படம்:மறக்குமா நெஞ்சம்
நடிப்பு: ரக்ஷன் , மெலினா, தினா, ராகுல், முனிஷ் காந்த், சுவேதா, முத்தழகன், மெல்வின், அருண் குரியன், அகிலா அஷிகா காதர், நடாலி, விஸ்வத்
தயாரிப்பு: ரகுலெலரு, , ரமேஷ் பஞ்ச குன்னுலா, ராகோ யோகேந்திரன் ஜனார்தன் சவுத்ரி,
ஒளிப்பதிவு: கோபி
இசை: சச்சின் வாரியர்
இயக்கம்: ராகோ யோகேந்திரான்
பி ஆர் ஒ: சதீஷ்குமார்
பள்ளியில் படிக்கும் கார்த்தி (ரக்ஷன்) தன் வகுப்பில் படிக்கும் பிரியதர்ஷினியை ( மெலினா). கண்டதும் காதல் கொள்கிறான். ஆனால் அவளிடம் தனது காதலை சொல்ல தயங்கி நட்பு ரீதியாகவே பழகுகிறான்.
இப்படியே பள்ளி முடிந்து அனைவரும் தங்கள் வாழ்க்கை யை முன்னோக்கி நகர்த்தி சென்று விடுகின்றனர். 10 வருடம் கழித்து கார்த்திக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கிறது. மீண்டும் அவர்கள் பள்ளியில் இணைந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அதற்காக கார்த்திக் மற்றும் பிரியதர்ஷினி பள்ளிக்கு திரும்புகிறார்கள். இரண்டாவது முறையாக கிடைத்த இந்த வாய்ப்பிலாவது பிரியதர்ஷி னியிடம் தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று கார்த்திக் துடிக்கிறான். அவனால் சொல்ல முடிந்ததா? பிரியதர்ஷினி அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா? என்பதற்கு கிளைமாக்ஸ் ஒரு சுவாரஸ்யமான பதிலை அளிக்கிறது
கார்த்திக்காக ரக்சன் நடித்திருக் கிறார் . பிரியதர்ஷினியாக மெலினா நடித்துள்ளார்.
படம் தொடங்கியதும் பள்ளிக்கூடம், காதல் என்று செல்லாமல் நேரடியாக ரக்சன் தனி நிறுவனம் தொடங்கி நடத்துவதை காட்டியதும் இது ஏதோ ஐடி கம்பெனி கதையாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால் காட்சிகள் நகர நகர நம் நினைவெல்லாம் பள்ளி பருவத்தை நோக்கி சென்று விடுகிறது. பழைய நண்பர்கள், நண்பிகள், முன்னாள் காதலிகள், முன்னாள் சைட்டுகள் என்று எல்லாம் கண்முன் நிழலாட தொடங்கி விடுகிறது.
ரக்சன் மீண்டும் பள்ளிக்கு சென்று பரீட்சை எழுத வேண்டும் என்ற தகவலை கேள்விப்பட்டதும் அதை அவமானமாக கருதாமல் தன் பழைய நட்புகளை பார்க்க கிடைத்த சந்தர்ப்பமாக கருதி பழைய சூட்கேசும் கையோடு எடுத்துச் செல்வதெல்லாம் 90ஸ் மட்டும் அல்ல 80ஸ் கிட்ஸ் களையும் கவரும்.
பள்ளிக்குள் ரக்சன் உள்ளிட்ட நட்புகள் நண்பர்கள் தோழிகள் வந்ததும் காட்சிகள் களைக்கட்ட தொடங்குகின்றன.
தான் காதலித்த பிரியதர்ஷினி அதாவது மெலினா பள்ளிக்கு வருவாரா? வரமாட்டாரா என்று எதிர்பார்ப்பதும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முதல் காட்சியில் தாமதமாக வந்தது போல் இந்த காட்சியிலும் தாமதமாக வந்து ரக்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் மெலினா.
தன்னுடைய பழைய சூட்கேஸை திறந்து அதில் 90ஸ் கிட்ஸ்களின் விளையாட்டு பொருள் போன்ற வற்றை காட்டி ரக்சன் அரங்கில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்.

மெலினாவுக்காக ரக்சன் காத்திருந்த வருடங்கள் எல்லாம் வீணாகி போய் விடுமோ என்ற பதற்றம் ஒவ்வொரு சீனுக்கும் இயக்குனர் கொண்டு வந்திருப்பது காட்சிகளை பரபரப்பாகிறது.
மெலினாவுக்கு திருமணம் ஆகி விட்டதா, அவருக்கு குழந்தை பிறந்து விட்டதா அல்லது திருமணம் ஆகாமல் இன்னும் இருக்கிறாரா என்ற பரபரப்பு ரக்ஷனுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் உண்டாகிறது.
ஆனாலும் அதில் ஒரு இக்கு வைத்து இந்த காதல் என்ன ஆகுமோ என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பதபதகைக்க வைக்கிறார் இயக்குனர்.மெலினாவுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்ற அந்த ஒரு வார்த்தை பக் என்று ஆக்குகிறது.
அவர் யாரையாவது திருமணம் செய்து கொண்டாலும் பரவாயில்லை அதற்கு முன்பு எனது காதலை சொல்லியே தீர்வேன் என்று ரக்சன் ஒரு முடிவெடுத்து மெலினாவிடம் தன்னுடைய காதல் கடிதத்தை கொடுக்கும் காட்சியில் திடீரென்று வந்து நிற்கும் மெலினாவின் எதிர்கால கணவர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி தருகின்றனர்.
மெலினா அவசரப்படாமல் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக நடித்திருப்பதுடன் அழகாகவும் இருக்கிறார்.
ரக்சன் நண்பர்களாக வரும் தீனா, ராகுல் போன்றவர்கள் காட்சிகளை மெருகேற்றுகின்றனர். குறிப்பாக பிராங் ராகுலின் அந்த சஸ்பென்ஸ் கிளைமாக்சில் உடையும்போது மனதில் ஒரு பரவசம். படர்கிறது.
பி டி வாத்தியாராக வரும் முனிஷ்காந்த் முரட்டுத்தனமாக மாணவர்களை விரட்டுவதும் பின்னர் அவருக்குள் ஒளிந்திருக்கும் காதலை வெளிப்படுத்தும்போது குழந்தை போல் அழுவதுமாக மனதை நெகிழ வைக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் எல்லா கதாபாத்திரங்களும் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தி ருப்பதால் . 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் நாமும் ஒரு அங்கமாக மாறிவிட்டதாகவே ஒரு உணர்வு ஏற்படுகிறது.
இப்படத்தை ரகு யெல்லரு, ரமேஷ் பஞ்சகுனுள்ள ஜனார்த்தன் சவுத்ரி ராக்கோ யோகேந்திரன் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ராக்கோ யோகேந்திரன். காதல் எல்லாம் உணர்வுகள் இல்லாமல் வெளிப்படுத்த முடியாது. தன் பள்ளி பருவத்தில் நடந்த உணர்வுகளை கொஞ்சமும் உணர்வு குறையாமல் சுவை குறையாமல் படத்தில் கொண்டு வந்திருக்கிறார் இதை எப்படி நெஞ்சம் மறக்கும்.
கன்னியாகுமரியை இதுவரை கடலாகவும் சூரியன் உதிக்கும் இடமாகவும் வள்ளுவர் சிலையாகவும பார்த்துக் கொண்டிருந்தோம் ஆனால் கழுகு பார்வையில் பார்த்தால் கன்னியாகுமரி எவ்வளவு ஒரு இதமான இயற்கை புதையல் என்பதை இப்படத்தில் கண்கொள்ள காட்சியாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி.
சச்சின் வாரியர் இதமான இசையமைத்திருக்கிறார்.
மறக்குமா நெஞ்சம் – மறக்காது கொஞ்சமும்.

