுகின்றனர். இந்நிலையில் அந்த பேய்கள் நேரில் தோன்றி தங்களை பேராசை பிடித்த ஒருவன் கொலை செய்த சம்பவத்தையும் அவனை பழி வாங்க உதவுமாறும் கேட்கின்றன. அதை யோகி பாபு ஏற்றுக்கொள்கிறார். அடுத்து சூரசம்ஹாரம் நடக்கிறது.
கலகலப்பான பேய் கதையை கையில் எடுத்து அதை அதன் போக்கில் இயக்கி கவலைகளை மறக்கச் செய்திருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
யோகிபாபுவும் அவரது குடும்பத்தினரும் பேய் ஓட்டும் மந்திரவாதிகளாக பட்டுமலை பங்களாவுக்குள் நுழைகின்றனர்.முதலில் பேய் இல்லை என்று எண்ணும் யோகி பாபு பிறகு பேய் நடமாட்டம் இருப்பதை கண்டு நடுங்குகிறார்.
பங்களாவிலிருந்து தப்பிக்க முயலும் போது அதை பேய்கள் தடுக் கின்றன.சீனியர் பேய் எம் .எஸ். பாஸ்கர், யோகிபாபு முன் தோன்றி தங்களை சொத்துக்காக கொன்றவனை பற்றி சொல்லி யோகிபாபு மூலமாக அவனை பழிவாங்க எண்ணுவதாகவும் கூற, அதைக்கேட்டு பரிதாபப்பட்டு அதற்கு யோகிபாபு ஒப்புக்கொண்டதும் அடுத்து அதிரடி ஆரம்பமாகி விடுகிறது.
பங்களாவுக்குள் நுழைபவர்களை பாய்ந்து பறந்தும் யோகிபாபு தாக்கி விரட்டி சண்டை காட்சிகளில் வலு காட்டுகிறார்.
’நான் விஜய் அஜீத் மாதிரி ஹீரோ கிடையாது காமெடியன்தான். டம்மி பீஸ்தான்’ என்று தன்னைப்பற்றி யோகிபாபு தன்னிலை விளக்கம் அளித்து தனது காமெடி இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார்.
யோகிபாபு குடும்பம் ஒரு பக்கம் ரகளை செய்ய பேய்களாக வரும் மொட்டை ராஜேந்திரன், ரேகா இருவரும் அடிக்கும் கொட்டம் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கிறது.
புன்னகை மன்னன் பாணியில் மொட்டை ராஜேந்திரனுடன் ரேகா செய்யும் அலம்பல் கலகல.
பேய்களை அடக்கி குடுவைக்குள் அடைக்கும் மந்திரவாதியாக கோவை சரளா வருகிறார். கோவை சரளாவின் காமெடி கதாபாத்திரத்தை ரேகா அபேஸ் செய்திருக்கிறார்.
சமூக படங்களை இயக்கி வந்த ஷக்தி சிதம்பரம் பேய் கதையையும் இயக்க முடியுமென்று நிரூபித்திருக்கிறார். ஆங்காங்கே விட்டாலாச்சாரியா வித்தைகளையும் கையாண்டு குழந்தைகளை கவர்கிறார்.
எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவும், ராஜ் ஆர்யன் இசையும் திடீர் பயமுறுத்தல்கள் செய்யாமல் காட்சிகளை கையாண்டிருப்பது படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவி இருக்கிறது.
பேய் மாமா- ஜாலியாக சிரித்து விட்டு வரலாம்.

